இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
இனி செல்லாது என்று
ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்தே
கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
இந்தமுறை அவகாசம் கொடுத்திருக்கிறார்கள் தான்
இல்லையென்று சொல்லவில்லை
ஆனாலும்
எப்போது எந்த அறிவிப்பு வருமென்று
யாருக்குத் தெரியும்
மக்கள் நலனே முக்கியமென்று
எப்போதும் நினைக்கின்ற
ஆட்சியாளர்கள் இருக்கும்போது
எப்படியாவது மக்களுக்கு
நல்லது செய்யவேண்டும் என்று
துடித்துக் கொண்டிருக்கும்
ஆட்சியாளர்கள் இருக்கும்போது
மக்களுக்காக மக்களின் நலனுக்காக
அறிவிக்கப்படும் எல்லாவற்றையும்
கடைப்பிடித்துத்தானே ஆகவேண்டும்
இதோ நம் தேசத்தில்
கறுப்புப் பணம்
முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் என்ன?
இதோ நம் தேசத்தில்
பயங்கரவாதம்
சுத்தமாகத் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் என்ன?
இதோ நம் தேசம் முழுவதும்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கணக்கில் வராத கோடிகளெல்லாம்
மீட்கப்பட்டிருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் என்ன?
இதோ நம் தேசத்தில்
ஊழலின் ஊற்றுக்கண்கள்
உறுதியாக அடைக்கப்பட்டிருக்கிறதென்றால்
அதற்குக் காரணம் என்ன?
இதோ நம் தேசத்தில்
பணக்காரர்கள் எல்லாம்
பணத்தைப் பதுக்கி வைக்காமல்
கொஞ்சமும் வரிஏய்ப்பு செய்யாமல்
பரிசுத்தப் பிறவிகளாய் மாறியிருக்கிறார்களென்றால்
அதற்குக் காரணம் என்ன?
இதோ நம் தேசத்தில்
பொருளாதாரச் சமமின்மை ஒழிக்கப்பட்டு
பாலும் தேனும் பாய்ந்தோடுகிறதே
அதற்குக் காரணம் என்ன?
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட
பணமதிப்பிழப்பை
பயபக்தியோடு நாம்
கடைப்பிடித்ததுதான் காரணம்
என்ன? என்ன? என்ன?
கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா
லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்திருந்திருக்கிறார்களா
சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டனவா
வாழ்விழந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா
என்ன சொல்கிறீர்கள்
பெரும்பணக்காரர்கள் எல்லாம்
நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களே
நாலா திசைகளிலிருந்தும் லாபம் கொட்டுகிறது என்று
நன்றி தெரிவிக்கிறார்களே
அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு
பலமடங்கு அதிகரித்திருக்கிறதே
உங்களுக்கு பார்வைக் குறைபாடாக இருக்கலாம்
இந்த தேசத்தின் வளர்ச்சியை
விரும்பாதவர்களாக இருக்கலாம்
இல்லை இல்லை
நீங்கள் தேசவிரோதிகளாத்தான் இருக்கவேண்டும்
ஆனால் நான் அப்படியல்ல
என்னுடைய தேசத்தை எப்போதும் நேசிப்பவன்
அதனால்தான் அதனால்தான்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வந்ததிலிருந்து
அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்
அலுவலகம் முழுக்கத் தேடிப்பார்த்துவிட்டு
வீட்டிலும் போய்த் தேடிப்பார்த்தேன்
துவைக்கப் போட்டிருந்த துணிகளிளெல்லாம்
தேடிக்கொண்டிருக்கும் போது
யார்மீது என்ன கோபத்தில் இருந்தாளோ தெரியவில்லை
வெடுக்கென்று பிடுங்கிப்போனாள் மனைவி
எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன்
என் அன்பிற்குரிய
ரிசர்வ் வங்கியின் கவர்னரே
என்னை மன்னித்து விடுங்கள்
உங்கள் அறிவிப்பைக்
கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து
கருப்புப் பணத்தை ஒழிப்பதிலும்
ஊழலை இல்லாமல் ஆக்குவதிலும்
உங்களோடு இணைந்துகொள்ள நினைத்தேன்
ஆனால் துர்பாக்கியமாக
அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
என்னிடம் ஒன்றுகூட இல்லை
அதுமட்டுமல்லாமல்
நேற்றிலிருந்து நிறையப் பேரிடம் கேட்டுப்பார்த்தேன்
இல்லையென்றுதான் சொன்னார்கள் எல்லோரும்
தள்ளுவண்டியில் பழம் விற்பவரிடம் கேட்டேன்
நாகரீகம் கருதி
அவர் சொன்னதைச் சொல்ல விரும்பவில்லை நான்
ஆனபோதிலும்
என்னுடைய கேள்வியெல்லாம்
யாருக்காக அச்சடிக்கிறீர்கள்
யாருக்காக விநியோகிக்கிறீர்கள்
யாருக்காகத் திரும்பப் பெறுகிறீர்கள்?
2 comments
“பாக்கியமாக … அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு, என்னிடம் ஒன்றுகூட ஒன்றுமில்லை” அதனால் யாருக்காகவோ நடத்தப்பட்ட இந்த பணவேட்டையில் எனக்கு பங்கில்லை என்று என்னால் சொல்லிவிடவும் முடியவில்லை. நான் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் என்னிடம் இல்லாது போன அந்த இரண்டாயிரம் ரூபாய்க்கான பிருசுகள் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் எப்படியும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைப் பெறவும் செலவழிக்கவும் முடியாதவனாக இருந்திருக்கிறேன். அடப்பாவிகளா? எதையும் எங்களுக்காக செய்யாத நீங்கள் எதை எதையோ செய்வதாகச் சொல்லிக்கொள்வதை மட்டும் தவறாமல் செய்கின்றீர்கள். ஆகட்டும் இயற்கையும் இயக்கமும் ஒன்றுபடும் ஒருநாளில் நீங்கள் இல்லாமல் போக நேரிடும். அந்நாளைத்தான் நானும் என் போன்றவர்களும் கொண்டாடக் காத்திருக்கிறோம். (உணர்வுக்கான வெளியான கவிதையுடன் இணைகிறேன் தோழர்) நன்றி
இரண்டாவது பணமதிப்பிழப்பின் நுழை வாயிலில் முதல் பணமதிப்பிழப்பின்
கொடுமைகளை நையாண்டியாய் அடுக்கிப் படம் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
இறுதியில் இந்த ஒன்றிய அரசு யாருக்காக இருக்கிறது? யாருக்காக செயல்படுகிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல
விவரிக்கிறார்.
இது போதாது அல்லவா?
இந்த அரசு யாருக்கானது என்பதைப் புரிந்து கொள்வதும் புரிய வைப்பதும் காலத்தின் அவசியம்.
படியுங்கள்
பரப்புங்கள்.