காஸாவின் அவலத்தைச் சொல்லும் மேற்கண்ட ஓவியம் துனீசியாவைச் சேர்ந்த ஓவியர் உமர் எஸ்டர் வரைந்தது.
குத்திக் கிழிக்கப்பட்ட
துண்டு துண்டாக வெட்டப்பட்ட
முற்றும் முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட
இராணுவ வாகனங்களால் நிர்மூலமாக்கப்பட்ட
காஸாவின் பேரழிவை
காஸாவின் கண்ணீரை
காஸாவின் துயரத்தை
காஸாவின் அவலக் காட்சிகளை
கண்களால் அல்ல
வெறும் கண்களால் அல்ல
இதயத்தைத் திறந்து பாருங்கள்
கண்களுக்குப் பார்க்கத்தான் தெரியும்
உணர்வதற்கு இதயமே வேண்டும்
இதயத்தால் மட்டுமே
உணர்ந்துகொள்ள முடியும்
கண்களைத் திறந்தால்
எல்லாவற்றையும் பார்க்கலாம்
இதயத்தைத் திறந்தால் மட்டுமே
உண்மையைப் பார்க்க முடியும்
உண்மையைப் பாருங்கள்
மனிதன்
இயற்கையை மிஞ்சக்கூடியவன் என்பதை
நிரூபித்துக் காட்டியிருப்பதைப் பாருங்கள்
பூகம்பத்தால்
ஏற்படும் பேரழிவைக் காட்டிலும்
பெருவெள்ளத்தால்
ஏற்படும் பேரழிவைக் காட்டிலும்
போரினால்
ஏற்படுத்தப்படும் பேரழிவு
பார்க்க முடியாததாக இருக்கிறது
பார்க்கச் சகிக்கமுடியாததாக இருக்கிறது
யுத்தமென்பது இதுவா
முட்டாள்களே
யுத்தமென்பது இதுவா
அற்பர்களே
யுத்தமென்பது இதுதானா
வெறியர்களே
மின்சாரம் துண்டிக்கப்பட்ட
மருத்துவமனைகளில்
இறந்தே பிறக்கின்றன
ஏராளமான குழந்தைகள்
தாயின் கருவறையிலிருந்து
கல்லறைக்குச் செல்ல வேண்டிய
அந்தப் பிஞ்சுகளை
அந்தத் தளிர்களை
நினைக்க நினைக்க
நெஞ்செல்லாம்
நெருப்பாய்க் கொதிக்கிறது
பாழாய்ப்போன யுத்தம்
வருமென்று தெரியாமல்
இத்தனைநாள் அவர்களைச்
சுமந்து கொண்டிருந்த
ஒவ்வொரு தாயையும்
நினைக்க நினைக்க
இதயத்தின் பாரம்
இன்னும் கூடுகிறது
தூக்கமில்லாத இரவுகள்
இன்னும் எத்தனைநாள் தொடரும்
நிம்மதியில்லாத நாட்கள்
இன்னும் எத்தனைநாள் நீளும்
உலகத்தின்
ஒவ்வொரு நீதிமானையும்
முகத்திற்கு நேராகக்
கேட்க விரும்புகிறேன்
இத்தனை குழந்தைகளைக்
கொன்று குவித்த பிறகும்
இத்தனை பேரழிவை
அரங்கேற்றிய பிறகும்
அந்தப் போர்வெறியர்களை
அந்தப் போர்வெறியர்களை
அந்த மானுட விரோதிகளை
அந்த மானுட விரோதிகளை
என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
ஜோசப் ராஜா
2 comments
மானுட விரோதிகளான போர் வெறியர்கள் நிகழ்த்தும் படுகொலைகளின் ஆறாத ரணத்தின் விளைவாக கவிஞர் ஜோசப் ராஜா கவிதைகளைப் பொழிந்து கொண்டே இருக்கிறார்.
நம்மால் முடிந்தது அதை வாசிப்பதும் கழிவிரக்கம் கொள்வதோடு நின்றுவிடாமல் அவரவர்க்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி மானுடம் காக்க ஆயத்தமாவீர்.
மானுடம் மறந்த அவர்களால் உயிர் குடிக்கும் போர் வெறியை போக்கிகொள்ள முடியாதது உண்மைதான். மனித சக்தியால் – கூட்டுணர்வால் அவர்களை அமைதியடையச் செய்ய போராட வேண்டும். அதற்கு மனிதர்கள் பலர் இன்னும் சுயநல போராட்டத்திலிருந்து வெளிவர வேண்டும். அதற்காகவும் போராட வேண்டும். போராடுவோம் தோழர்