இசைகேட்ட மறுகணம்

இசை

இதயத்திற்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது

இசை

இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது

இசை

அழைத்துச் செல்கிறது

இசையோடு

சென்று கொண்டிருக்கிறேன்

என் கால்களில்

சக்கரங்கள் முளைக்கின்றன

என் கைகளிலிருந்து

சிறகுகள் வெளிப்படுகின்றன

இதயம்

இன்னும் இன்னுமாய் வலுவேறிக் கொண்டிருக்கிறது

இதோ பனியுணர்கிறேன்

நீரோடைகளில் கால் நனைக்கிறேன்

கூழாங்கற்களைப் பொறுக்கி விளையாடுகிறேன்

மேகங்களை விலக்கி நடந்து செல்கிறேன்

புல் சறுக்குகிறேன்

வானத்தை அண்ணாந்து பார்த்தபடி

மலையுச்சியில் படுத்திருக்கிறேன்

வீட்டிலிருக்கும் மனைவியை

அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன்

அவளைப் பற்றிய ஞாபகங்கள்

ஓயாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன

தனிமையில் இருப்பதால்

இந்த உலகத்தின் துன்பதுயரங்கள்

இதயத்தை நிறைத்துக் கொள்கின்றன

நினைக்கநினைக்க கோபம் கொப்பளிக்கிறது

இப்படியே இப்படியே

இசையோடு நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

துயரப்படுகிறவர்களுக்காக இரங்குகிறேன்

தூய்மையான ஒலியோடு கரைந்து போகிறேன்

இறுதியாக

இறுதியாக

கடவுளை ஒத்துக் கொள்கிறேன்

உண்மைதான்

இசையைத் தவிர

வேறு எதுவுமே கடவுளாக இருக்க முடியாது

இசையைத் தவிர

வேறு எதுவுமே கடவுளாக இருக்க முடியாது

அவன் இசைவடிவானவன் அல்ல

அவன் இசைதான்

இசைதான் அவன்

 

 

நன்றி :-

Call Of The Valley – இசைக்கும், இசைக் கலைஞர்களுக்கும் . . .

Related Articles

1 comment

Baskaran F T 20/01/2023 - 6:24 PM

இசையும் உலகமும் இவ்வளவு அழகானது உந்தன் கவிதை வரிகளால் தோழரே……

Reply

Leave a Comment