இங்கே தனிச்சொத்து இல்லை – ஐசென்ஸ்டீன்

சென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் இப்போதும் கூட ஐசென்ஸ்டீனின் படங்களும், அவர் பயன்படுத்திய யுத்திகளும் பாடமாகக் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் ஐசென்ஸ்டீன் என்று பேச்செடுத்தாலே அவர் இந்த உலகத்திற்குக் கொடுத்த மாண்டேஜ் உத்திகள்தான் ஞாபகத்திற்கு வரும்.

ஐசென்ஸ்டீன் வெறும் மாண்டேஜ் காட்சிகளின் தந்தை மட்டுமா? புரட்சிகர சினிமாவின் தந்தையும் அவர்தானல்லவா! பொட்டம்கின் போர்க்கப்பலும், அக்டோபர் திரைப்படமும் போகிறபோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல. புரட்சியைக் காட்சிப்படுத்த முயன்ற பெருமுயற்சி. புரட்சியைக் காட்டிவிடத் துடித்த பெருந்துடிப்பு. புரட்சியைத் திரையில் வெளிப்படுத்த நினைத்த பெரும்பாய்ச்சல். இவைகள்தான், இவைகளெல்லாமும் தான் ஐசென்ஸ்டீனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பெரியவற்றை முயற்சிக்கும் போதுதான் புதியவற்றை நம்மால் உருவாக்க முடியும். உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற பெரும்புரட்சியைப் படமாக்க முயற்சித்தார், மாண்டேஜ் போன்ற எத்தனையோ புதுமைகளைக் கண்டுபிடித்தார்.

புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் 1898 ஆம் ஆண்டு பிறந்த ஐசென்ஸ்டீன், புரட்சிக்கு பின்னர் 1918ல் செஞ்சேனையில் சேர்கிறார். செஞ்சேனை வீரர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கும் வேலையைச் செய்கிறார். 1920 ல் மாஸ்கோவில் இருக்கும் மக்கள் திரையகத்தில் உதவி இயக்குநராக இணைகிறார். மாண்டேஜ் பற்றிய மிகமுக்கியமான கட்டுரையை அங்கிருந்துதான் எழுதுகிறார். பின்னாளில் அதன் அடிப்படையில்தான் மாண்டேஜ் காட்சிகளை திரைப்படத்தில் பயன்படுத்துகிறார். சோவியத் புரட்சியின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்திற்காக செஞ்சேனையின் சார்பில் புரட்சியைப் படமாக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற ஜான் ரீட் எழுதிய புரட்சியின் முக்கியமான ஆவணமான புத்தகத்தை அடிப்படையாக வைத்து அக்டோபர் படத்தை இயக்குகிறார். அந்த யுகப்புரட்சியைப் பக்கத்திலிருந்து பார்க்கப் பாக்கியம் கிடைக்காத உலகத் தொழிலாளர்கள் ஐசென்ஸ்டீனின் திரைப்படத்தின் வழியாக பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்.

சோவியத்தில் நடந்த மாபெரும் அந்த மாற்றத்தை எப்படி கார்க்கியும், சிங்கிஸ் ஐத்மாத்தவும், மாயகோவ்ஸ்கியும் தங்கள் வார்த்தைகளால் உலகெங்கும் கடத்திச் சென்றார்களோ, அதைப்போல தன்னுடைய மாபெரும் முயற்சியால் அந்தப் புரட்சியைக் காட்சிகளால் உலகத்தின் கண்களைக் காணச்செய்தவர் ஐசென்ஸ்டீன். இன்று ஐசென்ஸ்டீனும் அவருடைய படைப்புகளும் வெறும் உத்திகளாக மட்டும் புரிந்துகொள்ளும் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் அவர் படங்களிலுள்ள உத்திகள் மட்டும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்புவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தோழர்களே, ஐசென்ஸ்டீனின் ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னாலும் சோவியத்தின் உழைப்பாளர்களின் புரட்சி மறைந்திருக்கிறது. இந்த உலகத்திற்கு புதிய பாதையைக் காட்டுவதற்காக சிந்தப்பட்ட சோவியத் மக்களின் வியர்வையும், இரத்தமும் நிறைந்திருக்கிறது. அக்டோபர் புரட்சியை அறிந்துகொள்ளாமல் ஐசென்ஸ்டீனை அறிந்துகொள்வது ஒருபோதும் சாத்தியமேயில்லாதது.

ஒரு நேர்காணலில் குறைந்த செலவில் இவ்வளவு பிரம்மாண்டங்களை எப்படித் திரையில் உங்களால் உருவாக்க முடிந்தது என்று கேட்கிறார்கள் ஐசென்ஸ்டீனிடம். கொஞ்சமும் தாமதிக்காமல் பதில் சொல்கிறார். இங்கே தனிச்சொத்து இல்லை என்று. இந்தப் பதிலைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் போதும் திரைப்படத்தை மட்டுமல்ல சமூகத்தையும் புரிந்துகொள்ளலாம். தொடர்ந்து சொல்கிறார், வாழ்விலிருந்தே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறோம். ஒரு தெருவை, கோபுரத்தை, கிராமத்தை உருவாக்க வேண்டிய தேவை எங்களுக்கில்லை, ஏற்கனவே அவைகள் இருக்கின்றன. நன்றாகவும் இருக்கின்றன. திரைப்படத்திற்கான அனுமதி என்பது பெரிய விஷயமேயில்லை. மிக முக்கியமாக இங்கு தனிச்சொத்துரிமை இல்லையாதலால், எந்த இடத்தையும் எந்தத் தனிமனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது. இதுபோன்ற ஏராளமான காரணிகளால் திரைப்படத்திற்கான தயாரிப்புச் செலவு கொஞ்சமே தேவைப்படுகிறது என்று சொல்கிறார் ஐசென்ஸ்டீன்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் நினைத்த கதையை, நீங்கள் நினைத்த படத்தை நினைத்தது போல எடுக்க வேண்டுமென்றால் தனிச்சொத்தை ஒழித்தாகத்தான் வேண்டும். எனக்குப் புரிகிறது கஷ்டம்தான். ஆனால் நீங்கள் விரும்பியதைச் செய்யப் போகிறீர்களா? அல்லது யாரோ விரும்பியதை, மனதைக் கல்லாக்கிக் கொண்டு, இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு வெறுமனே, வெறுமனே செய்து கொண்டிருக்கப் போகிறீர்களா? உங்களுடைய நல்ல கனவுகளுக்கும், நல்ல நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நிற்பது இதுதான் இந்த தனிச்சொத்துதான், இந்த முதளாளித்துவ சமூகம்தான் அதை ஒழிக்காமல் ஒன்றும் சாத்தியமில்லை.

இங்கு தனிச்சொத்து இல்லை என்ற ஐசென்ஸ்டீனின் குரல் உங்கள் காதுகளுக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 26/11/2024 - 11:46 AM

தனியுடமை அரசில் சினிமா தயாரிப்பும் மிகப் பெரிய மூலதனக் குவியலையே மையப்படுத்தியுள்ளது.

ஆனால் பொதுவுடமை சமூகத்தில்.. பொதுவுடமை அரசாங்கத்தில் சினிமா தயாரிப்பும் எளிதாகிறது. எளிமையாகிறது.

இதை ரஷ்யாவின் ஐசென்ஸ்டீன் எனும் சினிமா இயக்குனர் மூலம் கவிஞர் ஜோசப் ராஜா நிறுவுகிறார்.
படித்துணருங்கள்.

Reply

Leave a Comment