பாலஸ்தீன நிலத்தில்
எங்கும் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன
ஆலிவ் மரங்கள்
பாலஸ்தீன நிலத்தில்
நிறைந்திருக்கும் ஆலிவ் மரங்களில்
கொத்துக் கொத்தாகக்
காய்த்துத் தொங்குகின்றன
ஆலிவ் விதைகள்
அந்தப் பாலைநிலத்தில்
வருடம் முழுவதும்
உழைத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு பாலஸ்தீனக் குடும்பமும்
காத்துக் கொண்டிருப்பது
இந்த மாதத்திற்காகத்தான்
அந்தப் பாலைநிலத்தில்
பெருமழைக்கு நிகராக
ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
வியர்வையையும் இரத்தத்தையும் சிந்திச்சிந்தி
உழைத்துக் கொண்டிருப்பது
இந்த மாதத்திற்காகத்தான்
ஒவ்வொரு குழந்தைகளும்
கண்கள் பரபரக்க கைகள் படபடக்க
உற்சாகமாகக் காத்துக் கொண்டிருப்பதும்
இந்த மாதத்திற்காகத்தான்
ஒட்டுமொத்த பாலஸ்தீனமுமே
அன்பைப் பரிமாறிக்கொள்ளும்
ஆலிவ்விதைகளின் அறுவடைமாதமிது
ஒட்டுமொத்த பாலஸ்தீனமுமே
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்
ஆலிவ் விதைகளின் அறுவடைக்காலமிது
நிலத்திற்கும் தங்களுக்குமான
உறவைப் போற்றக்கூடிய
இந்த அறுவடைக்காலமே
அந்தத் தேசத்தின் திருவிழாக்காலம்
ஆனால்
ஆனால்
கடின உழைப்பின் கனிகளாகக்
காய்த்துக் கிடக்கும் ஆலிவ் விதைகளை
அந்த விவாசாயிகளால் பறிக்க முடியவில்லை
பார்த்துப்பார்த்து வளர்த்த ஆலிவ் மரங்களை
அந்த விவசாயிகளால் நெருங்க முடியவில்லை
குடியிருப்புப்பகுதிகளின் மீது மட்டுமல்ல
அகதிமுகாம்களின் மீது மட்டுமல்ல
மருத்துவமனைகளின் மீது மட்டுமல்ல
பள்ளிக்கூடங்களின் மீது மட்டுமல்ல
பச்சைக் குழந்தைகளின் மீது மட்டுமல்ல
ஆலிவ் மரங்களின் மீதும்
ஆலிவ் மரங்களின் மீதும்
அணுகுண்டை வீசுகிறார்கள் யுத்தவெறியர்கள்
அந்தப் பாலைச்சூட்டில்
அந்த அணுகுண்டு வீச்சில்
பற்றியெரிகிறது ஆலிவ் மரங்கள்
அறுவடைக்குக் காத்திருந்த ஆலிவ் விதைகள்
பாலஸ்தீனத்தின் பச்சைக் குழந்தைகளைப் போலவே
குண்டுவீச்சின் வெப்பத்தில் கருகிச் சிதறுகின்றன
செயற்கை நுண்ணறிவு காட்டிக்கொடுக்க காட்டிக்கொடுக்க
பாலஸ்தீன நிலத்தில்
எங்கும் எங்கெங்கும் பசுமையாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆலிவ் மரமும்
பாலஸ்தீனர்களின் வீட்டைப் போலவே
இருந்த இடம் தெரியாமல் புதைக்கப்படுகின்றன
தப்பிப் பிழைத்த ஆலிவ் மரங்கள்
இராணுவத்தின் கரங்களால் படுகொலை செய்யப்படுகின்றன
இது முதன்முறை அல்ல
இதற்கு முன்னாலும் வெட்டிச் சாய்க்கப் பட்டிருக்கின்றன
ஆயிரக்கணக்கான ஆலிவ் மரங்கள்
இது முதன்முறை அல்ல
இதற்கு முன்னாலும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கின்றன
ஆயிரக்கணக்கான ஆலிவ் மரங்கள்
ஆனாலும் நீங்கள் நம்பவேண்டும்
ஆனாலும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்
ஒவ்வொரு போரிலும் பேரழிவைச் சந்தித்த
உறுதியான இதயங்கொண்ட பாலஸ்தீனர்கள்
மீண்டும் தங்கள் நிலத்திற்காக
நிமிர்ந்து நிற்பதைப் போல
மீண்டும் தங்கள் நிலங்களில்
ஆலிவ் மரங்களை நிமிரச்செய்தார்கள்
ஒரு கவிஞனாக
என்னுடைய நம்பிக்கையின் வார்த்தைகள் இதுதான்
சுயநலம் பிடித்த இந்த உலகத்தால்
சுத்தமாகக் கைவிடப்பட்டு
ஒருவேளை
ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் நிர்மூலமாக்கப்படலாம்
ஆனபோதிலும்
பாலஸ்தீனம் தோற்றுப்போகாது
இந்த முட்டாள்கள்
ஒவ்வொரு பாலஸ்தீனர்களையும்
ஏன் பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு குழந்தைகளையும்
ஒருவேளை கொன்றுவிடலாம்
பாலஸ்தீனத்தின் சுதந்திர தாகத்தை
என்னசெய்ய முடியும்
ஆலிவ் மரங்களைப் போன்ற
பாலஸ்தீனத்தின் தாய்மார்கள்
ஆலிவ் விதைகளைப் போல
மீண்டும் மீண்டும் பிரசவிப்பார்கள்
குழந்தைகளையல்ல
விடுதலை வேட்கையை
அப்போது
உங்களால் என்ன செய்ய முடியும்?
ஜோசப் ராஜா
1 comment
பாலஸ்தீன ஆலிவ் அறுவடைக்காலம் அந்நாட்டின் குழந்தைகளையும் பெண்களையும் கொல்லும் காலமாகி நம் கண்கள் குளமாகின்றன. இதை வெறும் வார்த்தைகளால் உணர முடியாது. மனித நேயத்தை வரித்துக் கொண்ட கவிஞர் ஜோசப் ராஜா போன்ற கவிஞர்களின் கவிதைகளால் மட்டுமே உணர முடியும்.
மனம் வலிக்கிறது.
தினமும் கேட்கும் செய்திகளும் பார்க்கும் காட்சிகளும் பாடாய்ப் படுத்துகிறது.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். வாருங்கள்.