ஆலாபனைகளின் அரசிக்கு

நிலமெல்லாம் நிறைந்திருக்கும்

வாடைக்காற்று போல

இந்தக் காலையில்

இதயத்தில் நிறைந்திருக்கும்

உன்னுடைய குரல்தான்

உயிர்ப்பித்திருக்கிறது என்னை

இந்தக் காலையில்

காதுகளை நிறைத்திருக்கும்

உன்னுடைய குரல்தான்

வழிநடத்திச் செல்கிறது என்னை

இதயத்தின் ஆழத்திலிருந்து

எழுந்துவரும் உன்னுடைய குரல்

இதயத்தின் ஆழம்வரையிலும்

இறங்கிச் செல்கிறது

இலைகளிலிருந்து

இசை சொட்டிக் கொண்டிருக்கிறது

காற்றில்

நிறைந்து வழிகிறது இசை

மெல்லிய சாரலில்

நனைந்த பறவைகளின் சிறகுகள்

இசையாய் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன

மழையையும் பொழியாமல்

கலைந்தும் போகாமல்

நின்றுகொண்டே இருக்கும்

இந்த மழைமேகத்தை

இப்படியே

பார்த்துக் கொண்டிருக்கத்தான்

இப்படியே

ஏந்திக் கொண்டிருக்கத்தான் விரும்புகிறேன்

எனக்காக மீண்டும் பாடுவாயா

அந்த ஆலாபனையை

எனக்காக இன்னும் பாடுவாயா

அந்த ஆலாபனையை

ஆலாபனைகளின்

பெரும் ரசிகன் நான்

அதிலும்

உயிர் உருக்கும்

உன்னுடைய ஆலாபனையென்றால்

இதயத்தைத் திறந்துவைத்தபடியே

காத்திருப்பேன் எப்போதும்

சொர்க்கத்தின் கதவுகளை நோக்கி

கரம்பிடித்து அழைத்துச் செல்வதுதான்

ஆலாபனை

சிதறிக்கிடக்கும் எண்ணங்களை

குவிமையப்படுத்தும் பெரும்சக்திதான்

ஆலாபனை

கண்ணீர்ச் சுரப்பிகளை

சுண்டி விடுவதாகட்டும்

மகிழ்ச்சியின் நரம்புகளை

தூண்டி விடுவதாகட்டும்

அற்புதங்கள் நிகழ்த்துவதுதான் ஆலாபனை

வயதுவித்தியாசம் பார்க்காத

தாயின் கருணை நிறைந்தது ஆலாபனை

உள்ளங்கைகளுக்குள் பொத்திப் பாதுகாக்கும்

காதலின் பேரன்பு நிறைந்தது ஆலாபனை

எந்த நிலையிலும் கைவிடாத

நட்பின் நங்கூரப்பிணைப்பு ஆலாபனை

நீண்ட பயணத்தில்

உறுதுணையாக இருக்கும் ஊன்றுகோல் ஆலாபனை

என்ன நினைத்தாலும்

உன்னுடைய பாடலில்

நான் அதிகம் விரும்புவது

ஆலாபனையைத்தான்

ஆலாபனைக்கென்று மட்டும்

தனித்த குரலெடுத்து வருகிறாயோ என்று

சந்தேகித்திருக்கிறேன் ஒவ்வொரு பொழுதும்

உயிரைக் கரையச் செய்யும்

நீண்ட ஆலாபனையைத் தொடர்ந்து

இசையையும் வார்த்தைகளையும்

துணைக்கழைத்துக் கொண்ட பிறகும்

உண்மையைச் சொன்னால்

ஓ என் அரசியே

உன்னுடைய ஆலாபனையிலேயே

உறைந்து நிற்கிறேன் நான்

உண்மையைச் சொன்னால்

ஓ என் அரசியே

உன்னுடைய ஆலாபனையிலேயே

நிலைத்துவிடுகிறேன் நான்

வண்ணத்துப் பூச்சிகளைப் போலப்

பறப்பதற்கும்

வண்ணங்களோடு வண்ணங்களாய்க்

கலப்பதற்கும்

உன்னுடைய ஆலாபனை இருக்கும்போது

இதற்குமேல்

எதுவும் வேண்டாமென்று

எப்போதும் சொல்லமாட்டேன்

என்றும் என்றென்றும்

ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்

உன்னுடைய ஆலாபனை

என்றும் என்றென்றும்

கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்

உன்னுடை ய ஆலாபனை

இளங்காற்றில்

உன்னுடைய ஆலாபனை

நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வேளையில்

இப்படித்தான்

எழுதிக்கொள்கிறேன் இதயத்தில்

ஆலாபனைகளின் அரசி நீ!

ஆலாபனைகளின் காதலன் நான்!

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 11/09/2023 - 2:59 PM

நமது துன்ப துயரங்களை மறந்து இன்புற்றிருக்க ஒவ்வொருவருக்கும் ஒன்று வடிகாலாக இருக்கும்.

கவிஞர் ஜோசப் ராஜாவுக்கு ஆலாபனை அவ்வாறு இருக்கிறது. அதில் மெய் மறந்து இருப்பது அவருக்கு பேரானந்தமாக இருக்கிறது.

எப்படி என்று காண வேண்டுமெனில் அவரது சிறிய படைப்பைப் படித்துத்தான் ஆகவேண்டும்.

படியுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Comment