ஆண்டாளும் மார்கழியும்

என்னையும், என் மொழியையும் ஆள்கிறாள் என்னுடைய ஆண்டாள்

மார்கழி

பெரும் மழையைப் போல

பெரும்பனி பெய்யத்தொடங்கும் மார்கழி

காற்றுப் புகக்கூடிய

எல்லா இடங்களுக்குள்ளும்

நிறைந்திருக்கிறது பனிமூட்டம்

பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களெல்லாம்

வெண்ணிறக் குடை பிடித்ததுபோலப்

பனித்துளிகள் தாங்கி மின்னிக் கொண்டிருக்கின்றன

இறுகிக்கிடக்கும் குன்றுகளின் மேல்

பரவிக்கிடக்கும் பனிமூட்டத்தால்

ஒவ்வொரு குன்றும்

பூமிக்குள்ளிருந்து எழுந்துவந்திருக்கும்

நிலவைப்போல ஒளிர்ந்துகொண்டிருக்கிறது

காரிருளா பனிமூட்டமா

வித்தியாசம் தெரியாதபடி

சமவெளிகளெல்லாம் நிறைந்திருக்கிறது இருள்

மரங்களையும் கட்டிடங்களையும்

சாலைகளையும் தெருக்களையும் 

முழுவதுமாக மூடியிருக்கிறது மூடுபனி

பூமியை உறையச்செய்யும் வாடைக்காற்று

மனிதர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன

திறக்கப்படாத விழிகள்

இன்னும் தூக்கத்தை விரும்புகின்றன

நடுங்கும் விரல்கள்

இன்னும் போர்த்திக்கொள்ள விரும்புகின்றன

மார்கழி மார்கழி

என்ற சொல்லை உச்சரிக்கும் போதே

சில்லென்ற குளிரை

உணராமல் இருக்க முடியுமா

மார்கழி மார்கழி

என்ற மாதத்தை நினைக்கும் போதே

உள்ளங்கைகள் இரண்டையும்

தேய்க்காமல் இருக்க முடியுமா

குளிர் மார்கழி

நடுங்கும் மார்கழி

உறைபனி மார்கழி

விடியாத மார்கழி என்று

மார்கழிக்கு எத்தனைப்

பெயர்களைச் சூட்டினாலும்

ஆண்டாள்தான் மார்கழியோடு

பிரிக்கமுடியாமல் சேர்ந்திருக்கிறாள்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

எழுதிக்கொடுத்த பாடல்களால்

கூரிய வேலேந்தியிருக்கும்

கண்ணனோடு மட்டுமல்ல

கடுங்குளிர் கொண்டிருக்கும்

மார்கழியோடும் பிணைந்திருக்கிறாள் !

 

த்தகைய மார்கழியில்

இயல்பாகவேத்

தடைகளை மீறும்

வழக்கமுடைய மனிதர்கள்

குளிரையும் மீறுகிறார்கள்

அகலாத பனியிருந்தும்

ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும்

வெளிப்படுகின்றன விளக்குகள்

மெல்லிய காற்றில்

அசையும் விளக்கொளியில்

ஆண்டாள் நடனமாடுவதைப்

பரவசம் நிறைந்த விழிகளோடு

பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒவ்வொரு வீட்டின் வாசல்களையும்

வண்ணவண்ணக் கோலங்கள்

நிறைத்திருக்கின்றன

ஒவ்வொரு வீட்டின் கோலங்களையும்

வண்ணவண்ணப் பூக்கள்

அலங்கரித்திருக்கின்றன

மார்கழி

தொடங்கிவிட்டது என்பதைக்

குளிர் உணர்த்துவது போல

மார்கழி

தொடங்கிவிட்டது என்பதை

நீளும் இரவு உணர்த்துவதைப் போல

மார்கழி

தொடங்கிவிட்டது என்பதைக்

வண்ணவண்ணக் கோலங்கள்

உணர்த்துவதைப் போல

மார்கழி

தொடங்கிவிட்டது என்பதை

ஒவ்வொரு வீட்டின்

மையத்தில் இருந்தும்

ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்

ஆண்டாளின் பாசுரங்களும்

ஆண்டுகள் பலகடந்தும்

எல்லோருக்கும்

உணர்த்திக் கொண்டிருக்கின்றன

மார்கழியையும் குளிரையும்

பிரிக்க முடியாதது போல

ஆண்டாளையும் மார்கழியையும் கூட

அவ்வளவு எளிதாகப்

பிரிக்கமுடியாது தான் !

 

ல்லோரையும் ஈர்க்கும்

அன்பின் வார்த்தைகளால்

எல்லோரையும் ஒருங்கிணைக்கும்

தோழமையின் வார்த்தைகளால்

அழிவேயில்லாமல் ஆண்டாள்

உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள்

வில்லிபுத்தூரை நிறைத்திருந்த

ஆண்டாளின் வார்த்தைகள்

எங்கும் எங்கெங்குமாய்

வியாபித்திருக்கும் காரணம்

என்னவாக இருக்கும்

ஒவ்வொரு நூற்றாண்டும்

ஒவ்வொரு விதமாய்

மாறிக்கொண்டே இருக்கும்

உலகத்தில்

ஒவ்வொரு காலத்தின்

ஊடுருவும் பார்வையையும் தாண்டி

ஒவ்வொரு நேரத்தின்

ஒவ்வொரு மாதிரியான

விமர்சனங்களையும் தாண்டி

ஆண்டாளின் பாடல்கள்

பாடப்படுவதன் காரணம்

என்னவாக இருக்கும்

ஒவ்வொரு கட்டத்திலும்

தன்னுடைய வார்த்தைகளின் மீது

வீசப்பட்ட நெருப்புச் சொற்களைத் தாண்டி

எல்லோருக்குமானவளாக

பேருருப் பெறும் ஆண்டாளை

எப்படித்தான் புரிந்துகொள்வது

நட்சத்திரங்களைப் போல

ஒளிர்ந்து கொண்டிருக்கும்

ஆண்டாளின் வார்த்தைகளுக்கு

நிலத்தைப் போல

உறுதியாக இருக்கும்

ஆண்டாளின் வார்த்தைகளுக்கு

வெளியைப் போல

வெளிப்படையாய் இருக்கும்

ஆண்டாளின் வார்த்தைகளுக்குக் காரணம்

என்னவாக இருக்கும்

 

ன்றுமில்லை

ஆண்டாளின் மொழி

அப்படிப்பட்ட மொழி

இதயத்தின் ஆழத்திலிருந்து

எழுந்துவந்த வசீகரமிக்க மொழி

ஆண்டாளின் மொழி

உயிரெல்லாம் உருக்கி உருக்கி

செதுக்கிக் கொடுத்த

செழுமையான மொழி

ஆண்டாளின் மொழி

அன்பினால் அன்பினால்

பேரன்பினால் பிறந்துவந்த

பிரகாசமான மொழி

ஆண்டாளின் மொழி

உள்ளதை உள்ளபடியே சொன்ன

உண்மையின் மொழி

ஆண்டாளின் மொழி

அதனால்தான்

அதனால்தான்

ஆண்டாள்

இன்றும் உச்சரிக்கப்படுகிறாள்

இன்னும் உச்சரிக்கப்படுவாள்

புள்ளிகளையெல்லாம்

ஒன்று சேர்த்து உருவாகும்

கோலத்தைப் போல

தன்னுடைய வார்த்தைகளால்

ஒவ்வொருவரையும்

ஒன்றுசேர்க்கத் துடித்தவள்

ஓடி ஓடி அழைத்தவள்

பிரிக்க நினைப்பவர்களால்

இந்த ஆண்டாளை

ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது

பிரிந்து கிடப்பவர்களாலும்

இந்த ஆண்டாளை

ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது

இன்னும் உறங்குதியோ தோழி என்று

ஆயர்ப்பாடியின் ஒவ்வொரு கதவையும்

தட்டித்தட்டி அழைத்த

ஆண்டாளின் வார்த்தைகளைப்

புரிந்துகொள்ளுங்கள்

இன்னுங்கூட

உறங்கிக் கொண்டிருக்கும்

இந்தச் சமூகத்தின்

ஒவ்வொரு மனிதனையும்

தட்டித்தட்டி எழுப்புவதற்குப்

பழகிக்கொள்ளலாம்

 

வளுடைய நோக்கத்தை

நிராகரிக்கலாம் நீங்கள்

அவளுடைய விருப்பங்களை

விமர்சிக்கலாம் நீங்கள்

ஆனபோதிலும்

அவளின் கவித்துவத்திற்கு முன்னால்

அற்புதமான

அவளின் சொற்ச்சேர்க்கைக்கு முன்னால்

ஒவ்வொரு வரியிலும் நிறைந்திருக்கும்

தூய்மையான அவளின் இதயத்திற்கு முன்னால்

தோற்றுத்தான் போவீர்கள்

இதோ என்னுடைய மகள்

இன்று பாடுவதைப் போல

இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்தும்

எங்காவது ஒரு மகள்

மார்கழித் திங்கள்

மதிநிறைந்த நன்னாளாம் என்று

பாடத்தான் போகிறாள்

 

மானுட அன்பையும்

மானுட ஒற்றுமையையும்

பறைசாற்றிய கவிதைகள்

என்றும் என்றென்றும்

அழியாமல் இருக்கும்

ஆண்டாளும் கூட

அதற்குச் சாட்சிதான் !

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 19/12/2023 - 11:03 AM

ஆண்டாளும் மார்கழியும் பிரிக்க முடியாத நிலையில் ஞாலத்து மாந்தர் கடுங்குளிரிலும் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி என விடியலில் வாயாரப் பாடும் நிகழ்வுகள் ஆண்டுதோறும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.

ஆனால் மாற்றம்தான் மக்கள் மத்தியில் வரவில்லை.

ஆண்டாள் நேசித்த கிருஷ்ணன்.. பெரும்பாலான மக்கள் வணங்கும் கிருஷ்ணன்.. “நான் உருவாக்கிய நால்வருண பேதத்தை- வர்ணாஸ்ரம தர்மத்தை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது” என்கிறான் கிருஷ்ணன் என்கிறது புராணம்.

அவன் மாற்ற வேண்டியதில்லை. மக்கள் மாற்றலாம். மக்கள் சக்தியே மகத்தானது. உலகில் நாத்திகத்தைப் பெரும்பான்மையாகப் பின்பற்றும் நாடுகளில்தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாக உள்ளது.

எது எவ்வாறாயினும் கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகளை வாசியுங்கள். கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

Reply
பாஸ்கரன் 27/12/2023 - 9:40 PM

பிரிக்க முடியாது அதே போல் கவிஞர் உண்மையும் இந்த இலக்கியத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு உமது எழுத்து பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிகாலை எழுந்து அடி குழாயில் தண்ணீரடித்து உடுத்திய துணியோடு குளித்துவிட்டு விநாயகனுக்கும் தண்ணீர் ஊற்றி தங்களது மார்கழி கடன்களை எத்தனையோ பெண்கள் நம்மூரில் என்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதைகளும் இலக்கியங்களோடு சேர்ந்து பல்வேறு மனிதம் சார்ந்த பொதுவுடமை சார்ந்த விஷயங்கள் இங்கே பயணிக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் உமது இலக்கியத்தின் தரத்தையும் ஒரு எழுத்தில் தரத்தை இங்கே எங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மார்கழி யோடு ஆண்டாளை பிரிக்க முடியாதது போல் ஒவ்வொரு இலக்கியத்திலும் மக்கள் பிரச்சினைகளை பிரிக்க முடியாத அளவுக்கு நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். தொடரட்டும் முறை எழுத்துக்கள் மக்கள் பணியோடு.

Reply

Leave a Comment