இதுவரையிலும்
மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த
எந்தப் பாடலும்
கேட்கப்படாமல் போனதில்லை
இதுவரையிலும்
மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த
எந்த இசையும்
இரசிக்கப்படாமல் போனதில்லை
இதுவரையிலும்
மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த
எந்தக் கதையும்
வாசிக்கப்படாமல்
போனதில்லை
இதுவரையிலும்
மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த
எந்தத் திரைப்படங்களும்
கொண்டாடப்படாமல் போனதில்லை
அப்படித்தான்
வாழ்வின் நெருக்கடிகளால்
சொந்த மண்ணிலிருந்து
தூர தேசத்திற்குத் துரத்தப்பட்டு
நீங்களும் நானும்
நினைத்துப் பார்க்கவே முடியாத
துயரங்களை
அந்தப் பாலைவனத்தில்
அனுபவித்த நஜீபின் கதையும்
மீண்டும் மீண்டும்
வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
மீண்டும் மீண்டும்
பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
துயரம் தோய்ந்த
அந்த வாழ்க்கைக் கதையை
ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டு
உங்களைப் போலத்தான் நானும்
இதயம் படபடக்க கண்கள் கலங்கிப்போக
நீண்டநேரம் மெளனமாக உட்கார்ந்திருந்தேன்
துயரங்களின் வலிமையே இதுதான்
மனிதர்களை
எல்லையற்ற மெளனத்திற்குள்
தள்ளிவிடும் துயரங்கள்
ஆனால் ஆனால்
சக மனிதர்களின் துயரங்களை
வெறுமனே வெறுமனே
பார்க்கப் பழகிவிட்டோமா நாம்
சக மனிதர்களின் துயரங்களை
வெறுமனே வெறுமனே
கடந்துபோகக் கற்றுக்கொண்டோமா நாம்
ஆடு ஜீவிதத்தின்
நஜீபை போல நாமில்லை
என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறோமா நாம்
என்ற கேள்விகள்
உள்ளும் புறமும்
அரித்துக் கொண்டிருக்கின்றன
சொந்த மண்ணில்
மனைவியோடும் மக்களோடும்
வாழவிடாமல்
அவனைத் துரத்திய
இந்தச் சமூகத்தின் மீதும்
கணக்கற்ற கனவுகளோடு
தூரதேசத்தில் இருந்து
பிழைக்க வந்தவனை
உழைப்பின் பெயரால்
பாடாய்ப்படுத்திய
அந்த அர்பாப்பின் மீதும்
அடங்காத கோபம்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன
இப்படியான எண்ணங்களோடு
அப்படியே உறங்கிப்போனேன்
பரந்து கிடக்கும் பாலைவனத்தில்
ஒரு நஜீப் அல்ல
அங்கொன்றும் இங்கொன்றுமாக
கணக்கற்ற மனிதர்கள்
இரக்கமற்ற அர்பாப்களால்
தாங்கமுடியாத கொடுமைகளுக்கும்
சொல்லமுடியாத துன்பங்களுக்கும்
ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆடுகளோடு ஆடுகளாக
ஒட்டகங்களோடு ஒட்டகங்களாக
கழிந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை
ஆனால்
அர்பாப்களின் காவலையும் மீறி
அர்பாப்களின் கண்டிப்பையும் மீறி
அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு மனிதனும்
யாருக்கும் தெரியாமல்
நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக
நிலவோடு நிலவாக
பாலைவன மணலோடு மணலாக
விடுதலை வேட்கையோடு
சந்தித்துக் கொள்கிறார்கள்
மந்தைகளோடு இருந்தாலும்
அவர்கள் மனிதர்களல்லவா
சுதந்திரக் கனவுகளால்
இரவுகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன
மனைவியைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையும்
பிள்ளைகளைக் கொஞ்சவேண்டுமென்ற பேராசையும்
நரம்புகளுக்குள் நெருப்பைப் பாய்ச்சுகிறது
அவ்வளவுதான்
அர்பாப்புகள் ஒருபக்கம்
அடிமைகள் ஒருபக்கம்
பாலைவனம்
யுத்தத்தைப் பார்க்கப் போகிறது
சுதந்திரத்திற்காக நிற்பவர்களை
கேவலம்
துப்பாக்கிகளும் சாட்டைகளும் என்னசெய்யும்
பாலைவனப் புழுதிக்காற்று
எல்லாவற்றையும் சுருட்டிச்செல்வது போல
கட்டுண்டு கிடந்தவர்களின் சூறாவளிப் பாய்ச்சலில்
இருந்த இடம் தெரியாமல்
புதைக்கப்படுகிறார்கள் அர்பாப்கள்
பாலைவனமெங்கும்
பாவத்தின் இரத்தம் நிறைந்திருக்கிறது
பெருமழை பெய்யத் தொடங்குகிறது
பாலைவனமும்
அந்தப் பாவப்பட்ட மனிதர்களும்
சுத்தமாகிறார்கள்
சூரியனின் கீற்றுகள்
அடிவானத்தை அலங்கரிக்கத் தொடங்குகின்றன
நிம்மதியான நினைவுகளோடு
நானும் எழுந்து கொண்டேன்
துயரத்திற்கு இருக்கும்
இப்படிப்பட்ட உதாரணங்களைப் போல
கனவிற்கும் என்னிடம்
கணக்கற்ற உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன
தோழர்களே
இந்தப் பூமியில்
இத்தனை புரட்சிகளை பார்த்தபின்னும்
இந்தப் பூமியில்
இத்தனை மாற்றங்களைப் பார்த்தபின்னும்
துயரங்களைச்
சகித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா
துயரங்களிலிருந்து தப்பிக்கத்தான் வேண்டுமா
துயரங்களை
துயரங்களுக்குக் காரணமானவர்களை
துயரங்களுக்குக் காரணமான சமூகமைப்பை
அடியோடு ஒழிக்காமல்
நீங்களும் நானும் நஜீபும்
எப்படி வாழமுடியும் சொல்லுங்கள்
ஆடு ஜீவிதத்தின் நஜீப்
அந்தப் பாலைவனத்தில்
அடிமையாக இருந்தான்
அதுமட்டுமல்லாமல்
அவனுக்கும் உங்களுக்கும்
என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஜோசப் ராஜா