ஆலிவ் மரங்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவைகள் என்று
ஒவ்வொரு தீர்க்கத்தரிசிகளும்
சொல்லிச் சென்றார்கள்
தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகளை
ஒருபோதும்
உதாசீனப்படுத்துவதில்லை பாலஸ்தீனர்கள்
ஆலிவ் மரங்களை
அப்படி நம்பினார்கள்
ஆலிவ் மரங்களும் கூட
இதயமற்ற உலகத்தைப்போல
அந்த மக்களை
கைவிட்டுவிடவில்லை
அள்ளிக் கொடுத்தது
அள்ளிஅள்ளிக் கொடுத்தது
இதுவரையிலும் நிகழ்த்தப்பட்ட
ஒவ்வொரு யுத்தத்திலும்
பாலஸ்தீனத்தின் மக்கள்
எந்த அளவிற்குப்
படுகொலை செய்யப்பட்டார்களோ
அந்த அளவிற்கு
பலாஸ்தீனத்தின் ஆலிவ் மரங்களும்
படுகொலை செய்யப்பட்டன
ஆனாலும்
ஒவ்வொருமுறை
வீழ்த்தப்பட்ட போதிலும்
ஒவ்வொருமுறை
துரத்தப்பட்ட போதிலும்
ஒவ்வொருமுறை
புதைக்கப்பட்ட போதிலும்
இன்னும் அதிகமான வலிமையோடும்
இன்னும் அதிகமான நம்பிக்கையோடு
பாலஸ்தீனர்கள் எழுந்து வந்ததைப்போல
வெட்டிச் சாய்க்கப்பட்ட போதிலும்
எரித்துப் பொசுக்கப்பட்ட போதிலும்
குண்டுவீசிக் குதறப்பட்ட போதிலும்
ஆயிரமாயிரம் வலிகளோடு
பாலஸ்தீனத்தின் தாயொருத்தி
நம்பிக்கையோடு பிரசவிப்பதைப்போல
அந்த ஆலிவ் மரங்களும்
மீண்டும் துளிர்க்கத் தொடங்கின
அந்த ஆலிவ் விதைகளும்
மீண்டும் காய்க்கத் தொடங்கின
பாலஸ்தீன நிலத்திற்கும்
ஆலிவ் மரங்களுக்கும்
இடையிலான உறவை
அறிந்துகொள்ள விரும்பினால்
ஆயிரமாயிரம் வருடங்கள்
பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்
புனித நூல்களில்
முதன்முதலில் சொல்லப்பட்ட தாவரம்
ஆலிவ் மரங்கள்தான்
அதனால்தான்
பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு கவிஞர்களும்
ஆலிவ் மரங்களை
ஆலிவ் மரங்களின் இலைகளை
ஆலிவ் மரங்களின் கிளைகளை
ஆலிவ் மரங்களின் விதைகளை
தங்கள் கவிதைகளில்
அழிக்கமுடியாத சொற்களாகப்
பயன்படுத்திக் கொண்டார்கள்
இஸ்ரேல் உட்பட
இந்த உலகத்தில்
ஆலிவ் மரங்களுக்குச் சொந்தக்காரர்கள்
அதன் வேர்களில்
தண்ணீர் ஊற்றியிருப்பார்கள்
சிலநேரங்களில்
வியர்வையையும் ஊற்றியிருப்பார்கள்
ஆனால்
பாலஸ்தீனர்கள் மட்டும்தான்
தங்களுடைய நிலத்திலிருக்கும்
ஒவ்வொரு
ஆலிவ் மரங்களின் வேர்களிலும்
இரத்தத்தை ஊற்றிஊற்றி
ஊற்றிஊற்றி வளர்த்திருக்கிறார்கள்
ஏற்றுக்கொள்ளவே முடியாத
பெரும்சோகம் என்னவென்றால்
குழந்தைகளின் இரத்தமே
அதிகமாக ஊற்றப்பட்டிருக்கிறது
உலகமே கேள்
பாலஸ்தீனத்தின் ஆலிவ் மரங்களால்
ஒருவேளை பேச முடிந்தால்
அதனுடைய வார்த்தைகள்
பாலஸ்தீனம் சுதந்திரம் பெறட்டும்
என்பதாக மட்டுமே இருக்கும்
ஏனென்றால்
அத்தனை பேரழிவுகளுக்கும்
ஆலிவ் மரங்களே
சாட்சியாக இருக்கின்றன
அத்தனை பெருந்துயரங்களுக்கும்
ஆலிவ் மரங்களே
சாட்சியாக இருக்கின்றன
யுத்தம் முடிய வேண்டும்
பாலஸ்தீன நிலமெங்கும்
கைவிடப்பட்ட ஆலிவ் மரங்கள்
தங்களுடைய
அன்பின் கைகளுக்காகவும்
தங்களுக்கு
அன்பானவர்களின் அணைப்பிற்காகவும்
ஏங்கிக் கொண்டிருப்பதை
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது
என் அன்பிற்குரிய
ஆலிவ் மரங்களே
சுதந்திரமான
உங்களுடைய நிலத்தில்
உங்களைச் சந்திக்க
வருவேன் ஒருநாள்!
ஜோசப் ராஜா