படம் : அனகாபுத்தூரில் ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று 700 குடும்பங்களின் கனவுகள் இடிக்கப்படும் காட்சி.
அரசாங்கம்
இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது
ஆக்கிரமிப்பாளர்களுக்கு
ஆக்கிரமிப்பதைத் தவிர
வேறு வேலையில்லை
அரசாங்கம்
எத்தனை முறை சொன்னாலும்
ஆக்கிரமிப்பாளர்கள்
கேட்க மறுக்கிறார்கள்
நீதிமன்றம்
எத்தனை முறை ஆணையிட்டாலும்
ஆக்கிரமிப்பாளர்கள்
இடம்பெயர மறுக்கிறார்கள்
அதிகாரிகள்
எத்தனைமுறை வந்துசென்றாலும்
ஆக்கிரமிப்பாளர்கள்
காலிசெய்ய மறுக்கிறார்கள்
ஆயிரமாயிரம்
காவல்துறையினரைக் கொண்டுவந்து நிறுத்தினாலும்
இந்த ஆக்கிரமிப்பாளர்கள்
கொஞ்சமும் பயப்படுவதில்லை
கொஞ்சமும் பின்வாங்குவதில்லை
கனத்த இதயத்தோடும்
கலங்கிய கண்களோடும்
”இத்தனை காலங்களாக
இங்குதானே இருக்கிறோம்
அத்தனை வரிகளையும் கட்டுகிறோமே
மின்சாரக் கட்டணம் கட்டுகிறோமே
குடிநீர்க் கட்டணம் கட்டுகிறோமே
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறோமே
கும்பிட்ட கையோடு ஓட்டுகேட்டு வரும்
ஒவ்வொரு முறையும் வாக்குறுதி கொடுத்தீர்களே” என்று
ஆதாரங்களோடு பேசுகிறார்கள்
அகலாமல் போராடுகிறார்கள்
ஆனால்
இந்த எளிய ஆக்கிரமிப்பாளர்கள்
எத்தனை காலம் தாக்குப்பிடிப்பார்கள்
இராட்சத இயந்திரங்களுக்குப் பின்னால்
அதிகாரம் நின்றுகொண்டிருக்க
கணப்பொழுதில்
கணப்பொழுதில்
கணப்பொழுதில்
எல்லாமும் தரைமட்டமாக்கப்படுகிறது
ஒரு வீட்டைக் கட்டுவதென்பது
அவ்வளவு சுலபமானதல்ல
ஆனால் அந்த வீட்டை இடிப்பது
அப்படியொன்றும் கடினமானதல்ல
அதிகபட்சம் அரைமணிநேரம்
அத்தனை கனவுகளையும்
இடித்துத் தரைமட்டமாக்கிவிடலாம்
அதிகபட்சம் அரைமணிநேரம்
அத்தனை ஆசைகளையும்
சுக்குநூறாய் உடைத்துவிடலாம்
அதிகபட்சம் அரைமணிநேரம்
அத்தனை நம்பிக்கைகளையும்
அத்தனை அன்பின் தடயங்களையும்
அத்தனை ஞாபகக் கிடங்குகளையும்
ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம்
அப்படித்தான்
இன்று நேற்றல்ல நீண்ட காலங்களாக
இந்த நகரத்தின் பூர்வகுடிகள்
ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில்
வேரோடு வெட்டப்பட்டு
நகரத்திற்கு வெளியே துரத்தப்படுகிறார்கள்
ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று
நகரத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள்
அதே ஆற்றங்கறையில்
பன்னாட்டு நிறுவனம் அலுவலகத்தைக் கட்டியெழுப்புகிறது
அதே ஆற்றங்கரையில்
அந்த ஆற்றின் பெயரைச் சொல்லிச்சொல்லி
அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுகிறான் இன்னொருவன்
ஒரு கல்வித்தந்தை
ஆற்றில் பாதியை அபகரித்துக் கொள்கிறான்
ஆனால்
ஆக்கிரமிப்பாளர்கள் என்று
சொல்லப்படுகிறவர்கள் மட்டும்
எப்போதும் எளிய மனிதர்களாக இருக்கிறார்களே
என்ற கேள்வியை எப்போது கேட்பீர்கள்
காலையில்
வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று
மாலையில்
முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்ட வீட்டைப்பார்க்கும்
அந்தக் குழந்தைகளின் மனநிலை
என்னவாக இருக்கும் என்பதைப்
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்
நினைத்துப் பாருங்கள்
வளர்ச்சியின் பெயரால் எத்தனை குடும்பங்கள்
இந்த நகரத்தில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றன
வளர்ச்சியின் பெயரால் எத்தனை மனிதர்கள்
இந்த மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்
ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று
சாலையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று
இந்த எளிய மனிதர்களின் மீது
இத்தனை கடுமைகாட்டும் அரசாங்கமும் நீதிமன்றமும்
ஆற்று மணலை விற்றுத் தின்பவனை
மலைகளை வெட்டி விற்றுத் தின்பவனை
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவனை
வங்கிகளை ஏமாற்றித் தப்பிச் சென்றவனை
தேர்தலுக்காகப் பொய்சொல்லும் அரசியல்வாதிகளை
என்ன செய்துவிட்டது என்ற கேள்விகளுக்கு
அவர்களல்ல ஒருபோதும் அவர்களல்ல
நாமே பதில்சொல்ல வேண்டும்
புரிந்துகொள்ளுங்கள்
இந்த நகரத்தின் பூர்வகுடிகள் சிந்திய
இரத்தத்தின் மீதும் வியர்வையின் மீதும்
அதிகாரத்தால் அடித்து நொறுக்கப்பட்ட
அவர்களின் எலும்புகள் மீதும்தான்
நின்று கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லப்படுகின்ற
அந்த எளிய மனிதர்களின் இதயமாக
குரல்வளை நொறுக்கப்பட்ட
அந்த உழைக்கும் மனிதர்களின் குரலாக
நான் சொல்கிறேன் கேளுங்கள்
வளர்ச்சியின் பெயரால் துரத்தப்பட்ட
தூய்மையின் பெயரால் விரட்டப்பட்ட
அந்த எளிய மனிதர்களால்
இந்த நகரம் ஒருநாள் ஆக்கிரமிக்கப்படும்
இந்த நகரம் ஒருநாள் ஆக்கிரமிக்கப்படும்
அன்று கோட்டைகளும் இருக்காது
எந்தச் சிம்மாசனங்களும் இருக்காது
அவர்கள்தான் இருப்பார்கள்!
ஜோசப் ராஜா
2 comments
ஆளும் வர்க்க நடவடிக்கையில் என்றுமே பாதிக்கப்படுவது எளிய உழைக்கும் மக்களே!
ஆக்கிரமிப்பு என்ற பெயரால் ஏழைகளின் குடிசைகள் தகர்க்கப்படுவது எளிய மக்களைத் தகர்ப்பதற்கு ஒப்பானது.
இதே ஆளும் வர்க்கம்தான் வனப்பகுதியை வளைத்துப் போட்டுக்
கோலோச்சிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்ற கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துரும்பைக்கூட அசைப்பதில்லை.
அரசின் வர்க்க குணத்தைப் புரிந்து கொண்டு வர்க்கமாய்த் திரண்டு அநியாயங்களை, அக்கிரமங்களை எதிர்த்துப் போரிட வேண்டியது காலத்தின் அவசியம்.
அதற்குக் கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவு துணை செய்யும்.
ஆம்.. தோழர். ஆக்கிரமிப்பு என்று எடுத்துக்கொண்டு – பற்பல பண முதலாளிகளின் நிறுவனங்களையும் பக்காசூர கம்பெனிகளையும் அரசும் சட்டமும் விட்டுவிட்டு – வசூல் செய்துகொள்கிறது. இயற்கையை முடிந்தவரை அரசே சுரண்டி பணமாக்கிக்கொள்கிறது. தெரிந்ததை தெரியாதைப்போல விட்டுவிட்டு – தெரியாத விடையங்களை படம்பிடித்து – பலமுறை செய்தியாக்கி பின் அடித்து உடைப்பதுதான் அரசதிகாரமாக இங்கு இருந்துவருகிறது. இவர்களுக்கு பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்புவதில் என்ன அன்பும் அக்கறையும் இருக்கப் போகிறது. அரசாங்க சட்ட புத்தகத்தின் சில பக்கங்களை சில பேர் மீது சரியாக பயன்படுத்துவதில் இவர்கள் சட்டவான்கள். ஏழைகளும் எளியவர்களும் இவர்களுக்கு நொறுக்கு பொருளாகிறார்கள். இந்த இடத்தில் இப்படியான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கிய போது இவர்கள் சட்டம் எங்கிருந்தோ? இதையும் மக்களாட்சி என்று சொல்லிக்கொள்ளும் நமக்குத்தான் இது புரியவில்லை என்று நினைக்கிறேன்.