எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால்
முளைத்தெழுந்த அந்த மலைகள்
மண்ணோடுமண்ணாய்
இறுகிப்போன அந்த மலைகள்
உங்களுடைய கரங்களால்
உடைந்து நொறுங்குவதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
நாட்களைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் இருந்து எழுந்து வருகின்றன
அங்கே உறைந்திருந்த அந்த மலைகள்
நான் சிறுவனாயிருந்த போது
இருந்த இடத்தில் இப்போது இல்லை
எவ்வளவோ தூரம் பின்வாங்கிவிட்டன
சில இடங்களில் காணாமல் போய்விட்டன
அந்த மலைகளைப் பின்வாங்கச் செய்த
அந்த மலைகளைக் காணாமல் போகச் செய்த
உங்களின் அரை நூற்றாண்டு உழைப்பு
எப்போதும் எனக்கு ஆச்சரியமே
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
சாலையோரத்தில் இருந்த
அந்தப் புளியமர நிழலில் அமர்ந்தபடி
அந்த இறுகிய மலையின்
உச்சியில் நிற்கிறீர்கள் நீங்கள்
இறுக்கப்பட்ட கடப்பாறை ஒரு கையில்
இறக்குவதற்காக
காற்றில் உயர்ந்து இறங்கும்
சம்மட்டி ஒரு கையில்
உங்களுக்கு பின்னே அஸ்தமனச் சூரியன்
என் மனதில்
ஆழப் பதிந்திருக்கிறது இந்தக் காட்சி
வெடிவைத்துச் சிதறடிக்கப்பட்ட
அந்தப் பாறைக் குவியல்களை
இடுப்பில் கைவைத்துக் கொண்டு
ஒவ்வொன்றாக நீங்கள் தொட்டுப்பார்க்கும் போது
எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தியபின்
பெருமிதத்தைச் சுமந்த முகத்தோடு
யுத்தகளத்தைச் சுற்றிவரும்
ஒரு பேரரசனைப் போலத்தான்
தெரிந்தீர்கள் எனக்கு
உங்களின் அதிகாரத்திற்கு
அந்த மலைகள் அசைந்து கொடுத்தனவே
நீங்கள் பேரரசன் தான்
ஞாபக அடுக்குகளிலிருந்து
உங்களுடைய நினைவுகளை எடுத்து
புரட்டிப் பார்க்கிறேன்
மனைவியைக் காட்டிலும்
பிள்ளைகளைக் காட்டிலும்
உங்களுடைய கைகள்
அதிக நேரம் தழுவியிருந்தது
அந்தச் சம்மட்டியைத் தான்
அந்தச் சுத்தியலைத் தான்
அந்தக் கடப்பாறையைத் தான்
அந்த உளிகளைத் தான்
நீங்கள் ஒரு போர்வீரன் அல்ல
ஆனால் யுத்தம் செய்திருக்கிறீர்கள்
ஒருபோதும் வெற்றிபெறாத யுத்தத்தை
வாழ்க்கை முழுவதும் நடத்தியிருக்கிறீர்கள்
உங்களுக்குத் தான் எவ்வளவு துணிச்சல்
ஒரு முழு வாழ்க்கை முழுவதுமே
எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்க
எப்போதுமே நீங்கள்
தோல்வியடைந்தீர்கள் என்றாலும்
தற்காலிக வெற்றிகளே
உங்களைத் தளர்ச்சியடையாமல் செய்திருந்தன
இப்போதும் கூட
அந்தக் கல்குவாரிகளில் கால்வைத்தால்
மூச்சிறைக்க மூச்சிறைக்க
நீங்கள் அடித்த சம்மட்டியின் ஓசை
அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து
என்னை நோக்கி எழுந்து வருகிறது
ஊருக்கு வெளியே
உயர்ந்திருந்த அந்த மலையை
வியர்வையும் இரத்தமும் சிந்தச்சிந்த
நீங்கள் உடைக்கஉடைக்க
ஊருக்கு உள்ளே
பெரியபெரிய கட்டிடங்களும்
ஆலயங்களின் மதில்சுவர்களும்
கோவில்களும் குடியிருப்புகளும்
உயரத்திலும் உயரமான அடுக்குமாடிகளும்
முளைத்துக் கொண்டே இருந்தன
உண்மையைச் சொன்னால்
உண்பது உடுப்பது உறங்குவது போல
காயப்படுவதும் கூட
உங்களுடைய அன்றாட வாழ்க்கையின்
அங்கமாகவே இருந்து வந்தது
கணக்கற்ற காயங்களோடும்
குறையாத வலிகளோடும்
உங்களுடைய கரங்களால் நீங்கள்
அந்த மலைகளை உடைத்து நொறுக்கி
வெகுதூரம் நகர்த்தி போட்டீர்கள்
என்று நான் சொன்னபோது
சிலர் நம்ப மறுத்தார்கள்
சிலர் பரிகாசம் செய்தார்கள்
சிலரோ உயர்வுநவிற்சி என்றார்கள்
அவர்கள் அத்தனை பேரையும்
அழைத்துச் சென்று காட்டினேன்
வெறும் மூன்றுவேளை சோற்றுக்காக
கையில் கடப்பாறை கொண்டு
சுத்தியல் கொண்டு
சம்மட்டி கொண்டு
அரை நூற்றாண்டாய்
அந்தக் கல்குவாரிகளில்
நீங்கள் ஆடிய ருத்ரதாண்டவத்தில்
எவ்வளவோ தூரம் நகர்த்தப்பட்ட மலையை
கனத்த இதயத்தோடும் கலங்கிய கண்களோடும்
அவர்கள் சொன்னார்கள்
அவர் மலைகளை விடவும் வலிமையானவர்!
அவர் மலைகளை விடவும் வலிமையானவர்!
ஜோசப் ராஜா
