அழுத குழந்தையைச் சிரிக்க வைத்தவர்கள்

காலையில்

மின்சார இரயிலில்

ஏறும்போதே

ஒரு குழந்தையின் அழுகை

அந்தப் பெட்டியை

நிறைத்திருந்தது

குழந்தையின் தாய்

லொல்ல லொல்லலாய்

லொல்ல லொல்லலாய்

என்ற அழகான ஒலியோடு 

சமாதானம் செய்ய

முயற்சித்துக் கொண்டிருந்தாள்

தலையில் கைவைத்து

வாயை அகலத் திறந்தபடி

அழுது கொண்டேயிருந்தது

அந்தக் குழந்தை

பக்கத்தில்

உட்கார்ந்திருந்த ஒருவர்

தன்னுடைய எழுதுகோலை

குழந்தையின்

கையில் கொடுத்தார்

கொஞ்சநேரம்

பார்த்துக் கொண்டிருந்த

குழந்தை

அதை எறிந்துவிட்டு

அழுகையைத் தொடர்ந்தது

ஒருவர் எழுந்துகொள்ள

குழந்தையின் பாட்டி

கால்நீட்டி உட்கார்ந்து

குழந்தையை

படுக்க வைத்து

தட்டிக்கொடுத்தாள்

என்ன கோபமோ

தெரியவில்லை

இன்னும் ஒலிகூட்டி

கதறத் தொடங்கியது

மெல்ல எழுந்த

குழந்தையின் தந்தை

சமாதானப்படுத்த முயற்சித்தார்

மொத்தக் கோபமும்

தந்தையின் மேல்தான்

என்பது போல

அழுகத் தொடங்கியது

வேலைக்குச் செல்லும்

ஒர் இளம்பெண்

முகத்தை

என்னென்னமோ செய்துபார்த்து

முயற்சி செய்தாள்

முடியவில்லை

தொடர்ந்தது குழந்தை

நானும் கொஞ்சநேரம்

குழந்தையை வாங்கி

வைத்திருந்தேன்

அந்தச் சின்னக் கண்களில்

கண்ணீர் தழும்ப

என்னை

முறைத்துப் பார்த்தது குழந்தை

எனக்குப் பக்கத்தில்

நின்று கொண்டிருந்தவர்

குழந்தையை வாங்கிக்

கையில் வைத்துக்கொண்டு

இன்னொரு கையால்

ஓடாத மின்விசிறியை

ஓடவைக்க முயற்சித்ததைப் பார்த்து

குழந்தை சிரிக்கத் தொடங்கியது

பக்கத்திலிருந்த எல்லோரும்

குழந்தையைப் பார்த்துச் சிரித்தார்கள்

கொஞ்ச நேரம்தான்

அந்தப் பாழாய்ப்போன மின்விசிறி

ஓடத்தொடங்கியதும்

குழந்தை அழத் தொடங்கியது

எங்கோ

பூஜைக்குச் சென்றுவிட்டுத்

திரும்பிக் கொண்டிருந்தவர்

பையிலிருந்த ஆரஞ்சுப்பழத்தை

உரித்துக் கொடுத்தார்

சாப்பிடவில்லை குழந்தை

ஆனால்

அழுகையை நிறுத்திவிட்டது

சுற்றியிருந்த எல்லோரையும்

பார்த்தேன்

அடப்பாவிகளா

ஒரு குழந்தை அழுகிறதைக்

கொஞ்சநேரம் கூட

பொறுத்துக்கொள்ள

முடியாத நீங்களா

உள்ளுக்குள்

சாதியவாதத்தைச்

சுமந்து கொண்டிருக்கிறீர்கள்

ஒரு குழந்தை அழுகிறதை

கொஞ்சநேரம் கூட

பொறுத்துக்கொள்ள

முடியாத நீங்களா

மதவெறியர்களை

ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள்

ஒரு குழந்தை அழுகிறதை

கொஞ்சநேரம் கூட

பொறுத்துக்கொள்ள

முடியாத நீங்களா

குழந்தைகளைக் கொன்று குவிக்கும்

கொடிய போரை

ஆதரிப்பவர்களாக இருக்கிறீர்கள்

என்ற கேள்விகளோடு

அந்தக் குழந்தைக்குக்

கையசைத்துவிட்டு

இறங்கி நடந்தேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment