என்னுடைய ஞாபக அடுக்குகளில்
தேடிப்பார்க்கிறேன் வெங்காயத்தை
அந்த ஒற்றைக் காட்சியில் மட்டும்
இந்த நேரம் வரையிலும் கூட
எந்தக் கீறலும் விழவேயில்லை
சூரியோதயத்திற்கு முன்னமே
கல்குவாரிக்குப் புறப்படும் தந்தை
சம்மட்டி சுத்தியல் கடப்பாறை எல்லாவற்றையும்
மிதிவண்டியில் வைத்துக் கட்டிக்கொண்டு
பழையசோறும் சின்னவெங்காயங்களும்
நிறைந்திருக்கும் தூக்குச்சட்டியை
வாஞ்சையோடு எடுத்துக் கொடுக்கும் அம்மாவிற்கு
புன்னகையைப் பரிசாகக் கொடுத்துவிட்டு
அரைத்தூக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் என்னைப்பார்த்து
கையசைத்துவிட்டுப் புறப்படுவார்
விடிவதற்கு முன்பிருந்தே
இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் தாயும்
பள்ளிக்குச் செல்லும் எங்களுக்கு உணவு கொடுத்துவிட்டு
இன்னொரு தூக்குச்சட்டியில்
பழையசோற்றையும்
சின்னவெங்காயங்களையும் எடுத்துக்கொண்டு
என் தந்தையின் சுவடுகளைத் தொடர்ந்தபடி
கல்குவாரிக்குச் செல்வார்
இவ்வளவும் சொன்னவன்
இதையும் சொல்ல வேண்டுமல்லவா
முழுவாழ்க்கை முழுவதுமாகப்
பழையசோறும் பச்சைமிளகாயும் வெங்காயமும்
மட்டுமே உண்டு உழைத்த
அந்த மதிப்பிற்குரிய தாயும் தந்தையும்
தங்கள் பிள்ளைகளுக்கு ஒருபோதும்
அந்த எளிய உணவைக் கொடுக்கவேயில்லை
வைராக்கியம் நிறைந்த அந்தத் தாயும் தந்தையும்
தங்கள் பிள்ளைகளுக்கு ஒருபோதும்
அந்த எளிய உணவைப் பரிமாறியதேயில்லை
ஒருவேளை கொடுத்திருந்தால் அறிந்திருக்க மாட்டேன்
கொடுக்கவில்லை என்பதுதான்
இப்போது வரையிலும் துரத்தும் துயரமாகிறது
இத்தனைக்கும் அந்தச் சின்ன வீட்டில்
அப்பொழுதெல்லாம்
நிறைய சின்னவெங்காயங்கள் இருக்கத்தான் செய்தது
அந்த விறகடுப்பின் வாசனையையும் தாண்டி
அந்தச் சின்ன வீட்டை
எப்போதுமே நிறைத்திருந்தது வெங்காயத்தின் வாசனை
சில நாட்களில்
வயல்வேலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பும் போது
சேகரித்து வந்திருந்த வெங்காயத் தாள்களை
வெறும் எண்ணையில் வதக்கிக் கொடுப்பாள்
முப்பது வருடங்கள் கடந்தும் கூட
நாவில் நர்த்தனம் ஆடுகிறாள் அம்மா
வெங்காயம் இல்லாமல்
எதையும் சமைக்கத் தெரியாதவள்
எதைச் சமைத்தாலும் வெங்காயத்தை மறக்காதவள்
ஆகவேதான் வெங்காயத்திற்கான கவிதையை
அம்மாவை தவிர்த்து எழுதமுடியவில்லை என்னால்
இவ்வளவு காலம் கழித்து
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்
கொஞ்சம் நல்ல சம்பளத்தில்
வாழ்க்கையை நகர்த்தும்
நடுத்தரவர்க்கத்து வாழ்க்கை
வாய்த்திருக்கும் எனக்கே
இன்றைய வெங்காயத்தின் விலை
பொறுக்கும் போதே விரல்களை
நடுக்கம் கொள்ளச் செய்யும் போது
என்ன செய்வாள் அம்மா
என்ற ஞாபகம் வந்தவனாக
உடனே அழைத்துக் கேட்டேன்
” ஒங்கப்பா இருந்திருந்தாக்கூட பரவாயில்ல
விக்கிற வெலவாசிக்கு
வெங்காயமே வாங்குறதுமில்ல சாப்பிடுறதுமில்ல”
என்ற அம்மாவின் பதில்
ஆணியைப் போல இறங்கியது இதயத்திற்குள்
அந்த முழு இரவையும்
அம்மாவின் பதில்தான் ஆக்கிரமித்திருந்தது
விலைவாசி உயர்ந்து கொண்டேயிருக்கிறது
பசித்த வயிறுகள் பெருகிக் கொண்டேயிருக்கிறது
ஒரு மாநிலம் எரிந்து கொண்டேயிருக்கிறது
பல மாநிலங்கள் புகைந்து கொண்டேயிருக்கிறது
இத்தனை வலிகளும் இத்தனை வேதனைகளும்
மாபெரும் மாற்றத்தை தொடங்கிவைத்துவிடாதா என்று
என்னிதயம் ஏங்கிக் கொண்டேயிருக்கிறது
இந்த தேசத்தின் எளியமனிதர்கள்
அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளை
நினைக்க நினைக்க நிம்மதியிழக்கிறேன்
நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா தோழர்களே?
4 comments
நிம்மதியாக இருப்போம் என்று நினைக்கிறீர்களா கவிஞரே..!?
வெங்காயத்தின் கடந்த காலக் கதையையும் தற்காலக் கதையையும் கவித்துவமாகக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
எத்தனை உயரத்திற்கு விலைவாசி பறந்தாலும் ஆட்சியாளர்கள் தங்களின் வழக்கமான உல்லாச வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் இன்றும் இந்திய மன்னனாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் காட்சியை இலைமறை காயாக உணர்த்துகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
நிம்மதியைத் தொலைத்து ஒன்பதாண்டுகளாய் வாழ்க்கை கசந்தபடி கடக்கிறது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு.
சாமானியர்கள் அநீதிக்கெதிராக அணிதிரள வேண்டியது காலத்தின் அவசியம்.
அப்படியான அணிதிரளலுக்கு இக்கவிதை நெம்புகோல் ஆகும்.
‘நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா தோழர்களே?” என்னும் கேள்விக்கு பதிலளித்தால், நான் அந்நியப்பட்டவனாவேன். நிம்மதி என்னும் சொல்லை உச்சரிக்கக் கூடிய உதடுகளுக்கு உரியவனாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவ்வளவே. சொல்லும் சொலின் முடிவோடு நிம்மதி தொலையும். புதிய அழுத்தமும் அழுவதற்கான பெருங்கவலையும் கவ்விக்கொள்ளும்.
வெங்காயத்தோடு வளர்ந்து வெங்கயத்தோடு வாழ்ந்த வாழ்க்கையை விலைவாசியும் பொருளாதார நெருக்கடியும் தூரத்தியடிக்கும் சூழலை கவிதை காட்சிப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் குழந்தைக்கு எளிய வெங்காயத்துடனான உணவை கொடுக்காமல் வளர்க்க விரும்பிய அந்த பெரிய மனம் படைத்த மனிதர்களுக்கே இந்த நிலை. எதை பற்றியும் கவலைப்படாமல், பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தின் கீழ், உடலுக்கும் உயிருக்கும் பாதகமான பலவற்றையும் தன் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து வளர்க்கும் இன்றைய பணக்காரர்களின் நிலை உண்மையில் நிம்மதியிழக்கவேச் செய்கிறது. தன்னிலிருந்து வெளிப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் கூட அன்பையும் அக்கறையையும் செலுத்த தவறும் இவர்களுக்கு எங்கு எது எரிந்தால் என்ன? எது அழிந்தால் என்ன? இவர்களை நோக்கு வரும் அழிவைத்தான் நான் எதிர்கொண்டு – அதற்கும் நிம்மதி இழக்கக் காத்திருக்கிறேன் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிறப்பு தோழர்.
தன் கடந்த கால வாழ்க்கையோடு நிகழ்கால நிகழ்வுகளை ஒப்பிட்டு ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளிகளையும் ஆட்சியாளர்கள் முதலாளிக்கு செய்யும் அன்பு, ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு என்றும் கிடைப்பதில்லை என்பதை தக்காளி வெங்காயத்தின் வழியாக அடுக்கடுக்காக அழகாக சொல்லியுள்ளார். தன் வாழ்க்கையின் குழந்தை பருவ நிகழ்வுகளை தற்போது நடக்கும் இந்த நிகழ்கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு அழகாக இந்த கவிதையை எழுதியுள்ளார்.
நிம்மதியை தேடும் பல கோடி மனிதர்கள் நானும் ஒருவன்.