நேட்டோ படைகள் மத்தியகிழக்கு நாடுகளைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த 2011 காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை, தேவைகருதி இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்வது கடமையெனக் கருதுகிறேன்.
தரை வழியாக
கடல் வழியாக
வான் வழியாக
வந்துகொண்டு இருக்கிறார்கள்
அமைதியின் தூதுவர்கள்
எழுந்து நில்லுங்கள்
வழிவிட்டு நில்லுங்கள்
முடிந்தால் கோஷம் போடுங்கள்
அமைதி வாழ்க அமைதி வாழ்க
அமைதியின் தூதுவர்கள் வாழ்க
அமைதியின் தூதுவர்கள் வாழ்க
பயப்படாதீர்கள் பயப்படாதீர்கள்
அவர்களின் கரங்களில் இருக்கும்
கனரகத் துப்பாக்கிகளைக் கண்டோ
நவீன ஆயுதங்களைக் கண்டோ
பீரங்கிகளைக் கண்டோ
எறிகுண்டுகளைக் கண்டோ
ஏவுகணைகளைக் கண்டோ
நேப்பாம் குண்டுகளைக் கண்டோ
பயப்படாதீர்கள் பயப்படாதீர்கள்
அவர்கள் அமைதியின் தூதுவர்கள்தான்
அவர்கள் அமைதியின் தூதுவர்கள்தான்
அவைகள் இராணுவ வண்டிகள்தான்
அவைகள் போர் விமானங்கள்தான்
அவைகள் போர்க்கப்பல்கள்தான்
அதற்காக எல்லாம் நீங்கள்
பீதியடையத் தேவையில்லை
அவர்கள் அமைதியைத்தான்
நிலைநாட்ட வந்திருக்கிறார்கள்
இன்னும் நம்பவில்லையா நீங்கள்
அமைதியின் தூதுவர்கள்
இராணுவ உடைகள் தரித்து
வரக்கூடாதா என்ன
அமைதியென்று சொன்னதும்
சிலுவையில் ஏற்றியும்
சினந்து கொள்ளாத
ஏசுவின் முகத்தையோ
அல்லது அவரையும்
அவருடைய போதனைகளையும்
சுமந்து கொண்டு
இந்த உலகெங்கும் வலம்வந்த
அவரின் சீடர்களின் முகங்களையோ
நினைத்துக் கொண்டீர்களானால்
நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்
அவர்கள் ஏந்திவந்த சிலுவைக்கும்
இவர்கள் ஏந்திவரும் சிலுவைக்கும்
வித்தியாசம் உண்டுதான்
ஆனாலும் என்ன
சிலுவை சிலுவைதானே
சிலுவையென்றாலே புனிதம்தானே
அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அவர்களை நம்புங்கள்
அவர்கள் அமைதியின் தூதுவர்கள்தான்
நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
இந்த அமைதியின் தூதுவர்களை
இப்போது இவர்களின் கரங்களுக்கு
கரங்களில் இருக்கும் ஆயுதங்களுக்கு
வரலாற்றை எழுதும் வல்லமை இருக்கிறது
இவர்கள் சாதரணமானவர்கள் அல்ல
காற்றைப் போல எங்கெங்குமாய்ப்
புகுந்துவிடக் கூடியவர்கள்
சூறாவளியைப் போல எல்லாவற்றையும்
சுருட்டிக் கொள்ளக் கூடியவர்கள்
எல்லா நாடுகளுக்குள்ளும்
நுழையக் கூடியவர்கள்
ஏனென்றால்
எல்லா வேஷங்களையும்
சந்தேகத்திற்கு இடமின்றி
தரிக்கக் கூடியவர்கள்
நீங்கள் ஒத்துப் போனால்
சிரித்த முகத்தோடு வருவார்கள்
நீங்கள் எதிர்த்து நின்றால்
முட்டிக் கொண்டு நுழைவார்கள்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அமைதியை நிலைநாட்டி விட்டுத்தான்
திரும்பிச் செல்வார்கள்
நாடு இன மொழி என்ற
பேதங்கள் இல்லாதவர்கள்
நீங்கள் அழைக்கவே வேண்டாம்
அவர்களே வருவார்கள் உங்களிடம்
நீடித்த அமைதியை உங்களுக்கு வழங்கவே
அவர்கள் பிறந்து வந்திருக்கிறார்கள்
நித்திய அமைதியை உங்களுக்கு வழங்கவே
அவர்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள்
அவர்களின் கரங்களிலிருந்து
அந்தச் சலனமற்ற அசைவற்ற
அமைதியைப் பெறுவதற்கு
பெரிதாக எதுவும் வேண்டாம்
கொஞ்சமாகச் சில தகுதிகள் போதும்
உங்கள் மண்ணுக்கடியில்
பெட்ரோல் இருக்கிறதா
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
உங்கள் மண்ணுக்கடியில்
கனிமவளங்கள் காணப்படுகின்றனவா
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
உங்கள் மண்ணுக்கடியில்
தங்கத்தூள்கள் இருக்கிறதா
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
உங்கள் மண்ணுக்கடியில்
நவரத்தினங்கள் ஒளிந்திருக்கிறதா
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
உங்களுடைய மண்
நல்ல விளைச்சலுக்கு உகந்ததா
முப்போகம் விளையக் கூடியதா
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
வற்றாத நதிகள் ஓடுகின்றனவா
நீர்ப்பாசானம் பிரச்சினையில்லையா
என்ன நல்ல மழையும் பொழியுமா
ஓ நல்ல சீதோஷ்ண நிலையும் உண்டா
கண்டிப்பாக நிச்சயமாக அவர்கள்
உங்கள் நாட்டுக்கு வருவார்கள்
அங்கே அமைதியை நிலைநாட்டாமல்
ஓயவே மாட்டார்கள்
எல்லாம் இருக்கும் எங்களுடைய நாட்டில்
எந்தப் பிரச்சனையும் இல்லையே
அமைதியின்மை இருந்தால் தானே
அவர்களுக்கு வேலை என்கிறீர்களா
அப்படியென்றால் முதலில் அவர்கள்
அமைதியைக் குலைத்து விடுவார்கள்
ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விடுவார்கள்
ஆயுதங்களை விநியோகம் செய்வார்கள்
ஏதாவதொரு குற்றத்தைச் சுமத்திவிட்டு
அவர்களும் யுத்தத்தில் குதிப்பார்கள்
அப்புறம் பொறுமையாக
மிகவும் நிதானமாக
ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல
அமைதியை நிலைநாட்டுவார்கள்
யாரிவர்கள் என்று யோசிக்கிறீர்களா
சந்தேகமே வேண்டாம்
அவர்கள் அமைதியின் தூதுவர்களேதான்
தப்பித்து விடலாமென்று எண்ணுகிறீர்களா
எங்கு போவீர்கள் பூமியை விட்டு
எல்லாச் சண்டைகளையும் போல
விண்வெளிச் சண்டையும் ஆரம்பித்து
ஆண்டுகள்பல கடந்தாயிற்று தெரியுமா
இந்த அமைதியின் தூதுவர்களால்
இப்படித்தான் நிறையப் போகிறது
வரலாற்றின் பக்கங்கள்
நானும் நீங்களும் மட்டுமல்லாமல்
நம் சந்ததிகளும் படிக்கத்தான் போகிறது
அவர்களின் கரங்கள்
அமைதியை நிலைநாட்டிய வரலாறுகளை
உதாரணமாக
ஆப்கானிஸ்தானின்
இறுகிய நிலங்களையும்
உறுதியான மலைகளையும்
அமெரிக்கக் குண்டுகள்
ஏன் துளைத்தன
ஓ தெரியுமே
அமைதியை நிலைநாட்ட
ஈராக்கின் இருபுறமும் ஓடுகின்ற
யூப்ரடீஸும் டைகரிஸூம்
மனித இரத்தம் சுமந்தது எதற்காக
சதாம் உசைன் ஏன் தூக்கிடப்பட்டார்
ஓ தெரியுமே
அமைதியை நிலைநாட்ட
அமெரிக்க இராணுவத்தின்
நாசகாரிக் கப்பல்கள்
எதற்காக லிபியாவை
முற்றுகையிட்டன
மனதே இல்லாமல்
மத்திய தரைக்கடல்
தொமாஹாக் ஏவுகணைகளைச்
சுமந்திருந்தது எதற்காக
கடாஃபி ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்
ஓ தெரியுமே
அமைதியை நிலைநாட்ட
கொஸாவாவிலும்
சோமாலியாவிலும்
நேட்டோ படைகள்
என்னதான் செய்து கொண்டிருந்தன
எல்லா மலைகளிலும் இரத்தக் கறைகள்
எல்லா நதிகளிலும் இரத்தத் திவலைகள்
எல்லா நிலங்களிலும் மரணத்தின் சுவடுகள்
எங்கும் எங்கெங்கும்
என்னதான் செய்தது
இந்த நேட்டோ படைகள்
ஓ தெரியுமே
அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தது
அமைதி நிலைநாட்டப்பட்டது
வாழ்க அமைதி வாழ்க அமைதி
வாழ்க அமைதியின் தூதுவர்கள்
வாழ்க அமைதியின் தூதுவர்கள்