சில வருடங்களுக்கு முன்னால்
அமலாக்கத்துறை பற்றி
அறிந்திருக்கவே மாட்டார்கள்
இந்த தேசத்தின் மக்கள்
இன்றோ
இந்த தேசத்தில்
அமலாக்கத்துறையை அறியாதவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
ஊழலை
இந்த தேசத்திலிருந்து ஒழிக்காமல்
ஓயமாட்டார்கள் போல
ஒரே நேரத்தில்
இருபது இடங்களில் சோதனை
ஒரே நேரத்தில்
ஐம்பது இடங்களில் சோதனை
ஒரே நேரத்தில்
நூறு இடங்களில் சோதனை
என்ற செய்திகள்
எங்காவது ஒரு மூலையில்
தூங்கிக் கொண்டிருப்பவனைக்கூட
தட்டியெழுப்பி
அமலாக்கத்துறை நிகழ்த்தும்
அதிரடிக் காட்சிகளைப் பார்க்கச்செய்கிறது
அப்படியென்றால்
ஊழல்கள் எல்லாம் ஒழிந்து
பொருளாதாரக் குற்றங்களெல்லாம் குறைந்து
தேனும் பாலும்
பாய்ந்தோடப்போகிறது இந்தத் தேசத்தில்
என்று நினைத்தீர்களென்றால்
உலகத்தின் பெரிய முட்டாள்
நீங்களாகத்தான் இருப்பீர்கள்
தொலைக்காட்சிகளில்
அமலாக்கத்துறையின் அரங்கேற்றம்
செய்தித்தாள்களில்
அமலாக்கத்துறையின் சாதனைகள்
அத்தனையும் அத்தனையும்
அதிகாரத்தின் கரங்களால்
திட்டமிட்டு எழுதப்படும் காட்சிகள்தான்
நீதிமன்றம் கேட்கிறது
எண்ணிலடங்கா சோதனைகளைச் செய்கிறீர்கள்
ஆனால்
குற்றம் நிரூபிக்கப்பட்டதும்
தண்டனைகள் வழங்கப்பட்டதும்
சொற்ப எண்ணிக்கையில்
இருக்கிறதே என்று
பதில்சொல்ல நேரமில்லை
அதிகாரத்தின் கண்கள்
அடுத்த இரையைக் குறிவைக்க
இரைநோக்கிப் பாய்கிறது அமலாக்கத்துறை
அரசியல் எதிரியை வீழ்த்த
அரசியல் எதிரியை அடிபணியவைக்க
எதுவும் தேவையில்லை
அமலாக்கத்துறை போதுமென்று ஆகிவிட்டது
இந்தக் காலத்தின்
சகிக்கமுடியாத அவலங்களில் ஒன்று
பாருங்கள்
எத்தனை எத்தனை சோதனைகள்
பரபரப்பிற்குப் பஞ்சமில்லாத
எத்தனை எத்தனை காட்சிகள்
கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட
குற்றங்களுக்கான தண்டனை என்ன
கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட
கோடிகள் கொட்டப்பட்டிருப்பது எங்கே
அதிகாரத்தோடு கூட்டுச் சேர்ந்துகொண்டால்
எந்தக் குற்றமும் குற்றமில்லையென்றால்
அதிகாரம் சொல்லவருவதுதான் என்ன
என்ற கேள்விகள்
எழவேயில்லையா உங்களுக்கு
அதிகாரத்தோடு பங்குபோட்டுக் கொண்டால்
எந்தப் பாவமும் பாவமேயில்லையென்றால்
அதிகாரத்தை விளங்கிக்கொள்வது எப்படி
என்ற கேள்விகள்
எழுந்திருக்க வேண்டும் தோழர்களே
வங்கிகளை ஏமாற்றிய முதலாளிகளை
என்ன செய்தார்கள்
பொதுத்துறை நிறுவனங்களைச் சூறையாடிய
பொருளாதாரத் திருடர்களை
என்ன செய்தார்கள்
குறுகிய காலத்தில்
கோடிகோடியாய்ச் சொத்துச் சேர்த்தவர்களை
என்ன செய்தார்கள்
என்றெல்லாம் கேள்விகளை
எழுப்பி சோர்ந்து போகாதீர்கள்
அவர்களுக்காகத்தான்
அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
ஒரே மாதிரியான காட்சிகளைத்
தாங்கிவரும்
ஒரே மாதிரியான கதைகளைக்
கேட்டுக் கொண்டிருப்பதற்கும்
பார்த்துக் கொண்டிருப்பதற்கும்
எரிச்சலாக இல்லையா உங்களுக்கு
முதலில் சோதனைபோடுவது
பின்னால் பேரம்பேசுவது
அப்புறமாகக் கூட்டணி வைத்துக்கொள்வது
என்பதையெல்லாம்
உண்மையைச் சொன்னால்
சகிக்கமுடியவில்லை
சகிக்கவேமுடியவில்லை
ஆனாலும்
இவர்களையும்
இவர்களுடைய எஜமானர்களையும்
மக்கள் சோதனையிடுவார்களென்றும்
இவர்களுக்கும்
இவர்களுடைய எஜமானர்களுக்கும்
மக்கள் தீர்ப்பெழுதுவார்களென்றும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!
ஜோசப் ராஜா