படம் : நைட்டிங்கேல் பறவை
மழை ஒய்ந்த பின்னும்
செடிகளிலும் கொடிகளிலும்
வழிந்து கொண்டிருக்கும்
நீரைப்போல
முடிந்த பின்னும்
அந்தப் பாடல்
நரம்புகளிளெல்லாம்
அதிர்வுகளை ஏற்படுத்தியபடி
இதயத்திற்குள் இன்னும்
வழிந்தோடிக் கொண்டிருக்கிறது
எத்தனையோ மாற்றங்களை
பார்த்துவிட்ட பின்பும்கூட
எத்தனையோ காலங்களைக்
கடந்துவிட்ட பின்பும்கூட
அந்தப் பாடல் மட்டும்
அந்தப் பாடல் மட்டும்
எனக்குத் துணையாக
என்னோடு
பயணித்துக் கொண்டே இருக்கிறது
காதலின் முதல்
சந்திப்பைப்போல
அந்தப் பாடலின்
முதல் அனுபவமும்
பரவசமூட்டக்கூடியது
மறக்கவேமுடியாதது
உங்களுக்குத் தெரியாது
அந்த நேரம்
வாழ்வின் பெருந்துயரத்தை
சுமக்க முடியாமல்
சுமந்து கொண்டிருந்த நேரம்
அந்த நேரம்
இதயத்தின் ஒவ்வொரு மூலையிலும்
குத்தியிருந்த முட்கள்
கிழித்துக் கொண்டிருந்த நேரம்
வானம் பார்த்த பூமியிலிருக்கும்
விவசாயியின் கண்களைப்போல
வசந்தத்தை எதிர்பார்த்துக்
கண்கள் காத்திருந்த நேரம்
அந்த நேரத்தில்தான்
அடர்ந்த கானகத்திற்குள்
உயர்ந்த ஒரு மரத்தின்
கிளையினில் அமர்ந்தபடி
எனக்காகப் பாடும்
பறவையைப்போல
அந்தப் பாடல்
என்னை வந்து சேர்ந்தது
இதயத்தின் காயத்தை
ஆற்றுப்படுத்தக்கூடிய அருமருந்து
அந்தப் பாடலில் இருந்தது
தாங்கிக்கொள்ளவே முடியாத
தனிமையின் உணர்வுகளைத்
தளரச்செய்யும் அற்புதம்
அந்தப் பாடலில் இருந்தது
சிக்கலான இந்தச் சமூகத்தில்
தொடர்ந்து
முளைத்துக்கொண்டே இருக்கும்
முரண்பாடுகளால்
ஒவ்வொரு நாளும்
விலகிக் கொண்டிருக்கும்
உறவுகளைப் போலல்லாமல்
நீங்கவே நீங்காத
என் காதலியின் அருகாமையைப் போல
அந்தப் பாடலும் கூட
நீங்காமல் என்னுடைய
இதயத்தில் எப்போதும்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
அந்தப் பாடல்
எந்தப் பாடல் என்று
கேட்கிறீர்களா தோழர்களே
இப்போது உங்கள் இதயத்தில்
ஒலிக்கத் தொடங்கியிருக்கிறதே
அந்தப் பாடல்தான்
நிச்சயமாக
அந்தப் பாடலேதான்!
ஜோசப் ராஜா
