அந்தப் பாடகிக்கு

நிறுத்தி விடாதே

பாடிக் கொண்டேயிரு

இது அடிமையின் ஆணை

நிறுத்திவிடாதே

பாடிக் கொண்டேயிரு

இது அடிமையின் ஆணை

உன்னுடைய பாடல்

என்னைச் சுத்தப்படுத்தும்

உன்னுடைய பாடல்

என்னைச் சுகப்படுத்தும்

உன்னுடைய பாடல்

என்னை விழிக்கச் செய்யும்

உன்னுடைய பாடல்

என்னைப் பறக்கச் செய்யும்

உன்னுடைய பாடல்

என்னை இயங்கச் செய்யும்

உள்ளும் புறமும்

வெளியாய் வியாபிக்கும்

உன்னுடைய குரல் கேட்டு

காதுகள் மகிழ்ச்சியில் சிறகடிக்க

எடையிழந்த ஒன்றாய்

எனையிழந்த நேரம்

திடமில்லா ஒன்றாய்க்

கரைகிறேன் கரைகிறேன்

இசையில் கரைந்து கரைந்து

தெளிந்து போகிறேன்

இசையின் துணைகொண்டு

எனக்குள் நீ இறங்க இறங்க

வலியத் திணிக்கப்பட்ட

அடையாளங்கள் ஏதுமில்லாமல்

விருப்பமின்றி ஏற்றப்பட்ட

சுமைகள் ஒன்றுமில்லாமல்

புன்னகை தங்கிய முகத்தோடு

அன்பின் மலர்களை ஏந்தியவாறு

புதிய மனிதனாய்ப் பிறந்து வருகிறேன்

எனக்காகவே

நீ பாடிக் கொண்டிருக்கிறாய்

உனக்காகவே

நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்

உன் பாட்டும்

என் எழுத்தும் நேர்

உன் முகம் எனக்குத் தெரியாது

தேவை என்ன இருக்கிறது

யாருக்குத் தெரியும் கடவுளின் முகம்

அந்தச் சிற்பியிடம் கேட்டேன்

சிரிப்பைப் பதிலாகத் தந்தான்

அன்பை எனக்குள் ஆழமாக விதைக்கும்

உன்னுடைய குரலில்

மனித நேசத்தை மழையாய்ப் பொழியும்

உன்னுடைய குரலில்

தெய்வீகத்தின் சாயல் இருப்பதாக

சாயல் என்ன சாயல்

உன்னுடைய குரல்

தெய்வீகமானது என்றே நம்புகிறேன்

என்னுடைய நரம்புகளில்

புத்துணர்ச்சியை நிரந்தரமாக்கினாய்

என்னுடைய இதயத்தை

காதலால் நிறைத்துவிட்டாய்

சுதந்திரத்தின் நறுமணத்தை

எனக்குக் காட்டிவிட்டாய்

கவிதையின் ஊற்றுக்களை

எனக்குள் திறந்துவிட்டாய்

இது போதும்

இது போதும்

இசையே

இசையே

கவிதை உன்னிடம்

கட்டுண்டு கிடப்பதில்

எனக்கெந்த

ஆட்சேபணையும் இல்லை

இல்லவே இல்லை

ஒருபோதும் இல்லை !

Related Articles

1 comment

முனைவர் பெ.அண்ணாதுரை 07/06/2023 - 6:18 PM

தோழர் சிறப்பு வாழ்த்துக்கள்.
இசைக்கும் கவிதைக்கும் உள்ள உறவை காதலாக கசிந்து உருகி எழுதியுள்ளீர். சிறப்பு.

Reply

Leave a Comment