முத்தம்
அன்பின் வெளிப்பாடு
முத்தம்
நம்பிக்கையின் வெளிப்பாடு
ஆனால்
கடைசி முத்தம்
அப்படியல்ல
இனிமேல்
முத்தம் கொடுக்க
அந்த மகன்
இருக்கப் போவதில்லை
என்ற நிலையில்
அந்தத் தாயின் இதயம்
எப்படித் துடித்திருக்கும்
நினைக்கும்போதே
மூளையைக்
கசக்கிப் பிழிகிறதைப் போல
தலையெல்லாம்
வலிக்கத் தொடங்குகிறது
அந்தக்
கடைசி முத்தத்தில்
அவளுடைய இதயத்தில்
வெளிப்படுத்த முடியாத துயரம்
இருந்திருக்கும் அல்லவா
அந்தக்
கடைசி முத்தத்தில்
விட்டுவிட முடியாத பெருமூச்சு
இருந்திருக்கும் அல்லவா
அந்தக்
கடைசி முத்தத்தில்
திரும்பவும் பார்க்கமுடியாத தவிப்பு
இருந்திருக்கும் அல்லவா
அந்தக்
கடைசி முத்தத்தில்
காதலித்ததற்காகவா
படுகொலை செய்யப்பட்டான்
என் அன்பு மகன்
என்ற பெருங்கோபம்
இருந்திருக்கும் அல்லவா
அந்தக்
கடைசி முத்தத்தில்
நிறைந்திருக்கும்
அன்பின் கேள்விகளுக்கு
ஆற்றாமையின் கேள்விகளுக்கு
கண்ணீரின் கேள்விகளுக்கு
கோபத்தின் கேள்விகளுக்கு
உங்களிடம் பதிலிருக்கிறதா
என்ன செய்யப் போகிறீர்கள்
எதையுமே சரிசெய்யாமல்
எதற்காக
வெட்கமே இல்லாமல்
திரிந்து கொண்டிருக்கிறீர்கள்
என்று கேட்டால்
எதையுமே சரிசெய்யாமல்
எதற்காக
வாய்கிழியப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
என்று கேட்டால்
எதையுமே சரிசெய்யாமல்
எதற்காக
உயிரோடு திரிந்து கொண்டிருக்கிறீர்கள்
என்று கேட்டால்
உங்களுக்குக் கோபம் வருமோ
அப்படியென்றால்
அப்படியென்றால்
அப்படித்தான் கேட்பேன்!
ஜோசப் ராஜா
