அதிகாரத்திற்கு எதிரான மல்யுத்தம்

நீதிக்கான போராட்டங்கள் நீண்டதுதான்

புரிந்துகொள்கிறேன்

நியாயத்திற்கான பயணங்கள் கடினமானதுதான்

அதையும் புரிந்துகொள்கிறேன்

ஆனாலும்கூட

இந்தப் பாலியல் குற்றங்களைப்பற்றி

மீண்டும்மீண்டும் எழுதநேர்வது

என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது

 

ரு நாகரீகமான வாழ்க்கையை

ஒரு நாகரீகமான சமூகத்தை

இந்த தேசத்தின் பெண்களுக்கு

கொடுக்கமுடியாமல் போன குற்றத்தை

முள்முடியைப்போலச் சுமந்துகொண்டிருக்கிறேன்

நிம்மதியான இரவுகளை

அமைதிகுலையாத அதிகாலையை

பாதுகாப்பான பயணங்களை

இந்த தேசத்தின் பெண்கள்

அனுபவிக்க முடியாமல்போன அவலத்தை

சிலுவையைப்போல சுமந்துகொண்டிருக்கிறேன்

 

ங்கள் தலையிலும் முள்முடி

உணர்கிறீர்களா நீங்கள்

உங்கள் தோள்களிலும் சிலுவைமரம்

உணர்கிறீர்களா நீங்கள்

உங்கள் கண்களுக்கு முன்னால்தான்

எல்லாமும் நடந்துகொண்டிருக்கிறது

பார்க்கிறீர்களா நீங்கள்

 

தேசத்தின் கனவுகளைத்

தோள்களில் சுமந்து திரிந்தவர்கள்

தேசத்தின் லட்சியங்களை

நெஞ்சத்தில் ஏந்திக் கொண்டவர்கள்

தேசத்தின் பெருமைகளை

ஒவ்வொரு மைதானத்திலும் மீட்டெடுத்தவர்கள்

இரவும் பகலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

 

தேசத்தின் வெற்றிக்காக

உடலெங்கும் காயங்களைச் சுமந்தவர்கள்

இதயத்தில் நிறைந்திருக்கும்

ஆயிரமாயிரம் காயங்களுக்காக

நீண்டநாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

 

னசாட்சியே இல்லாத

மாபெரும் அமைப்பை நோக்கி

மல்யுத்தம் நடத்திக் கொண்டிருப்பவர்களை

பார்க்கப்பார்க்கப் பதறுகிறது நெஞ்சம்

இறுகப்பூட்டப்பட்டிருக்கும் நீதியின் கதவுகளை

திறக்கச்சொல்லிக் கேட்கும்

அந்த எளியவர்களின் குரல்களைக்

கேட்ககேட்க உடைகிறது இதயம்

தேசத்திற்குப் பெருமைசேர்த்த

அந்த தேசத்தின் மகள்களை

இப்படி உடைந்த இதயத்தோடும்

இப்படி வாடிய முகத்தோடும்

போராட வைத்ததற்காக

உண்மையிலேயே உங்களுக்கு

வெட்கமாக இல்லையா

 

ங்களுடைய மெளனமும்

உங்களுடைய பாராமுகமும்

அத்தனை தீமைகளையும்

இழுத்துவந்து உங்கள் வாசலில் போடும்

அதுவரையிலும் காத்திருக்கப் போகிறீர்களா

எண்ணிலடங்கா பாலியல் குற்றங்கள்

எதற்காக மெளனமாக இருக்கிறீர்கள்

ஒவ்வொரு துறையிலும் ஓயாத சீண்டல்கள்

எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள்

 

திகாரத்தின் கரங்கள்

இப்படித்தான் நீளுமென்றால்

அந்த அதிகாரத்தை வழங்கிய கரங்கள்

எதற்காக முடங்கியிருக்க வேண்டும்

அதிகாரத்தின் கால்கள்

இப்படித்தான் நடக்குமென்றால்

அந்த அதிகாரத்தை வழங்கிய கரங்கள்

எதற்காக முடக்காமல் இருக்கவேண்டும்

 

ப்போதும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்

நடப்பதெல்லாம் எங்கோ நடக்கிறதென்றும்

நிகழ்வதெல்லாம் யாருக்கோ நிகழ்கிறதென்றும்

ஆனால்

அந்த நச்சுப்பாம்பு

உங்கள் காலைச்சுற்றியதை

கவனிக்கவில்லை என்பதைச்

சொல்லவேண்டிய கடமை எனக்கிருக்கிறது

 

மீண்டும்

அந்த முகங்களைப் பாருங்கள்

மீண்டும்

அந்தக் குரல்களைக் கேளுங்கள்

மீண்டும்

அந்த இதயங்களை நெருங்குங்கள்

நீங்கள் மனிதர்களாக இருப்பதன் அர்த்தமென்பது

அவர்களை நோக்கி

ஆதரவுக் கரங்களை நீட்டுவதுதான்

நீங்கள் மனிதர்களாக இருப்பதன் அர்த்தமென்பது

அவர்களுக்காக உங்கள்

ஆதரவுக் குரல்களை எழுப்புவதுதான் !

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 08/05/2023 - 5:01 PM

அவசியமான வரிகள் தோழர்.
“ஒரு நாகரீகமான வாழ்க்கையை
ஒரு நாகரீகமான சமூகத்தை
இந்த தேசத்தின் பெண்களுக்கு
கொடுக்கமுடியாமல் போன குற்றத்தை
முள்முடியைப்போலச் சுமந்துகொண்டிருக்கிறேன்
நிம்மதியான இரவுகளை
அமைதிகுலையாத அதிகாலையை
பாதுகாப்பான பயணங்களை
இந்த தேசத்தின் பெண்கள்
அனுபவிக்க முடியாமல்போன அவலத்தை
சிலுவையைப்போல சுமந்துகொண்டிருக்கிறேன்”
– நெஞ்சை தெய்க்கும் உணர்வுகள். தீர்வுக்கு நம்மிடம் எந்த அதிகாரமும் இல்லையே என்ற கவலையையும் கோவத்தையும் கொண்டுவருகிறது.
”பெண்கள் வெறும் உற்பத்தி கருவிகள்” என்று பார்க்கும் இந்த மனித மனநிலை மாறாதவரை அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் குறைய வாய்ப்பில்லை. ஆணாதிக்கமே அரசாட்சியாகவும் அதிகாரமாகவும் கிளை பரப்பியிருக்கும் இந்த ஜனநாயமற்ற அரசியல் சூழலில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் குறித்த வலிகளுக்கும் பதிவுகளுக்கும் பதில் இருக்க வாய்ப்பு குறைவே. இருந்தாலும் இந்த அரசும் அதிகாரமும் எல்லோருக்குமான உணர்வுகளின் மையம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக இலக்கியத்தின் வழியாகவும், பல்வேறு மக்கள் கருத்தியல்கள் அடங்கிய போராட்டங்களின் வழியாகவும் அதிகாரத்திற்கு எதிரான குரலதிர்வுகளை நாம் எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொருவரின் தேவையுமாகிறது. அதனை நீங்கள் உங்கள் கவிதையினூடே செய்துவிடுகின்றீர்கள். அதனை வாசித்து அதற்குள் இருக்கும் உணர்வு கடத்தாலால் பெரும் மன வருத்தத்திற்கும் ஆணாய் பிறந்துவிட்ட இப்பிறவிக்குமான கவலையை உணரும் வகையில் நானும் உங்களின் படைப்பனுபவ கோபத்துடன் மெல்லிய இழையென ஒன்றிபோக விழைகிறேன் தோழர்

Reply
பெரணமல்லூர் சேகரன் 08/05/2023 - 7:59 PM

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட
மல்யுத்த வீராங்கனைகளின் நியாயப் போராட்டம்
தடித்தனம் மிக்க ஆளும் வர்க்கத்தை அசைக்கவில்லை என்னும்போது இயல்பாகவே கோபம் வரவேண்டும்.
அப்படி வராத நிலையில் ஜோசப் ராஜா போன்ற கவிஞர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

நாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களைத் தனக்காக அர்ப்பணிக்கக் கேட்கும் நாடாளும் கயவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் எனத்தூண்டும் கவிஞரின் கவிதையை வாசியுங்கள். சினத்தை சுவாசியுங்கள். அந்த வெப்பப் பெருமூச்சில் ஆள்வோர் பஸ்பமாகட்டும்.

Reply

Leave a Comment