அணையா நெருப்பு

கொரோனா இரண்டாவது அலையின் அலைக்கழிப்பு

ணையாமல் எரிந்து கொண்டிருக்கும்

அந்த நெருப்பை

இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

என்னைப் போலவே

பார்த்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு கண்களிலும்

பற்றியெரிந்து கொண்டிருக்கிறது அந்த நெருப்பு

ஆயிரக்கணக்கான ஆண்டுகள்

பசியோடிருந்த கொடிய மிருகத்தைப்போல

கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது

எரிவதற்காகவே பிறந்ததைப் போல

மயானங்களை நோக்கிச்

சென்றுகொண்டே இருக்கின்றன

உயிரற்ற உடல்கள்

 

தைப்போன்ற

காட்சிகளை எல்லாம்

வெவ்வேறு தேசங்களில்

வெவ்வேறு வகைகளாகப்

பார்த்துக் கொண்டிருந்தோம்

இங்கேயும் விடியும் என்று தெரியாமல்

இருளைப் பற்றிக்கொண்டிருந்த

அதிகாரத்தின் கைகள்

எல்லாம் கையைமீறிப் போனபின்பு

என்ன செய்வதென்று தெரியாமல்

வெறுங்காற்றில் வெறுமனே

அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றன

மதிப்புமிக்க மனித உயிர்களைக் காட்டிலும்

அதிகாரத்தின் ஆசைகளும் இலட்சியங்களும்

வேறுவேறாக இருக்கின்றன

அதனால்தான்

முதலாளிகளின் கைகளில்

தேசத்தைக் கொடுத்துவிட்டு

ஓட்டுவேட்டைக்காக அங்குமிங்கும்

ஓடிக்கொண்டிருக்கிறது அதிகாரம்

 

ண்மை என்னவென்றால்

தொலைதூரத்தில்

எரிந்து கொண்டிருந்த நெருப்பு

நம்மை நெருங்கி வந்திருக்கிறது

தொலைதூரத்தில்

தோண்டப்பட்ட சவக்குழிகள்

நமக்குப் பக்கத்திலும் தோண்டப்படுகின்றன

மின்மயானங்களின் மின்சாரம்

அணைக்கப்படுவதே இல்லை

உயிரற்ற உடல்களை

ஒவ்வொன்றாக எரித்துக் கொண்டிருக்கும்

அந்த மயான மனிதர்களின் கைகள்

ஓய்வில்லாமல் எரியூட்டிக் கொண்டிருக்கின்றன

ஒவ்வொரு தகன மேடைகளிலும்

எரியூட்டப்பட்ட உடல்களின் எஞ்சிய சாம்பலானது

கனத்த மெளனத்துடன்

கலங்கிய இதயங்களின் கைகளை

நிறைத்துக் கொண்டேயிருக்கின்றன

 

த்தனைக் கொடுமையான

இரவுகள் வாய்க்குமென்று

எப்போதும் எண்ணியதில்லை

கண்களை மூடினால்

ஆக்சிஜன் உருளைகளோடு

அலைந்து திரியும் மனிதர்கள்

அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

ஒவ்வொரு மருத்துவமனைகளிலும்

உயிர்பிடித்துக் காத்துக் கொண்டிருக்கும்

உயிரச்சங்கள் நிறைந்த ஒவ்வொரு முகங்களும்

என்னை நோக்கி எழுந்து வருகின்றன

அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்

அந்தச் சுடுகாட்டு நெருப்பு

என்னைச் சுற்றி எரிந்து கொண்டிருப்பதாக

உணர்கிறேன் நான்

 

ங்களுடைய அன்பிற்குரியவர்கள்

அனாதைகளைப் போல

எரிந்து கொண்டிருப்பதை

நிறைந்த வேதனையிலும்

வழிந்த கண்ணீரோடும்

பார்த்துக் கொண்டிருக்கும்

ஓவ்வொரு உறவுகளோடும்

ஒன்றுகலந்து போகிறேன்

விழுந்து புரண்டு

அழ முடியாத மரணங்கள்

கடைசியிலும் கடைசியாக

முகம்பார்க்க முடியாத மரணங்கள்

இறுதி ஊர்வலமில்லாத மரணங்கள்

எரியூட்டப்படுவதற்கு முன்னால்

அன்பின் உதடுகளால் முத்தமிடப்படாத மரணங்கள்

அவசரஅவசரமாக நெருப்பிடம்

ஒப்படைக்கப்படும் மரணங்கள்

எந்தக் கண்கொண்டு பார்ப்பேன்

எத்தனைக் கவிதைகளில் கலங்குவேன்

 

ரிந்து கொண்டிருக்கும் சடலங்களுக்கு

காத்திருக்கும் சடலங்கள் துணையாக இருக்கின்றன

காத்திருக்கும் சடலங்களுக்கு

சென்றுகொண்டிருக்கும் சடலங்கள்

துணையாகப் போகின்றன

சென்றுகொண்டிருக்கும் சடலங்களை

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்

தடுப்புமருந்துகளின் தட்டுப்பாட்டால்

இடமின்மைப் பிரச்சனையால்

போராடிக் கொண்டிருக்கும் உயிர்கள்

தொடர்ந்து செல்லப் போகின்றன

இதற்கெல்லாம்

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அர்த்தமென்ன

எஞ்சியிருப்பவர்களே சொல்லுங்கள்

சுடுகாடுகள் நிரம்பி வழிகிறதென்றால்

கல்லறைகளில் இடமில்லாமல் போகிறதென்றால்

நம்முடைய மருத்துவமனைகள் எப்படியிருக்கின்றன

 

ந்த தேசத்தின் தலைநகரமே

ஆக்சிஜன் பற்றாக்குறையால்

மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் போது

ஒட்டுமொத்த தேசமும்

எப்படிச் சுவாசிக்க முடியும் சொல்லுங்கள்

இந்த தேசத்தின் தலைநகரமே

நோயுற்ற மக்களை அங்குமிங்கும்

அலையச் செய்யும் போது

ஆரம்ப சுகாதார நிலையம்கூட அமைக்கப்படாத

கிராமங்கள் அத்தனையும்

அழிந்துபோக வேண்டுமா சொல்லுங்கள்

இந்தத் தேசத்தின் தலைநகரமே

பிணவாடையால் சூழ்ந்திருக்கும் போது

இந்த தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்

எந்த முகத்தைக் கொண்டு தைரியப்படுத்துவது

ந்த நேரத்திலும்

இந்த முட்டாள்களுக்கு

நல்ல பெயரை

நல்லது செய்துதான் வாங்கவேண்டுமென்று

சொல்லித்தர வேண்டிய துர்பாக்கியமும்

இருக்கத்தான் செய்கிறது என்பதை

நினைக்க நினைக்க

அதிகரிக்கும் மன அழுத்தத்தையும்

புடைத்தெழும் நரம்புகளின் சூட்டினையும்

உங்களோடும் பகிர்ந்து கொள்ளத்தான்

உண்மையைச் சொன்னால்

உங்களைப் பற்றிக் கொள்ளத்தான்

இந்த இரவிலும் எரிந்து கொண்டிருக்கிறேன்

 

ந்த நோய்த்தொற்றிற்கு

தன்னுடைய கர்ப்பிணி மனைவியைப்

பலிகொடுத்த கணவனொருவன்

இதயத்தைப் பிடுங்கிவிட்டீர்களேயென்று

அடக்கமுடியாத ஆத்திரத்தில்

மருத்துவமனையின் உள்ளும்புறமும்

எதிரொலிக்கும்படியாக ஓங்கிச் சபித்துவிட்டு

பாதுகாப்பு உடைகளோடு வெள்ளைத் துணியில்

இறுகச் சுற்றப்பட்டிருக்கும் தன்னுடைய மனைவியின்

உயிரற்ற உடலை எரியூட்டிவிட்டு

உயிரற்ற ஒருவனாய்த் திரும்பிக் கொண்டிருக்கும் போது

அவனைப் பேட்டி எடுக்கிறாள் ஊடகப் பெண்ணொருத்தி

வாடிய முகத்தோடும் வழியும் கண்ணீரோடும்

நிதானமாகச் சொல்கிறான் அவன்

 

ந்த நோய்

கொடுமையானதென்று புரிந்து கொள்கிறேன்

ஆனால்

இந்த அரசாங்கத்தின்

நடவடிக்கைகளும் நடைமுறைகளும்

அதைவிடக் கொடுமையாக இருக்கின்றன

இனிமேல்

என்னுடைய மனைவியையும்

அவள் வயிற்றிலிருந்த எங்கள் குழந்தையையும்

நினைக்கும் போதெல்லாம்

மருத்துமனையிலும் சுடுகாட்டிலும் நாங்கள்

அலைக்கழிக்கப்பட்டதுதான்

ஞாபகம் வரும் என்று

அவன் சொல்லச்சொல்ல

அழுதுவிடுகிறாள் அவள்

 

எத்தனை வசதியான மருத்துவமனைகளை

உருவாக்கியிருக்கிறது என்ற கேள்வியை

இப்போதே கேட்கத் தொடங்கினீர்களென்றால்

அந்தக் கேள்விக்கான விடையை

இப்போதே தேடத் தொடங்கினீர்களென்றால்

அடுத்த அலையிலாவது

சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கப் பார்க்கலாம் !

 

ஜோசப் ராஜா

01.05.2021

Related Articles

Leave a Comment