விசாரணை
என்ற பெயரில்
காவல் நிலையம்
அழைத்துச் சென்று
அடித்துக் கொல்லப்பட்ட
அடித்தே கொல்லப்பட்ட
அஜித்குமாரின் உடலில்
முப்பதுக்கும்
மேற்பட்ட இடங்களில்
காயங்கள்
இருந்ததாகச் சொல்கிறது
பிரேதப்
பரிசோதனை அறிக்கை
அந்தக் காயங்கள்
அஜித்குமாரின்
உடலில் மட்டும்
இருக்கின்ற காயங்களா?
இல்லை
இல்லவே இல்லை
இதுவரையிலும்
இவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கின்ற
சுதந்திரத்தின் மீதும்
இதுவரையிலும்
இவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கின்ற
ஜனநாயகத்தின் மீதும்
இதுவரையிலும்
இவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கின்ற
தனிமனித உரிமையின்மீதும்
இதுவரையிலும்
இவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கின்ற
நீதியமைப்பின் மீதும்
நீண்ட காலங்களாக
ஆறாமல் இருக்கும்
காயங்கள்தான்
நீண்ட காலங்களாக
அழியாமல் இருக்கும்
காயங்கள்தான்
இந்தப் படுகொலைகளுக்கு
முடிவே இல்லையா
என்ற கேள்விகள்
கொல்லப்பட்ட
அஜித்குமாரைப்போல
நீங்களும்
மனிதர்களாக இருப்பதால்
உங்களுக்குள்ளும்
எழுமென்றுதான் நம்புகிறேன்
அதிகாரத்தை மட்டுமே
வைத்துக்கொண்டு
மக்களை அடக்கிவிடலாம்
என்று நினைக்கும்
அதிகாரத்தை மட்டுமே
வைத்துக்கொண்டு
மக்களை
அச்சுறுத்திவிடலாம்
என்று நினைக்கும்
முதலாளித்துவ அமைப்பிற்கு
முதலாளித்துவ அரசிற்கு
முடிவுரை எழுத
முயற்சி செய்தால்
தப்பித்து விடலாம்
இப்படிப்பட்ட
படுகொலைகளில் இருந்து
தோழர்களே
சக மனிதனை
இவ்வளவு
மூர்க்கத்தனமாக
அடித்துக் கொல்லும்
அதிகாரம் கொண்ட
இந்தச் சமூக அமைப்பை
எப்படிச்
சகித்துக் கொள்கிறீர்கள்?
நினைத்துப் பாருங்கள்
அந்தக் காயங்கள்
அவனை
எப்படியெல்லாம்
கதற வைத்திருக்கும்
எவ்வளவு நேரம்
எவ்வளவு வலிகளைத்
தாங்கித் தாங்கி
மரணத்தின் நேரத்தை
நெருங்கியிருப்பான்
மங்கலான
அந்தக்
கண்களுக்கு முன்னால்
என்னென்ன காட்சிகள்
ஓடியிருக்கும்
தாகத்தில்
தவித்துக் கொண்டிருந்த
அந்த உதடுகள்
கடைசியாக
யாருடைய பெயரையெல்லாம்
உச்சரித்திருக்கும்
வலியின் உச்சத்தில்
தாங்கமுடியாத
வேதனையின் முடிவில்
கடைசியாக
அவன் மரணமடையும்போது
இந்தச் சமூகத்தையும்
இந்த அதிகாரத்தையும்
அதிகாரத்தை
இயக்கிக் கொண்டிருக்கும்
இந்த அரசையும்
எப்படிச் சபித்திருப்பானென்று
நினைத்துப் பார்க்கிறேன்
எல்லா சாபங்களும்
எல்லா சாபங்களும்
மிச்சமில்லாமல் பலிக்கட்டும்
என்றுதான் விரும்புகிறேன்
சொல்லுங்கள் தோழர்களே
அந்தக் காயங்களுக்கு
மருந்திட வேண்டாமா
அத்தனை வலிகளையும்
கடந்திட வேண்டாமா!
ஜோசப் ராஜா
