ஒரு வயதைப் பூர்த்திசெய்யும்
மகனோடு
அகதிமுகாமில் இருக்கும் தாய்
இதயத்தைத் திறந்து
தன்னுடைய செல்ல மகனுக்கு
எழுதுகிறாள் கடிதம்
அந்தக் கடிதத்தை வாசித்து
என்னிதயம்
உடைந்து நொறுங்கியதைப்போல
உங்களுடைய இதயமும்
உடைந்து
உடைந்து
நொறுங்க வேண்டுமென்று
விரும்புகிறேன் நான்
இன்றோடு இயாஸ்
ஒருவயதைப் பூர்த்தி செய்கிறாய்
சொல்லில் விவரிக்கவே முடியாத
வருடம் இது
இந்த முதல் வருடத்தை
யுத்தம் நிறைத்துக்கொள்ளும் என்றும்
போர் விமானங்களின்
ஏவுகணைகளின்
உளவுபார்க்கும் ட்ரோன்களின்
ஓயாத சத்தங்களை
நீ கேட்க நேருமென்றும்
கணிக்கமுடியவில்லை என்னாலும்
சுகாதாரமான உணவு
தூய்மையான தண்ணீர் என
உன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக
நானும் அப்பாவும்
போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒவ்வொரு நாளும்
நீ வளர்வதைப் பார்க்கப்பார்க்க
மகிழ்ச்சியும் துயரமும்
மாறிமாறி எழுகிறது எனக்குள்
பாதுகாப்பான இருப்பிடம் இல்லாமல்
வண்ணமயமான பொம்மைகள் இல்லாமல்
மென்மையான ஆடைகள் இல்லாமல்
மிகுந்த கவலையோடும்
மிகுந்த மன அழுத்தத்தோடும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
நானும் அப்பாவும்
உன்னைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்
எதையும்
உன்னால் புரிந்துகொள்ள முடியாது
ஆனாலும் என் அன்பே
உனக்கும் உன்னைப்போன்ற குழந்தைகளுக்கும்
இதெல்லாம் நடக்கவே கூடாது
ஆனாலும் என் அன்பே
சென்ற கோடைக்கு முன்னால்
நீ பிறக்கும்போதே
அழகான ஆடைகளையும்
அழகழகான படுக்கை விரிப்புகளையும்
வாங்கி வைத்தேன்
வெப்பத்திலிருந்து
உன்னைக் காப்பதற்காக
குளிர்சாத இயந்திரத்தையும் வாங்கினேன்
அழகழகான பொம்மைகள்
அத்தனையும் அத்தனையும்
ஒன்றுமில்லாமல் நாசமாய்ப் போய்விட்டன
உன்னுடைய கல்விப்பயணத்தை
மாண்டிசோரி கல்வி முறையில்
நீ தொடங்கவேண்டுமென்று
சில புத்தகங்களைக்கூட
வாங்கி வைத்திருந்தேன்
ஆனாலும் என் அன்பே
என்னுடைய எல்லாத் திட்டங்களிலும்
என்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளிலும்
போர் என்பது மட்டும்
இல்லாமல் இருந்தது
தொடர் இடம்பெயர்தலில்
கடைசியாக அந்தப் புத்தகங்களும்
இல்லாமல் போனது
இன்று உன்னுடைய
இரண்டாவது ஆண்டிற்குள் நுழைகிறாய்
உன்னை
எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்
உனக்கான கல்வியை
எப்படிக் கொடுக்க வேண்டும்
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்
ஆனால்
நான் படித்த புத்தகங்களும்
நான் பார்த்த மனிதர்களும்
போருக்கு நடுவில்
குழந்தையை எப்படி வளர்ப்பது
காய்கறிகளும் பழங்களும் இல்லாமல்
உணவு தயாரிப்பது எப்படி
என்பதை மட்டும்
சொல்லிக் கொடுக்கவில்லை
ஏவுகணைகளும்
போர்விமானங்களும்
தாலாட்டுப் பாடல்களை கேட்கவிடாமல்
குழந்தைகளை அச்சுறுத்தும்போது
என்ன செய்ய வேண்டும்
பூங்காவைப் பார்க்கவேண்டிய
குழந்தைகள்
கட்டிட இடிபாடுகளையும்
கம்பி வேலிகளையும்
அகதிமுகாமின் கூடாரங்களையும்
பார்த்துக் குழப்பத்தில் இருக்கும்போது
என்ன செய்ய வேண்டும்
உணவுப் பற்றாக்குறையும்
தண்னீர்ப் பற்றாக்குறையும்
குழந்தைகளைத் தாக்கும்போது
என்ன செய்ய வேண்டும்
எந்த வழிகாட்டல்களும் இல்லை
எப்படிப்பார்த்தாலும்
இதுவொரு பேரழிவான வருடம்தான்
என்னை மன்னித்துவிடு மகனே
இந்தப் போருக்கான விலையாக
நீயும் உன்னைப் போன்றவர்களும்
உங்களுடைய முதல்வருடத்தைக்
கொடுத்திருக்கிறீர்கள்
நீ மட்டுமல்ல மகனே
குளிரிலும் பசியிலும்
உன்னைப்போன்ற நிறையக் குழந்தைகள்
ஓயாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்
சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்
குழந்தைகளின் உடல்களெல்லாம்
கொப்புளங்கள் நிறைந்திருக்கின்றன
பசியால் அழும் குழந்தைகளை
ஒரு தாயாகப்
பார்க்க முடியவில்லை என்னால்
எனக்கு நானே
இப்படித்தான் கேட்டுக் கொள்கிறேன்
போர் என்ற பெயரில்
குழந்தைகளைப் பசியோடிருக்க
எப்படி இந்த உலகம் அனுமதித்தது
பாலஸ்தீனத்தின் குழந்தைகள்
பசியோடும் வலியோடும்
ஓயாமல் அழுது கொண்டிருக்கும்போது
எப்படி இந்த உலகம்
அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது
ஆனபோதிலும்
என் அன்பு மகனே
களங்கமில்லாத உன் புன்னகைதான்
எங்களுடைய எல்லாக் காயங்களுக்கும்
மருந்தாக இருக்கிறது
எப்படியும்
இந்தப் போர் முடிந்துவிடும்
இழந்த சொர்க்கத்தை மீட்டெடுப்போம்
பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே!
ஜோசப் ராஜா
1 comment
போரின் வலிகளைத் தன் அன்பு மகனுக்கு எழுதும் தாயைக் காட்சிப்படுத்தி யுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
ஆனாலும் போர் நிறுத்தம் நிகழும் எனும் நம்பிக்கை நங்கூரமிடுகிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை.
மாற்றம் நிகழும்தானே. அதுதானே மாறாத தத்துவம்.
வாசியுங்கள்
கவிஞர் கூறுவதைப் போல என்னை பாதித்ததைப் போல உங்களையும் பாதிக்கும் இக்கவிதை.