காட்சி : மீண்டும் மீண்டும் அதே காட்சிதான்
இடம் : தெற்கு காஸாவின் ஓர் அகதிமுகாம்
நேரம் : இன்னும் விடியாத அதிகாலை
தெற்கு காஸாவின்
அல் மவாசி பகுதியிலிருக்கும்
அந்த அகதி முகாமில்
நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன
கூடாரங்கள்
யுத்தம் தொடங்கியதிலிருந்தே
அங்குமிங்கும்
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்
இப்போது அந்தக் கூடாரங்களுக்குள்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்
வீடுகளை இழந்தவர்கள்
வேண்டியவர்களை இழந்தவர்கள்
உடைமைகளை இழந்தவர்கள்
உறக்கத்தை இழந்தவர்கள்
பாதுகாக்கப்பட்ட பகுதி
என்று அறிவிக்கப்பட்டதால்
தங்களின் பிஞ்சுக் குழந்தைகளோடும்
தங்கள் குடும்பத்தின் வயதானவர்களோடும்
கொஞ்ச நேரம் நிம்மதியாக
கொஞ்ச நேரம் அமைதியாக
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் கனவிற்குள்
சுதந்திர பாலஸ்தீனத்தின்
அழகான கொடி
அசைந்து கொண்டிருக்கிறது
அவர்களின் கனவிற்குள்
அவர்களின் தோட்டங்களில்
அடர்ந்திருக்கும் ஆலீவ் மரங்கள்
நிறைந்த விதைகளோடு
அறுவடைக்குக் காத்திருக்கின்றன
அவர்களின் கனவிற்குள்
ஆலீவ் மரங்களின்
கிளைகளில் உட்கார்ந்தபடி
பாலஸ்தீனத்தின் சூரியப்பறவைகள்
தர்வீஷின் கவிதைகளை
ஆலாபனை செய்துகொண்டிருக்கின்றன
அவர்களின் கனவிற்குள்
பிரிவினைவாதிகளின் கரங்களால்
கட்டியெழுப்பட்ட பிரிவினைச் சுவர்கள்
மண்ணோடு மண்ணாக நொறுக்கப்பட்டு
இதுவரையிலும்
இழந்த நிலங்கள் மீட்கப்பட்டு
எங்கும் எங்கெங்கும்
பாலஸ்தீனத்தின் குழந்தைகள்
சுதந்திரமாக சுதந்திரமாக
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் கனவிற்குள்
அபகரித்துக்கொள்ளப்பட்ட வீடுகள்
திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில்
தங்கள் கைகளில் இருக்கும்
துருப்பிடித்த சாவிகளோடும்
துள்ளிவரும் உவகையோடும்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
இழந்த சொர்க்கத்தை நோக்கி
கனவுகள் கனவுகள்தான்
கனவுகளில்
கொஞ்சநேரம் வாழ்ந்து கொள்ளலாம்
கனவுகளில்
கொஞ்சநேரம் சிரித்துக் கொள்ளலாம்
ஆனால்
இந்த உலகத்தில்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
கனவு காண்பதற்கும்
உரிமை இருக்கிறதா என்ன
அந்த அகதி முகாம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்
அதிகாலை நேரத்தில்
குறிபார்த்து வீசப்பட்ட
குண்டு வெடித்துச் சிதறுகிறது
அவ்வளவுதான்
உறக்கத்திலிருந்த மனிதர்கள்
துண்டுதுண்டாக வெடித்துச் சிதறுகிறார்கள்
அவர்களின் கனவுகள்
சில்லுசில்லாக நொறுங்கிப் போகின்றன
விழுந்த குண்டு வெடித்த இடத்தில்
ஏற்பட்ட பள்ளம் மட்டும்
முப்பது அடி இருக்குமாம்
நினைத்துப் பாருங்கள் மனிதர்களை
இதுவரை நடந்த தாக்குதலிலேயே
இதுதான் கொடூரமானது என்று
குற்றம் சாட்டுகிறார்கள் எல்லோரும்
எல்லாக் கேள்விகளுக்கும்
ஒரே பதிலைச் சொல்லக்கூடியவனோ
நான் ஹமாஸைத்தான்
குறிவைத்தேன் என்கிறான்
மருத்துவமனைகளில் குண்டுபோட்ட பிறகும்
பள்ளிக்கூடங்களில் குண்டுபோட்ட பிறகும்
வழிபாட்டுத்தலங்களில் குண்டுபோட்ட பிறகும்
வெட்கமேயில்லாமல்
இதையேதான் சொன்னான்
வரலாறு நெடுகிலும்
பாசிஸ்டுகள்
ஒரேமாதிரிதான் பொய் சொல்கிறார்கள்
ஒரேமாதிதான் படுகொலை செய்கிறார்கள்
கடைசியில்
கடைசியில்
ஒரேமாதிரிதான் செத்துத் தொலைக்கிறார்கள்!
ஜோசப் ராஜா
1 comment
போர் வெறியர்களுக்கு அகதி முகாம் ஒரு பொருட்டல்ல. பள்ளிக்கூடங்கள் ஒரு பொருட்டல்ல. மருத்துவமனைகள் ஒரு பொருட்டல்ல.
எனவே அனைத்தையும் இழந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் வசிக்கும் அகதிமுகாம் மீதும் குண்டு மழை பொழியும் இஸ்ரேலின் அட்டூழியத்தை கவிஞர் ஜோசப் ராஜாவின் வரிகளில்
தெரிந்து கொள்வோம். எதிர்வினையாற்றுவோம்.