வேதம் ஓதும் சாத்தான்

லக அமைதிக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் நல்வாழ்க்கைக்காகவும், மனிதகுல மேன்மை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும் ( பயங்கரமான காட்சிகள் உங்கள் கண்களை நிறைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ) தொடங்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பின் எழுபத்தைந்தாவது ஆண்டுவிழா அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் இறங்கியிருக்கிறார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம், ரஷ்யா உக்ரைன் யுத்தம் என இந்த உலகம் யுத்த நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு யுத்தங்கங்களுக்கும் பின்னணியில் இருக்கும் நேட்டோவின் ஒவ்வொரு அசைவும் கவனிக்க வேண்டியது. இதுவரையிலும் கொடுத்தது போதாமல் உக்ரைனிற்கு இன்னும் எவ்வளவு ஆயுதங்கள் கொடுக்கலாம், உக்ரைனிற்காக இன்னும் எவ்வளவு பணத்தை இறைக்கலாம் என்பதே மையமான விவாதப்பொருளாக இருக்கப்போகிறது. அதோடுகூடவே சீனாவின் வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என்பதும், ஆசியாக் கண்டத்தில் நேட்டோவின் கால்களை எப்படி அகலப்பதிப்பது என்பதும் விவாதப்பொருளாக இருக்கப்போகிறது.

எது எப்படியாயினும் பேரழிவைத்தவிர அவர்கள் எதையும் விரும்பப் போவதில்லை. எது எப்படியாயினும் பேரழிவைத்தவிர அவர்கள் எதையும் செய்யப்போவதில்லை. இதுவரையிலான நேட்டோவின் வரலாறு காட்டும் உண்மைகள் அப்படித்தான் இருக்கின்றன. பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இரத்தம் நேட்டோவில் இணைந்திருக்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் படிந்திருக்கிறது. எதுவும் அப்படியே இருந்துவிடாது. நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கிறது, இன்னும் முற்றிலும் மாறுமென்று உறுதியாக நம்புகிறேன். இந்த நேரத்தில் “பெருந்தொற்றும் யுத்தமும்” தொகுப்பிலிருந்து நேட்டோவிற்காக எழுதப்பட்ட “வேதம் ஓதும் சாத்தான்” என்ற கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். வாசியுங்கள்.

வேதம் ஓதும் சாத்தான்

யுத்தம்

ரஷ்யாவிற்கும்

உக்ரைனுக்கும் தான்

ஆனால்

உலகத்தின் கண்களெல்லாம்

நேட்டோவின் ஒவ்வொரு அசைவையும்

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன

உக்ரைனின் மீது

போர்தொடுத்த ரஷ்யாவும் கூட

நேட்டோவைத்தான்

காரணமாகச் சொல்லியிருக்கிறது

நியாயத்தின் பக்கம் நிற்கும்

உலகத்தின் ஒவ்வொரு உதடுகளும்

இந்த யுத்தம்

தொடங்கப்பட்ட நாளிலிருந்தே

நேட்டோவைத்தான்

கடுமையான மொழியில்

விமர்சித்துக் கொண்டிருக்கின்றன

உக்ரைனின் அதிபர்

நேட்டோவைப் பார்த்துக் கெஞ்சுகிறார்

நேட்டோவை உதவிக்கு அழைக்கிறார்

நேட்டோவிடம் ஆயுதங்கள் கேட்கிறார்

கடந்த ஒரு மாதமாக

நேரடி யுத்தத்தில் ஈடுபடாத

நேட்டோவின் பெயரானது

இந்த உலகத்தின்

மூலை முடுக்குகளிலெல்லாம்

ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன

மறைமுக யுத்தம்

நேட்டோவிற்கு ஒன்றும் புதிதல்ல

எத்தனையோ நாடுகளின்

ஆட்சியாளர்களின் மரணத்திற்கும்

எத்தனையோ நாடுகளின்

ஆட்சியாளர்களை மாற்றுவதற்கும்

காரணமாக இருந்தது இருக்கிறது

வரலாறு நெடுகிலும்

 

நிம்மதியாய் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும்

ஆட்டு மந்தைகளுக்குள்

ஓநாய் நுழைந்தது போல

ஒவ்வொரு தேசத்திற்குள்ளும்

ஒவ்வொரு தேசிய இனங்களுக்குள்ளும்

ஒவ்வொரு தேசிய இனங்களின்

கலாச்சாரத்திற்குள்ளும்

ஒவ்வொரு தேசிய இனங்களின்

வாழ்வியலுக்குள்ளும்

ஓநாயைப் போலப் புகுந்திடத்துடிக்கும்

நேட்டோவின் நோக்கம்

என்னவாக இருக்கிறது

நேட்டோ என்பது வேறொன்றுமல்ல

புரிந்துகொள்ளக் கடினமானதுமல்ல

எளிமையாய்ச் சொல்வதென்றால்

நேட்டோ என்பது

இந்த நூற்றாண்டின்

மானுடத்திரளின் முதன்மையான எதிரி

நேட்டோ என்பது

இந்த உலகத்தின்

ஒட்டுமொத்த வளங்களையும்

வாரிச்சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும்

பெருமுதலாளிகளின் பெரும்பிணைப்பு

நேட்டோ என்பது

உலகத்தின் ஒற்றுமையைச்

சீர்குலைக்கத் தயாராக இருக்கும்

உலகத்தின் அமைதியை கெடுக்கநினைக்கும்

அற்பர்களின் அதிகாரக் கூட்டமைப்பு

 

அமைதியை நிலைநாட்டுவதாய்ச்

சொல்லிக்கொண்டு

மத்திய கிழக்கு நாடுகளுக்குள் புகுந்த

இந்த நேட்டோ படைகளால்

அமைதி நிலைநாட்டப்பட்ட லட்சணத்தை

வழிந்த கண்ணீரோடும்

எரிந்த இதயத்தோடும்

இந்த உலகம்

உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதானிருந்தது

அமைதியை நிலைநாட்டும்போது

நிகழ்ந்த மரணங்களையும்

சூறையாடப்பட்ட அம்மண்ணின் வளங்களையும்

கொள்ளையடிக்கப்பட்டு அள்ளிச்செல்லப்பட்ட

அவர்களின் செல்வங்களையும்

அவ்வளவு சீக்கிரம்

கண்கள் இருக்கும் யாராலும்

மறந்துவிட முடியாது

 

ஒருவருக்காக அனைவரும்

அனைவருக்காக ஒருவரும்

என்ற நேட்டோவின் மந்திர உச்சாடனத்தை

இலாபத்திற்காக எல்லோரும்

எல்லோருக்காக இலாபமும்

என்றுதான் பார்க்கவேண்டியிருக்கிறது

ஜனநாயக மாண்புகளைக் காப்பதும்

உலகத்தின் அமைதியை உறுதிசெய்வதும்

எங்களது தலையாயக் கடமை என்ற

நேட்டோவின் கொள்கைகளை

இதற்கு மேலும்

நம்பத்தயாராக இல்லை இந்த உலகம்

அந்தச் சதிகாரக் கூட்டமைப்பின்

தலைமை இடமான அமெரிக்கா

தொடர்ந்து இந்த மனிதகுலத்திற்கு

இழைத்துக் கொண்டிருக்கும் அநீதிகளை

எழுத்தில் சொல்ல

நானொருவன் மட்டும்

போதுமா என்ன

எத்தனையோ நாடுகளின்

நிலங்களை அபகரித்த

வளங்களை வாரிச்சுருட்டிய

மொழிகளை அழித்த

அந்த ஏகாதியத்தியக் கொடுமைகள்

எழுதித் தீராததாக இருக்கிறது

 

எல்லாவற்றையும் தொடங்கிவைத்த

அந்தச் சாத்தான்தான்

எல்லாவற்றையும் தொடர்ந்து கொண்டிருக்கும்

அந்தச் சாத்தானேதான்

உக்ரைனைக் காட்டிக்காட்டி

ஓதிக்கொண்டிருக்கிறது வேதம்

ஒரு கவிஞனாக

போரை விரும்பவில்லை என்பது

எந்தளவிற்கு உண்மையோ

அதைப்போலவே

ஒரு மனிதனாக

நேட்டோவை எதிர்க்கிறேன் என்பது

அதைவிடவும் உண்மையாக இருக்கிறது !

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 10/07/2024 - 4:59 PM

போரால் கொல்லப்படும் உயிர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத நேட்டோ அமைப்பு, ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என தன் கோரப் பற்களால் மனித குலத்தைக் கொன்று குவித்து உதிரம் குடிக்கும் கொடுமையை விவரிக்கும் கவிஞர் ஜோசப் ராஜா போரற்ற உலகை சமைக்கத் துடிக்கிறார். நீங்களும் தானே…

பகிர்வோம் பரிவுடன்
போர் நிறுத்த இலக்குடன்.

Reply

Leave a Comment