மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கவிதை

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதேபோன்றதொரு வெயில் காலத்தில் ஒருநாள் முழுக்க தஞ்சாவூர் பொதுநூலகத்தில் கழிக்க நேர்ந்தது. நூல்களைத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். பசி, தூக்கம் மறந்து வாசிப்பில் மூழ்கியிருந்த காலம். எதேச்சையாக இந்தக் கவிதை கண்ணில் பட்டது. வாசித்து முடித்த மறுகணம் அந்தக் காதலும், அந்த வாழ்க்கையும் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனைப் போல எனக்குள் இறங்க ஆரம்பித்தது.

வாழ்க்கையென்றால் இதுதானா என்று வியந்துவியந்து கண்களை விரித்துப் பார்த்தேன். காதலென்றால் இதுதானா என்று எண்ணிஎண்ணி இதயத்தைத் திறந்து பார்த்தேன். அப்படி ஒரு வாழ்க்கையை யாருமே தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அப்படியொரு வாழ்க்கையை அவ்வளவு சாதாரணமாக யாருமே வாழ்ந்துவிட மாட்டார்கள். ஆனால் உலகத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் மதிப்புமிக்க வாழ்க்கைக்காக, அந்த வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார்கள் மார்க்ஸும் ஜென்னியும்.

உலகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் நிறைந்திருக்கும் துயருறும் மானிடர்களுக்காக துடித்த மார்க்ஸின் இதயத்திலிருந்து ஜென்னிக்காகப் பிறந்துவந்த கவிதையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மையைச் சொன்னால் அர்த்தமுள்ள காதலையும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் அவர்களிடமிருந்துதான் உணர்ந்து கொண்டேன், உள்வாங்கிக் கொண்டேன்.

ஜென்னிக்கு

ஜென்னி

கேலிசெய்யும் வகையில்

கேட்கிறாய் நீ

என் பாடல்களை

ஜென்னிக்கு என்று

ஏன் எழுதுகிறேனென்று

உனக்காகவே என்னிதயம்

விரைவாய்த் துடிக்கின்றது

உனக்காகவே என் பாடல்கள்

பெரிதும் ஏங்குகின்றன

என் பாடல்கள் எழுச்சியுற

உன்னால்தான் முடியும்

உன் பெயரிதைச் செய்யுமென்பதை

ஒவ்வோர் அசைவும் ஒப்புக்கொள்ளும்

ஒவ்வொரு பாடலுக்கும்

இனிமையைத் தருகிறாய் நீ

உன்னைப்போல உயிர்க்கும் ஆற்றல்

கிடையாது எந்த இறைவிக்கும்

ஒவ்வொரு வரிகளிலும்

ஜென்னிக்கு என்று எழுதியே

ஆயிரம் தொகுதிகளை நிரப்பமுடியும்

ஆனாலும்

அந்தப் பெயரில் ஆயிரம்

சிந்தனைகள் மறைந்திருக்கின்றன

என் வாழ்வு

என் அறிவு

எல்லாவற்றையும் அது

தன்னுள் கொண்டுள்ளது

நெடுந்தொலைவிலுள்ள விண்மீன்களில்

அதைக்காணமுடியும் என்னால்

இனிய மேலைக்காற்றிலிருந்து

மீண்டுமது என்னிடம் வருகிறது

கட்டுக்கடங்கா அலைகளிலிருந்து

என்னைநோக்கி முழங்குகிறது

உண்மையில் அதை

என்பாடலின் பல்லவியாக

எழுதுவேன் நான்

வருங்காலம் காணவேண்டும்

என்பதற்காக

காதலென்பது ஜென்னி

ஜென்னியென்ற பெயர்

காதலின் பெயர்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 07/05/2024 - 3:05 PM

மனித குலத்தில் காதலில் சிறந்த இணையர் எனில்
மார்க்ஸ் ஜென்னியைக் குறிப்பிடாமல் இருக்க இயலாது.

அதோ போல்தான் குடும்ப உறவில் கணவன் மனைவி என சான்றாகச் சொல்வதற்கு முதன்மையானவர்கள் மார்க்ஸ் ஜென்னி.

இத்தகைய இணையரில் செல்வச் சீமாட்டி ஜென்னி மார்க்ஸைக் கைப்பிடித்த நாள் முதல் கண்டது வறுமை மட்டுமே.

ஆனால் அன்பும் காதலும் பொங்கி வழிந்தது இருவர்க்கும். இறுதி வரை மாறா அன்புடன் வாழ்ந்தனர் இருவரும்.

சான்றுக்கொரு மார்க்ஸின் ஜென்னிக்கான காதல் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள்
பரப்புங்கள்
வசமாகும் காதல்.

மகத்தான தோழர்கள்
மார்க்ஸ் ஜென்னி யின் காதல் ஆழத்தை
நீங்களும் உணருங்கள்.

Reply

Leave a Comment