எல்லாக் காட்சிகளும் கவிதைக்கான உந்துதலாக இருந்துவிடுவதில்லை. அதேநேரத்தில் சில காட்சிகள் கவிதையைப் பிரசவித்துப் போடாமல் உறங்கவிடுவதும் இல்லை.
பாரதி கடலையும், காற்றையும், மழையையும், சூரியனையும் என எத்தனையோ காட்சிகளைக் கவிதைகளாக்கி இருக்கிறான். எல்லாவற்றிலும் ஒருபடி மேலே என்னை வியப்பிழாழ்த்திக் கொண்டிருப்பது பாஞ்சாலி சபதத்தில் மாலை வருணனை என்ற பகுதியில் வரும் அந்திக் காட்சிதான்.
அந்த அந்திக் காட்சியை வார்த்தைகளில் வரைந்த பாரதியின் கரம்பற்றிக்கொள்கிறேன். அந்தி வானத்தோடு எத்தனை நேரங்களைச் செலவழித்திருப்பான் என்று எண்ணிப்பார்க்கிறேன்.
விதைக்காமல் அறுக்கமுடியுமா? உழைக்காமல் உன்னதங்களைப் படைக்கமுடியுமா?
செயற்கை நுண்ணறிவு உருவாக்குமே என்று சொல்வீர்களானால், செயற்கை நுண்ணறிவையும் மனிதனல்லவா, தன்னுடைய ஓயாத உழைப்பினால் உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
அந்தியின் அந்த அற்புதக்காட்சியையும், பாரதியின் அந்த அற்புதமான கவிதையையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இதோ . . .
காட்சி :
துரியோதனனுக்காகச் சகுனி விரித்த வலையில், சிக்க வைப்பதற்காகத் தங்களைத் தூதுவனாக அழைக்க வந்திருக்கும் விதுரனோடு புறப்பட்டுச் செல்கிறார்கள் பஞ்ச பாண்டவர்களும், பாஞ்சாலியும், அவர்களின் பரிவாரங்களும்.
நீண்ட பயணத்தில் நிழல்தரும் சோலையைப் பார்த்தால் யாருக்கும் ஓய்வின் தேவை தோன்றத்தானே செய்யும். தருமன் கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்கிறான். வழக்கம்போல மறுமொழி சொல்லாமல் கண்ணயர்கிறார்கள் தங்கத் தம்பிகள்.
பாஞ்சாலிக்கு மிகவும் பிடித்தமான பார்த்தனும், பாஞ்சாலியும் யாருக்கும் சொல்லாமல் கொஞ்சதூரம் மாலைநடை செல்கிறார்கள். ஓர் அழகிய பசும்புல் மேட்டில் அமர்கிறார்கள்.
அந்திச் சூரியன் அடிவானத்தில் கவியத் தொடங்குகிறது, பாஞ்சாலியும் பார்த்தனின் மீது தலைசாய்த்துக் கவிழ்ந்து கொள்கிறாள். பாஞ்சாலியிடம் பகிர்ந்து கொள்வதற்காக அடிவானத்தை அளந்து கொண்டிருக்கிறான் பார்த்தன். பார்த்தனின் குரலாகப் பாரதி இப்படி ஆரம்பிக்கிறான். இதோ . . .
கவிதை :
” பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறு மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தோன்றுங் காட்சி; “
இப்படியாக வானத்துப் புதுமை சொல்லப் புறப்பட்ட பாரதி, ஓரடிபோல் இல்லாத இன்னோர் அடியென்று கவிதையின் புதுமையையும் சொல்லிச் செல்கிறான். கவிதையில் சொற்கட்டுமானம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உவமையின் வழியாக உணர்த்திவிட்டுத் இவ்வாறு தொடர்கிறான்.
” கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணந்தோறு நவநவமாய்க் களிப்புத் தோன்றும்
கருதிடவுஞ் சொல்லிடவு மெளிதோ? “
என்று தனக்குத்தானே எளிமையான மொழியில், அழகியல் குன்றாத அற்புத மொழியில் எடுத்துச் சொல்கிறான்.
‘ பார் சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடீ யிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனைக் கலவை !
தீயின் குழம்புகள் ! செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள் ! வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத்தீவுகள்!–பாரடி!
நீலப்பொய்கைகள்!–அடடா,நீல
வன்ன மொன்றி யெத்தனை வகையடீ !
ஆஹா! எங்குநோக் கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம் ! ’
இந்தக் கவிதையில் நிரம்பியிருக்கும் உணர்ச்சியும், இந்தக் கவிதையின் சொற்கட்டுமானத்தையும், இந்தக் கவிதையை வாசித்து முடித்தபின்னும் கேட்கமுடிகிற ஒலியையும் தாண்டி அடுத்த பக்கத்துக்குத் நகர்வதென்பது அவ்வளவு எளிமையான விஷயமல்ல.
பற்றியெரியும் உணர்ச்சிகளோடு அந்திவானத்தை, மறையும் அந்தச் சூரியனின் ஒளிக்கற்றைகளை அந்த அற்புதமான வண்ணத்தியல்புகளைப் பாரதி பயன்படுத்தும் வார்த்தைகளில் பாருங்கள்.
பாரதியின் வழிவந்த கர்வத்தோடு சொல்கிறேன். இந்தச் சொற்சேர்க்கையை அவ்வளவு எளிதாய் எந்த மொழியிலும் பார்த்துவிட முடியாது.
பாரதி சென்னையில் பத்திரிக்கைகளில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது நேரம்போவதே தெரியாமல் மாலைவேளைகளில் அந்திவானத்தை அவ்வளவு விரும்பி இரசித்துக் கொண்டிருப்பானாம் என்ற உண்மையையும் உங்கள் இதயத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
பாரதியின் இந்த மாலை வருணனையை வாசித்தால் நீங்களும் கூட நாளை அந்திச் சூரியனுக்காகக் காத்திருப்பீர்கள். அடிவானம் கண்டு இரசித்திருப்பீர்கள்.
கவிதையின், கவிதை மொழியின் ஆற்றல் அதுதான்.
அந்திச் சூரியனையும் அடிவானத்தையும் பார்க்கத் தவறாதீர்கள். அழகை வாழ்க்கையோடு இணைத்துச் சொல்லும், வாழ்க்கையை அழகாக எடுத்துச் சொல்லும் கவிதைகளை வாசிக்கத் தவறாதீர்கள்.
2 comments
கவிஞர் ஜோசப் ராஜா சதா மனித குல விடுதலைக்காக காத்திரமான படைப்புகளைப் படைத்து வந்து வேளையில் இயற்கை குறித்த பாரதியின் அற்புத வரிகளை ‘பாஞ்சாலி சபதம்’ மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார்.
‘அந்தி மாலையும் மறையும் சூரியனும்’ தரும் அழகழகான காட்சிகளை பாரதியின் வாயிலாக உணர்த்தி நம்மை மகிழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறார்.
படியுங்கள்
ரசியுங்கள்
இன்புறுங்கள்
கவிஞர் தனது படைப்பாற்றலை எப்படி விரிந்து கிடக்கும் இந்த உலகை போல தது அறிவை விரித்து வளர்த்துள்ளார்…..
பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் கவிதைகள் எழுதி மானுட சமூகத்தின் அவலங்களை பேசும் போது ஒரு படைப்பாளி உணர்வை அருமையாக வெளிப்படுத்துகிறார்…..
நன்றி தோழர் ஜோசப் ராஜா