பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கவிதையில் சிலரைப் பின்தொடர முடிவெடுத்தேன். அந்தச் சிலரில் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களும் ஒருவர் என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். காரணம் சொல்ல வேண்டுமென்றால் இன்குலாப் எனக்காக எழுதினார். இன்குலாப் என்னைப் போன்றவர்களுக்காக எழுதினார். என்னுடைய வாழ்க்கையில் உள்ளும் புறமும் நான் எதிர்கொண்ட பிரச்சனைகளைத் தன்னுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் இன்குலாப். அதனால்தான் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அவர் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்த மாற்றத்தின் கருத்துக்களை அன்றிலிருந்து இன்றுவரை நானும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

பதினைந்து வருடங்கள் கடந்திருக்கும். இன்குலாப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவியரங்கத்தில் ‘நான் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தேன். அந்தக் கவிதையைப் பாராட்டிப் பேசிய அவரின் ஒருசில சொற்களே போதுமானதாக இருந்தது எனக்கு. அந்த மேடையில் அதிகாரத்திற்கு எதிராக அவர் பேசிய வார்த்தைகளை வியப்பு நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் உறுதியாகக் கடைப்பிடித்த உண்மைதான் மறுநாளே ஊரப்பாக்கத்தில் இருக்கும் அவர் வீடுநோக்கி பயணப்பட வைத்தது. அந்தச் சந்திப்புகளும், அந்த உரையாடல்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ”அழைப்பின் பாடல்கள்” புத்தகத்தை இன்குலாப் அவர்கள்தான் வெளியிட்டார். கவிதைகளைப் பற்றி அன்றைய தினம் அவர் பேசிய பேச்சை ”விருந்து சாப்பிட்டது போல் இருந்தது அல்லவா” என்று மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுச் சொன்னார் குருநாதர்.

பிற்பாடு என்னுடைய அன்புத் தோழர் இசாக் அவர்களும் நானும் சேர்ந்து இன்குலாப் அவர்களின் நேர்காணல்களைத் தொகுத்து மானுடக் குரலாக என்ற தலைப்பில் தமிழ் அலை வெளியீடாக வெளியிட்டோம். தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட, தோழர் திருமாவளவன் அவர்கள் பெற்றுக்கொண்ட அற்புதமான நிகழ்வாக அமைந்தது. நிகழ்வு முடிந்தபின் தோழர் இசாக்கிற்கும் எனக்கும் நன்றி சொன்னார். பிள்ளைகளின் கடமை ஐயா என்று சொன்னோம். அழுத்தமாகக் கரம் பற்றிக் கொண்டார். இப்போதும் அந்தச் சூட்டை உணர்கிறேன். தோழர் இசாக் தான் அழைத்துச் சொன்னார், இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தியையும். மழை! விடாது பெய்து கொண்டிருந்த இதே நாளில் கனத்த மெளனத்தோடும், கலங்கிய இதயத்தோடும் தோழரும் நானும் ஊரப்பாக்கம் நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.

யாருக்கும் கேட்காமல் அந்த மக்கள் கவிஞனின் உடலருகே நின்று இப்படித்தான் உறுதியெடுத்துக் கொண்டேன். ”போய் வாருங்கள் தோழரே, நான் தொடர்கிறேன் கவிதையை” என்று.

இன்குலாப் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட கவியரங்கம் ஒன்றில் அரைமணி நேரத்திற்கும் மேலாக நான் வாசித்த தோழரே என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த நீண்ட கவிதையிலிருந்து சில பகுதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தோழரே

தனியாய்

தனித்தனியாய் நின்று கொண்டு

கவிதை என்பது அகம் சார்ந்தது

கவிதை என்பது என் சொந்த விருப்பம்

கவிதை என்பது வானத்திலிருந்து விழுவது

கவிதை என்பது என்னுடைய கண்டுபிடிப்பு

பிறவிக் கவிஞன் நான்

தனித்துவமானவன் நான்

தலைசிறந்தவன் நான்

என்றெல்லாம்

சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில்

தோழனே

உன் வயலினை எடுத்து வா

உன் வீணையை எடுத்து வா

உன் கிட்டாரை எடுத்து வா

என் பங்கிற்கு

நானும் பறையெடுத்து வருகிறேன்

என்று சொல்லி

ஒரு கூட்டிசையை இசைக்க நினைத்த

உங்களுடைய இதயமும்

ஒரு கூட்டிசைவை உண்டாக்க நினைத்த

உங்களுடைய எழுத்தும்

எனக்குப் புரிகிறது தோழரே

உண்மைக்கு உண்மையாய்

நியாயத்திற்கு நியாயமாய்

எழுத்துக்கு நேர்மையாய்

போராடி வாழ்ந்து எழுதி

ஏழையின் முனகலை எடுத்துச் சொல்ல

கவிதையை பிடித்துக் கொண்டதும்

கட்டுண்டவர்களின் கட்டுக்களை வெட்டியெறிய

கவிதையைப் போர்வாளாக்கி போராடியதும்

போராடியவர்களின் நெற்றிச் சுழிப்பை மொழிபெயர்க்க

கவிதையை பயன்படுத்தியதும் புரிகிறது தோழரே

என்னைப் போன்ற ஏராளமானவர்களின் இதயங்களில்

வார்த்தைகளை விதைத்திருக்கிறீர்கள்

உங்களுடைய வார்த்தைகள்

வெறுமனே இருக்க விடாது

நீங்கள் ஓய்வு கொள்ளுங்கள்

உங்களது எழுத்தும் வாழ்வும்

ஒரு ஒத்திகைதான்

நடக்கப் போகும் ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு

உங்களுடைய வலிகளும் வேதனைகளும்

பிரசவ கணங்கள் தான்

பிறக்கப் போகும் ஒரு புதிய உலகத்திற்கு

எழுதி காய்த்த உங்கள் கரங்களில்

அன்பொழுக முத்தமிடுகிறேன் தோழரே

ஓய்வு கொள்ளுங்கள்

தென்றல் தாலாட்டட்டும்

சூறாவளியாய்

உங்கள் வார்த்தைகள் எப்போதும்

சுற்றிக் கொண்டிருக்கும்

இந்த உலகத்தை

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

முனைவர் பெ.அண்ணாதுரை 01/12/2023 - 11:17 AM

தோழர் வணக்கம்.
மக்கள் கவிஞருக்கு,மக்களை நேசித்து எழுதி கொண்டிருக்கும் அன்பு மக்கள் கவிஞர் ஜோசப் ராஜா அவர்கள்,மக்கள் கவிஞனின் கவிதையின் பேராற்றலை எடுத்துக் கூறும் தன்மை உயர்வாக போற்ற வேண்டியது. மக்கள் கவிஞரின் வார்த்தைகள் உழைக்கும் மக்களின் உன்னதங்களை, உழைப்பின் வேர்வைத் துளிகளைப் போற்றுவதுடன் மற்றும் வேற்றுமை பார்க்கும் ஆதிக்க ஜாதிகளின் அகங்காரத்தைத் தோலுரித்துக் காட்டும். அத்தகைய மக்கள் கவிஞனின் கரம்பிடித்து நடக்கும் எங்கள் மக்கள் கவிஞனின் உயிர் துடிப்பை போற்றுகிறேன்.வாழ்த்துக்கள்

Reply
பெரணமல்லூர் சேகரன் 02/12/2023 - 11:52 AM

எண்ணற்ற கவிஞர்கள் உழைக்கும் வர்க்கத்துக்காகவும் பொதுவுடமை பூக்கவும் தங்கள் எழுத்துக்களால் கவிதைகளாக வடித்து விடியலுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர். செயல்படுகின்றனர்.

அப்படிச் செயல்பட்டு மறைந்த கவிஞர் இன்குலாப்புடன் தோழமையாகி தானும் அப்படி கவிதைகள் படைத்து செயல்பட்டு வரும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையைப் படியுங்கள். இன்குலாப் கவிஞரின் அருமை தெரியும். நாம் இயங்க வேண்டியதன் அவசியம் புரியும்.

Reply

Leave a Comment