பிணவறை முன்னால் பிறக்கும் ஞானம்

அன்பிற்குரியவர்களின் உடலை வாங்குவதற்காக மருத்துவமனையின் பின்னால் அல்லது கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பிணவறையின் முன்னால் நெடுநேரம் கால்கடுக்க, ஓயாமல் கண்கலங்க, இதயம் படபடக்க நிற்கவேண்டிய அவலம் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் இந்தநேரத்தில் நினைக்கிறேன். ஆனால், நாம் நினைப்பது போலவா இருக்கிறது வாழ்க்கை.  நாம் நினைப்பது போலவா நடக்கின்றன நிகழ்வுகள்.  

ஒருவகையில் பிணவறையின் முன்னால் காத்திருப்பது பெரும் தவத்திற்குச் சமமானது. பிணவறையின் முன்னால் எவ்வளவு நேரம் காத்திருக்க நேர்கிறதோ, அவ்வளவு தூரம் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும் சாத்தியமாகலாம். மரணத்தைப் பார்த்தல்லவா யுத்தம் என்ற பெயரில் மக்களைக் கொன்றுகுவித்த பேரரசர்கள் சிலர் மனம் திருந்தினார்கள். மரணத்தைப் பற்றிய கேள்விகளும், யோசனைகளுமல்லவா, மரணமேயில்லாத தீர்க்கத்தரிசிகளை இந்த உலகத்திற்குக் கொடுத்தது. மரணம் துயரம்தான். மரணம் இழப்புதான். அதேநேரத்தில் மரணம் பெரும் ஆசிரியனும் கூட. ஆகவே, நம்புங்கள், பேரழிவில் இருந்துதான் பேரழகைப் புரிந்துகொள்ள முடியும்.  

நண்பர் ஒருவரின் தந்தை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். வெளியில் நிகழ்ந்த மரணமென்பதால், காவல்துறை வழக்கு பதிவுசெய்யவே, அவர் உடலை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைத்துவிட்டார்கள். காவல் நிலையத்தில் சான்றிதழ் கிடைக்க ஒருமணிநேரம் தாமதமாகிவிட்டதால், மறுநாள்தான் பிணக்கூறாய்வு செய்து உடலைக் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். மரணம் பெரும் சோகமென்றால், உடலை வாங்குவதற்காக காத்திருப்பது சோகத்திலும் சோகம்தான். விடியலை நோக்கிய அந்த நீண்ட இரவில் நண்பருக்குத் துணையாக நங்கூரமாய் நிற்க வேண்டியிருந்தது. தந்தையைப் பற்றிய நினைவுகளை இதயத்தின் ஆழத்திலிருந்து தோண்டியெடுத்து சொல்லிக் கொண்டிருந்தார் இரவுமுழுவதும். ஒரு தந்தையின் வாழ்க்கையைக் கேட்பதுதென்பது வருடக்கணக்கில் வாழ்வதற்குச் சமமானது. விடிவதற்காகக் காத்திருந்தோம்.

விடிந்தது. கோடை ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் யாரும் நம்பமுடியாது. காலைச்சூரியனே அவ்வளவு வெப்பத்தை அள்ளி எறிந்துகொண்டிருந்தது. இரைதேடச் செல்லும் பறவைகளோடு, இறந்த உடலை வாங்குவதற்காக அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தோம். காலையிலேயே அவ்வளவு கூட்டம். ஏழைகள் கூட ஏன் நோயாளிகளாய் மாறியிருக்கிறார்கள் என்பது யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறது. கடுமையாக உழைக்கிறவர்களுக்கு எப்படி இவ்வளவு நோய்கள் வருகின்றன என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமுமாகும் என்று யோசித்துக்கொண்டே மருத்துவமனைக்குப் பின்னால் மரங்களடர்ந்த சாலைவழியே அமைதி நிறைந்திருக்கும் அந்தப் பிணவறைக்குச் சென்றோம்.

அவ்வளவு கூட்டம். பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட அப்பாவிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று விபத்தில் இறந்துவிட்டான். என்னுடைய நண்பருடைய தந்தையின் உடலும், அந்தச் சிறுவனின் உடலும் உள்ளே பிணக்கூறாய்விற்காகக் காத்திருக்கின்றன. அந்திமாலை கூடடையும் பறவைகளைப்போல கொஞ்சநேரத்தில் அந்த இடத்தை நிறைத்தார்கள் அந்தச் சிறுவனின் வகுப்புத் தோழர்கள். அந்தச் சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் துயரத்தை விழுங்கிக்கொண்டு காத்திருந்தார்கள். நானும் நண்பரும் உள்ளே சென்று தந்தையின் உடலைப் பார்த்து, இறுதி மரியாதை செய்தோம். பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுவனின் உடலைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. நெஞ்சைப்பிடித்தபடி வெளியே வந்தோம். பிணக்கூராய்வு செய்கிறவர் சொன்னார்,”சாகுறதுக்குன்னே பொறக்கிறானுவ ஸார்” .

அந்தச் சிறுவனின் குடும்பத்தார் அழைக்கப்பட்டார்கள். மகனைப் பறிகொடுத்த அந்தத் தாயின் அழுகுரலால் அந்த இடமே நிறைந்திருந்தது. பேரனை இழந்த பாட்டியின் புலம்பல்களால் அங்கிருந்த அனைவரின் இதயங்களும் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாய் வெளியே அழைத்துவரப்பட்டாள், இல்லை இழுத்து வரப்பட்டாள். பத்துபேருக்குமேல் இறுகப் பிடித்திருந்தும் திமிறி அழுதுகொண்டிருந்தாள். யாருமே எதிர்பார்க்கவில்லை, அவளுக்கு எதிரில் நின்றுகொண்டிருந்த கணவனை எட்டிமிதித்தாள், வண்டியக்குடுத்து எம்புள்ளயக் கொன்னுட்டியே பாவி என்று கத்திக் கூச்சலிட்டாள், அந்தப்பாவி எதுவும் செய்யவில்லை, அந்தப் பாவியும்கூட பிணம்போலவேதான் நின்று கொண்டிருந்தான். அழுதுகொண்டிருக்கும் மனைவியின் காலில் விழுந்தான். அவளின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறியழுதான். அவர்கள் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லோரும் அழுதுகொண்டுதானிருந்தார்கள். தந்தைக்காக வந்த என் நண்பரும்கூட அந்தச் சிறுவனுக்காகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். மரணத்திற்கு முன்னால் எதுவும் கிடையாது, எல்லாவற்றையும் உடைத்து, எல்லோரையும் கலங்கடிக்க கூடியது மரணம். ஆனாலும் இப்படிப்பட்ட மரணங்களிலிருந்து எதையாவது புரிந்து கொள்கிறோமா நாம்.

பிணக்கூராய்வு செய்யும் மருத்துவர் ஒரு இயந்திரத்தைப்போல நடந்துசென்று கொண்டிருக்கிறார். எல்லோரும் அவருக்கு வழிவிட்டு நிற்கிறார்கள். அவர் உள்ளே சென்றால்தான், சீக்கிரமாக உடலை வாங்கிக்கொண்டு அடுத்த காரியங்களைப் பார்க்கமுடியும். இரும்புக்கதவு இழுத்து மூடப்பட்டது.”அவ்வளவுதான் ஸார் வாழ்க்க, கொஞ்சநேரத்துல பொட்லம்போட்டுக் குடுத்துருவாங்க. இதுக்குப்போயி சண்டை சச்சரவுன்னு காலத்தக் கழிச்சிட்ருக்கோம்” என்றார் பக்கத்திலிருந்த நண்பர். சின்னப்பசங்களுக்கு எதுக்குஸார் வண்டிய வாங்கிக்குடுக்கனும், அந்தம்மா சொல்றது சரிதான் ஸார். நம்மதான் கொலைகாரங்க என்றார் இன்னொரு பெரியவர். அந்தச் சிறுவனின் வகுப்புத்தோழி ஒருத்தி படாரென்று எங்கள் கால்களுக்கு கீழே மயங்கி விழுந்தாள். அவளைத் தூக்கித் தண்ணீர் கொடுத்து மரநிழலில் உட்காரவைத்தோம். இன்னொரு சிறுவன் ஒரு மரத்தைப்பிடித்துக் கொண்டு நீண்டநேரமாக வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பிணவறையில் துப்புறவுப் பணிசெய்யும் அம்மா சொன்னாள்,”இப்பிடி அழுகிற பிள்ளைகதான் பெருசானபெறகு மொகத்த திருப்பிக்கிட்டு ஆளுக்கொரு தெசையாப் போகுங்க” என்று. அவள் அனுபவத்திலிருந்து சொல்வதை ஆமோதிப்பதைத் தவிர என்னிடமும் வேறு சொற்களில்லை.

வண்டி தயாராக இருந்தது. பெற்றோர்களின் உறவினர்களின் வகுப்புத் தோழர்களின் விண்ணை முட்டும் அழுகுரல்களோடு அந்தச் சிறுவனின் உடல் வண்டியில் ஏற்றப்பட்டது. அதிகபட்சம் பத்துநிமிடம்தான் புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அந்த இடம். அங்கிருக்கும் மரங்களையெல்லாம் சுற்றிப்பார்த்தேன். ஒவ்வொரு மரத்திற்குக் கீழும் எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மரமும் இத்தனை காலமாக எத்தனை புலம்பல்களைக் கேட்டிருக்கும், ஒவ்வொரு மரமும் துயரத்தால் நிறைந்திருந்த எத்தனை மனிதர்களைத் தன் நிழலால் ஒருகணம் இளைப்பாறச் செய்திருக்கும் என்ற எண்ணங்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ”வாங்க ஸார், பாடி ரெடியாய்டுச்சி” என்ற பிணவறை ஊழியரின் குரல் கேட்டது. உடலை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருப்பவர்களைத் தொடர்புகொண்டு அரைமணிநேரத்தில் வந்துவிடுவோம், அழத் தயாராக இருங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

ஒவ்வொரு மரணத்தின் போதும், ஒவ்வொரு மரணத்தின் முன்னாலும் வாழ்க்கை அலசி ஆராயப்படுகிறது. மனிதனின் மேன்மையும், கீழ்மையும் உண்மைக்கு நெருக்கமாக உரசிப் பார்க்கப்படுகிறது. ஆனால் என் அன்பிற்குரிய தோழர்களே, எல்லாமும் எத்தனை நாட்களுக்கு சொல்லுங்கள். ஒவ்வொரு இயற்கைப் பேரிடர் நிகழும்போதும் சூழலியல் பற்றி கொஞ்சநாட்கள் பேசுகிறோம். ஒவ்வொரு யுத்தம் நடக்கும்போதும் அமைதியைப் பற்றி அக்கறையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். விபத்தில் இறந்த ஒரு சிறுவனின் மரணத்திற்கே இவ்வளவு அழுகையென்றால், குறிவைத்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்காகப் பாலஸ்தீனத்தின் தாய்மார்கள் எப்படி அழுதுகொண்டிருப்பார்கள் என்று நினைத்தாலே வெடிப்பது போலிருக்கிறது இதயம்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறது வண்டி. அவ்வளவுதான் வழக்கமான இரைச்சல்கள். வழக்கமாகச் சக்கரம் கட்டிக்கொண்டு நேரத்தை துரத்தும் மனிதர்கள். யாரும் எப்போதும் வாழ்க்கையை வாழ்கிறதுபோல் தெரியவில்லை. முதலாளித்துவச் சமூகத்தின் மனிதர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. அந்தப் பிணக்கூராய்வு செய்கிறவர் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாகுறதுக்குன்னே பொறக்கிறானுவ ஸார்” .

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 20/03/2024 - 4:50 PM

“பிணவறை முன்னால் பிறக்கும் ஞானம்” என்னும் கவிஞர் ஜோசப் ராஜாவின் படைப்பு வித்தியாசமானது.

வாழ்க்கையே போராட்டம் என்றால் இறந்தபின்னும் தொடர்கிறது போராட்டம் என்பதை அனுபவப்பூர்வமாக நெகிழ்வான பதிவுகள் மூலம் நம் கவனத்தை ஈர்க்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசித்தால் தான் முழுமையாக உணர முடியும். மனமிளக முடியும். மாந்த நேயம் சுரக்கும். விடியலுக்கான வேகம் பிறக்கும்.

Reply
மித்ரன் 20/03/2024 - 5:50 PM

விபத்தில் இறந்த ஒரு சிறுவனின் மரணத்திற்கே இவ்வளவு அழுகையென்றால், குறிவைத்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்காகப் பாலஸ்தீனத்தின் தாய்மார்கள் எப்படி அழுதுகொண்டிருப்பார்கள் என்று நினைத்தாலே வெடிப்பது போலிருக்கிறது இதயம்.
ஆழமான வலி(ரி)கள்

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply