சலிப்பை போக்க

வாழ்க்கை ஒரேமாதிரியாக இருக்கிறது என்ற சலிப்பின் குரல்களை ஏராளம் கேட்டிருப்போம். சொல்லப்போனால் முன்னைக் காட்டிலும் அப்படிப்பட்ட சலிப்பின் குரல்கள் இன்னும் அதிகரித்திருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மனைவியை சலித்துக்கொள்ளும் கணவன், கணவனைச் சலித்துக்கொள்ளும் மனைவி, குழந்தைகளைச் சலித்துக்கொள்ளும் பெற்றோர்கள், பெற்றோர்களைச் சலித்துக்கொள்ளும் பிள்ளைகள் என சலிப்பு பெருகிப் போயிருக்கிறது. அன்றாடம் பயணத்தில் உயிர்க்களையே இல்லாமல் உட்கார்ந்திருக்கும் முகங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதயத்தில் மெல்லிய வலியொன்று வந்துவிட்டுப் போகிறது.  

யாரைக்கேட்டாலும் வாழ்க்கை ஆயிரமாயிரம் பிரச்சனைகளோடு நகர்ந்து கொண்டிருப்பதாகச் சலித்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் சலிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் மருத்துவமனைகளெல்லாம் செல்வச் செழிப்பில் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் சலிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் பேராசை கொண்ட முதலாளிகள் இந்தப் பூமிப்பந்தை கொஞ்சம் கொஞ்சமாக மென்று முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் சலிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் மனிதகுல விரோதிகள் தலைவர்கள் என்ற பெயரில் இந்த உலகத்தை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். சலிப்பும், சோம்பலும் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடியதென்று நினைக்கவில்லை நான்.

நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதான் என்ற சலிப்பின் குரல்களை ஏராளம் கேட்டிருப்போம். ஏன், வாழ்வின் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்தச் சலிப்பின் குரலை நாமும்கூட வெளிப்படுத்தியிருப்போம். சலிப்பை மட்டுமே பிரசவிக்கக் கூடிய இந்தச் சமூகத்தில் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலாளித்துவச் சமூகத்திற்கும் சலிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம் நீங்கள்? தொடர்ந்து துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவன் ஒருகட்டத்தில் சலித்துப்போகாமல் என்ன செய்வான். தொடர்ந்து பாரங்களையே சுமந்து கொண்டிருக்கும் ஒருவன் ஒருகட்டத்தில் பாரம் தாங்க முடியாமல் சலித்துப் போகாமல் என்ன செய்வான். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கை இன்பக் காட்சிகள் நிறைந்ததாகவா இருக்கப்போகிறது. எவ்வளவுதான் வியர்வையும், இரத்தமும் சிந்திச்சிந்தி உழைத்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கும் வாழ்க்கையைச் சலித்துக் கொள்ளாமல் கொண்டாடவா செய்யமுடியும் என்ற எத்தனை விதமான கேள்விகள் கேட்கப்பட்டாலும் அத்தனையும் நியாயம்தான்.

ஆனால் வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க முடியாதல்லவா! ஆம் இந்தச் சலிப்பைப் போக்கவேண்டுமென்றால் என்ன செய்யலாம்? என்னைக் கேட்டால் சலிப்பின் ஊற்றுக்கண்ணான இந்த சமூகமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கவேண்டுமென்று சொல்லுவேன். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாகப் பிரித்துவைக்கும் இந்த முதலாளித்துவ உற்பத்தி உறவை அடியோடு மாற்ற வேண்டுமென்றுதான் சொல்லுவேன்.

அது அவ்வளவு எளிதானதில்லைதான், ஆனபோதிலும் முடியாதது ஒன்றுமில்லை. இந்த தேசம் ஆயிரமாயிரம் வருடங்களாகக் கண்ணும் கருத்துமாக கருத்துமுதல்வாதத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட தேசமென்பதை மறந்துவிடாதீர்கள். ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த தேசம் உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மண்ணில் முளைத்த ஒவ்வொரு தத்துவங்களும் எந்த வர்க்கத்தின் நலன்களுக்கு ஆதரவாக இருந்தன. எந்த வர்க்கத்தை முற்றும் முழுவதுமாகப் புறக்கணித்தன என்ற கேள்விகள் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டிய நேரமிது. எந்தச் சமூகமைப்பாக இருந்தாலும் ஆளும் வர்க்கத்தால் கசக்கிப் பிழியப்பட்ட உழைக்கும் மக்கள், தங்களின் பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்கும், தொடர்ந்து துரத்தும் துயரங்களுக்கும் துரதிருஷ்டவசமாக தங்களையே நொந்துகொள்ளவும், தங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளின் காலடியில் கண்ணீர் சிந்தவும் பயிற்றுவிக்கப்பட்டதன் விளைவுதான் இன்று நீக்கமற நிறைந்திருக்கும் சலிப்பின் முகங்கள். நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று நினைத்துவிட்டால் அதற்குமேல் சலித்துக் கொள்ளவதை தவிர, நொந்து கொள்வதை தவிர, ஏன் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதை தவிர என்ன செய்ய முடியும்?

ஆனால், உண்மை அதுவல்ல தோழர்களே. உழைக்கும் மனிதர்களின் இதயத்திற்குள் உண்மையின் நெருப்பை பற்றவைத்து நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அதுவரையிலும் விதியை எண்னிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விதியின் இடத்தில் நிலப்பிரபுவையும் முதலாளியையும் வைத்துப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதுதான் புரட்சியெனும் புதுநெருப்பு ஆனந்த நடனத்தை ஆடத்தொடங்கியது. நரகத்தைப் போன்ற இந்த வாழ்க்கைக்கு நாமல்ல காரணம், விதியல்ல காரணம் என்று உணர்ந்துவிட்ட ரஷ்யாவின் தொழிலாளர்களும் விவசாயிகளும் நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும், ஏன் அந்த ஜார் மன்னனையே கூட இருந்த இடம் தெரியாமல் துடைத்துவிடவில்லையா! நம்முடைய தேசத்தைப் போலவே, இல்லை அதற்கும் மேலான சமூகக் குழப்பங்களும், மூட நம்பிக்கைகளும், பிற்போக்குதனங்களும் நிறைந்திருந்த சீனதேசத்து மக்கள் தங்களுடைய நீண்ட பயணத்தின் மூலம் தங்களுடைய இழிவான வாழ்க்கைக்குக் காரணமானவர்களை இல்லாமல் செய்துவிடவில்லையா. ” ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்று ஒரு கவிஞன் பரவசமடைந்ததைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அந்தப் பரவசத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் அந்தப் பரவசத்தை இதயத்தில் பொத்திப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சலிப்பே வராமலிருக்க வேண்டுமானால் புரட்சியின் பாதைகளில் பயணிக்கத் தொடங்குங்கள். 

நீங்களே சொல்லுங்களேன், ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஒவ்வொரு விடியலும் ஒரேமாதிரியாகவா விடிகிறது. ஒவ்வொரு இரவும் ஒரேமாதிரியாகவா முடிகிறது. பார்க்கத் தெரிந்தவனுக்கு ஒவ்வொரு காட்சியும் பரவசமல்லவா. பார்க்கத் தெரிந்தவனுக்கு ஒவ்வொரு அனுபவமும் பாடமல்லவா. பிரச்சனை என்னவென்றால் நாம் பார்க்கிறோமா என்பதுதான். இன்னும் பெரிய பிரச்சனை என்னவென்றால் பார்த்ததை உணர்கிறோமா என்பதுதான். வாழ்வை நேசிக்க தெரிந்த ஒருவனுக்கு, இயற்கையை தரிசிக்கத் தெரிந்த ஒருவனுக்கு, மானுடத்திரளை பேரன்போடும் பெருங்கருணையோடும் நேசிக்கத் தெரிந்த ஒருவனுக்கு வாழ்க்கை ஒருநாளும், ஒருபோதும் சலித்துப் போவதுகிடையாது. தனித்தனியாகச் சுருங்கிவிட்ட இந்த வாழ்க்கையின் முடிச்சுகளை நாம்தான் அவிழ்க்க வேண்டும். எல்லோருக்குமே அன்பு தேவையானதாக இருக்கிறது. எல்லோருக்குமே நிம்மதி தேவையானதாக இருக்கிறது. எல்லோருக்குமே மாற்றம் தேவையானதாக இருக்கிறது.  

கோடிக்கணக்கான மக்களின் உயிர்வாழ்தலின் அடிப்படையான உணவுத் தேவையின் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இந்த விலைவாசி ஏற்றத்திற்கு காலநிலை மாற்றத்தைக் காரணமாகச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் அவர்கள் சொல்வதையெல்லாம் நீண்டகாலங்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். சலிப்பில்லாமல் வாழவேண்டுமென்றால் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஒன்றே ஒன்றுதான். சுற்றிப் பாருங்கள். ஏற்றுக்கொள்ளவே முடியாத எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராக எதிர்வினை செய்யுங்கள். இந்த உலகத்தை கடவுளல்ல, நீங்கள்தான், நீங்கள்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை உறுதியாக நம்பத் தொடங்குங்கள். உங்கள் துயரங்களுக்குக் காரணம் பேயோ, பிசாசோ, சாத்தானோ அல்ல, அல்லவே அல்ல, அத்தனை தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் முதலாளித்துவமே என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிற்பாடு துணிந்து நில்லுங்கள்.

சமூக மாற்றத்தின் தொடக்கம் சலிப்பைப் போக்குவதுதான்! உங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். சத்தியத்தின் பாதையில் சலிப்பில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 17/07/2023 - 5:31 PM

சலிப்பை சல்லடையால் சலித்து வழங்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

மனிதர்களின் விதவிதமான சலிப்புகளைச் சங்கிலிகளால் பிணைத்துப் படம் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

வழக்கம்போல் சலிப்பில் முடிந்திடாமல் பாரதியின் ரௌத்திரம் பழக வேண்டியதன் அவசியம் குறித்து அழகுற எடுத்தியம்பும்புகிறார். சரிதானே!

வெந்ததைத் தின்று விதிவரின் சாவதோ?
அல்ல
நொந்து நிதம் சலித்துச் சீரழிவதோ?
அல்ல

உடைமை வர்க்கத்தை
சுரண்டலை எதிர்த்த
நெடும் போரில் இணைவது தானே பொருத்தமானதாக இருக்கும்.

படியுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply