ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனம்

டந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியானது, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பேசுபொருளானது. அதிலும் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்தியர்களின் கடைக்கண் பார்வை ஒருவார காலமாக ஒலிம்பிக்கின் பக்கம் பெருந்தன்மையாகத் திரும்பத் தொடங்கியது. வினேஷ் போகத் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று ஏராளமானோர் பேசத் தொடங்கினர்.

சமூக ஊடகங்கள் அவருக்கான ஆதரவு வார்த்தைகளால் நிறைந்திருந்தன. வினேஷ் போகத்திற்காக ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டன. அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக சித்திரங்கள் நிறைய வரையப்பட்டன. இன்னொருபக்கம் அவருக்கு எதிரான சிலகுரல்களும் ஓரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகிப்பதற்கான முகாந்திரம் இல்லாமல் இல்லை. அழுத்தம் திருத்தமாக இருக்கவே செய்தது. 

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின்மீது குற்றச்சாட்டை வைத்து, வழக்கம்போல எந்த நீதியும் கிடைக்காததால், வீதியில் இறங்கிப் போராடினார்கள் வீராங்கனைகள். நியாயத்திற்காக வினேஷ் போகத்தும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். நீதி வழங்காதவர்களை நேருக்குநேராக எதிர்த்து நின்றார். எதிர்க்கவே முடியாது என்று இறுமாப்பாய் இருந்த அதிகாரத்தை ஒரு வீராங்கனைக்கே உரிய வலிமையோடு எதிர்த்து நின்றார். ஆக, அவருடைய தகுதிநீக்கத்திற்குப் பின்னால் இத்தனையும் இருக்குமோ என்று யோசித்தார்கள் எல்லோரும்.

ஆனால், அவரை விமர்சிக்க வந்தவர்களில் சிலர் வெட்கமேயில்லாமல் வினேஷ் போகத்திற்கு மல்யுத்தம் பற்றிய வகுப்பெடுத்தார்கள். எடையை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஒருசிலர் அரசாங்கம் அவருக்காக செலவுசெய்த தொகையைச் சொல்லிச்சொல்லி பெருமைபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, அந்த வீராங்கனையை இகழ்வதாக எண்ணிக்கொண்டு அவர்களையே இகழ்ந்துகொள்கிறார்கள் என்று. ஆனால், முதலாளித்துவச் சகதிக்குள் மூழ்கிக் கிடப்பவர்களால், முதலாளித்துவச் சிந்தனையில் ஊறிக் கிடப்பவர்களால் இப்படியல்லாமல் வேறெப்படி பேசமுடியும்.

ஆனால், அதே ஒலிம்பிக் மேடையில், அதே மல்யுத்தப் பிரிவில் இந்த உலகம் வியந்து பார்க்கக்கூடிய ஒரு சாதனையை நிகழ்த்தினார் சோசலிசக் கியூபாவிலிருந்து வந்திருந்த மிஜைன் லோபஸ் என்ற மல்யுத்த வீரர். அதிலும் ஒலிம்பிக் போட்டிக்கு வருவதற்கு முன்னால் கொடுத்த பேட்டியொன்றில், ìஐந்தாவது முறையாக கியூபாவிற்காகத் தங்கப்பதக்கத்தை வென்று அந்த மேடையிலேயே ஓய்வை அறிவிப்பேன்î என்று சொல்லிவிட்டு வந்தார். சொன்னதுபோல் செய்தார். ìகியூபா எனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் கியூபாவிற்குத் திருப்பிக் கொடுப்பேன்î என்று சொன்ன அவரின் பேச்சு எல்லோராலும் கேட்கப்பட்டது. வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது. மிஜைன் லோபஸோடு சேர்த்து கியூபா இரண்டு தங்கம் ஒரு வெள்ளி ஆறு வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றது. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் இருந்தால், கியூபாவின் மீது கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருக்கும் பொருளாதாரத் தடையைத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஒபாமா அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் போது, கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்க விரும்புகிறேன் என்று சொன்னார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அவ்வளவு லேசுப்பட்டதா என்ன? யார் அதிபராக வந்தால் என்ன, சோசலிச சமுதாயத்தை ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாது என்பதே பதிலாக இன்றுவரையிலும் இருந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபா அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்கள் சொல்லுக்குள் அடங்காதது. அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டுதான் கியூபா வாழ்ந்து கொண்டிருக்கிறது நம்பிக்கையாக. அத்தனை தடைகளையும் தாண்டித்தாண்டித்தான் கியூபா வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. வினேஷ் போகத், மிஜைன் லோபஸிற்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லையென்ற போதிலும், இதோ பெரும்துயரம் சுமந்து வினேஷ் போகத் இந்தியா திரும்பி வருவதையும், பெரும் மகிழ்ச்சியுடன் மிஜைன் லோபஸ் கியூபா திரும்பிச் செல்வதையும் சமூகப் பின்புலத்தோடு புரிந்துகொள்வது அவசியம்.     

இத்தனை ஆண்டுகள் பொருளாதாரத் தடைகளையும் தாண்டி மருத்துவம், கல்வி, விவசாயம், விளையாட்டு என கியூபா ஒளிர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும். ஒரு கோடியே பதினோரு லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட தீவாக இருந்தாலும், பக்கத்தில் பெரும் முதலையொன்று வாயைப்பிளந்துகொண்டு விழுங்கத் தயாராக இருக்கும்போதிலும், ஏகாதிபத்தியத்தின் கரங்களால் எதுவுமே செய்ய முடியாமல் உறுதியாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? ஒன்றுமில்லை மக்களை நேசித்த, மக்களுக்காக மட்டுமே யோசித்த ஒரு மக்கள் தலைவர் அங்கிருந்தார். புரட்சியால் அந்த தேசத்தை விடுதலை செய்து, பெரும் புரட்சியால் அந்த தேசத்தை வளர்த்தெடுத்தார். இன்று அந்தத் தலைவர் இல்லையென்றாலும், நிலமெங்கும் விதைக்கப்பட்ட அவருடைய கருத்துக்கள் வளர்ந்து பெருகியிருக்கின்றன. அந்தக் கருத்துக்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப் பிரசவித்துக் கொண்டேயிருக்கின்றன. முக்கியமாக முதலாளித்துவச் சமூகத்தின் கேவலமான அரசியலும், அதிகாரத்தின் கோரமும் இல்லாமல் அங்கே மனிதன் மனிதனாக மதிக்கப்படுகிறான். விளையாட்டு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்காகவும் என் அன்புத் தோழர் ஃபிடலுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 14/08/2024 - 10:14 AM

ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வரலாற்று நாயகன் பிடல் காஸ்ட்ரோ குறித்தும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் கியூபா குறித்தும் அற்புதமான படைப்பொன்றைச் சுருக்கமாகப் படைத்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

அதில் ஒலிம்பிக் சாதனையும் அடங்கும்.

படித்துத்தான் பகிருங்களேன்.

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply