”என்னுடைய இதயம்
இன்னும் என் தேசத்தின்
வசந்த காலத்திலேயே குடிகொண்டிருக்கிறது ” 1
ஜப்பானிலிருந்து முதன்முறையாக அமெரிக்காவிற்குச் சென்ற காடோ சோமோ என்ற கவிஞன், இந்த ஹைக்கூவின் வழியாகத் தன்னுடைய தேசத்தைத் திரும்பிப்பார்க்கிறான். கடல்கள் பலகடந்து, மலைகள் பலகடந்து, பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்தவனைப் பாருங்களேன், இதயத்தை மறந்து அவனுடைய தாயகத்திலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறான். அதுவும் தாயகத்தின் வசந்தகாலத்தில். யுத்தங்களின் விளைவாகப், பொருளியல் காரணங்களுக்காக, இந்தப் பூமியெங்கும் சிதறிக்கிடக்கும் எண்ணிலடங்கா புலம்பெயர்ந்த மனிதர்களை நினைக்கத் தூண்டுகிறது இந்தக் கவிதை. எத்தனை இதயங்கள் இன்னுங்கூட தாய்நிலத்தில், தாய்நிலத்தின் வசந்தகாலத்தில் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்குமோ என்பது இதயமிருக்கும் யாராலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.
ஆனபோதிலும் தாய்நிலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கோ, இந்தக் கவிதை இன்னொரு பார்வையைக் கொடுக்கிறது. பணமதிப்பிழப்பு, பள்ளத்தாக்கின் மதிப்பிழப்பு, குடியுரிமைச்சட்டம், அவசர அறிவிப்பால் புலம்பெயர் தொழிலாளர்களை சாலைகளெங்கும் நடந்திடச்செய்த அவலம், சகோதர மனிதர்களுக்குள் வன்முறையைத் தூண்டுவதில் இருக்கும் ஆர்வம், பிரிவினையை மட்டுமே முன்னிறுத்தும் கொடுமை, நீண்டநாட்களாக எண்ணற்ற விவசாயிகளைப் போராடவைத்த ஆணவம் என எல்லாமும் ஒன்றாய்ச் சேர்ந்து என்னையும் வசந்தகாலத்தை எண்ணி ஏங்கிடச்செய்கிறது. இந்தத் தேசத்தில் நினைத்துப்பார்க்கக் கூடிய அளவிற்கு நிம்மதியான இறந்தகாலம் இல்லையாதலால் ஏற்றத்தாழ்வு இல்லாத, பாகுபாடு இல்லாத, பிரிவினைப் பேச்சுகள் இல்லாத எதிர்காலத்தின் வசந்தத்தை எதிர்நோக்குகிறேன். இப்படி ஒற்றைத் துளிக்குள்ளும் ஒளிந்திருக்கும் கடல்போல, ஒரு கவிதைக்குள் எண்ணற்ற தரிசனங்களைக் காணலாம் கண்கள் இருந்தால். இதைத்தான் கவிக்கோ. அப்துல் ரகுமான் சொன்னார்,” ஹைக்கூ என்பது வாமன அவதாரம் போன்றது “ என்று.
ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் என்று சொல்லப்படுகிறது. அதென்ன தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் எப்படி என்ற கேள்விகளோடு நான் சுற்றியலைந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். இறைவனை எடுத்துவிட்டு கவிதையைப் போட்டுப்பார்த்தால் புரிந்துகொள்ளலாம், அதுவும் ஹைக்கூவைப் போட்டுப்பார்த்தால் இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். ஹைக்கூ என்பது வெறும் மூன்றுவரி மட்டும் கிடையாது. எழுதப்பட்ட அந்த மூன்றுவரிக்கு முன்னால் ஒளிந்திருக்கிறது ஒரு நீண்ட பயணம், வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அந்த மூன்று வரிகளோடு இணைந்திருக்கிறது ஒரு நீண்ட தேடல், முடிவடையாமல் இருக்கும் அந்த உணர்வின் உச்சநிலை வெளிப்பாடோ, வாசிக்கும் ஒவ்வொருவனையும் சூறாவளியைப் போல தனக்குள் இழுத்துக்கொள்ள விழைகிறது. ஆக, அறிந்துகொள்வதற்கு முன்னமே ஹைக்கூ என்ற பெயரில் ஆயிரமாயிரமாய் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கும் எதைப்பற்றியும் என்னிடம் கேட்காதீர்கள். எனக்கும்கூட ஹைக்கூ எழுதவராது என்பதை இந்நேரம் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களை, முக்கியமாகத் திருக்குறளைப் புரிந்துகொண்ட யாருக்கும் ஹைக்கூவை விளங்கிக் கொள்வது பெரிய காரியமாக இருக்காது. ஜப்பானில் தோன்றிய இந்த இலக்கிய வடிவம் உலகத்தின் எல்லா மொழிகளிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்பதும். உலகத்தின் எல்லா மொழிகளிலும் முயற்சிசெய்து பார்க்கப்பட்டது என்பதும் வரவேற்கத்தக்க ஒன்றுதான். எளிமையாக இருக்கிறதென்று எல்லோரும் எழுதுகிறார்கள் என்பது இணையதளத்தைத் திறந்தால் தெரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் ஹைக்கூ என்பது வெறும் எளிமை மட்டுமல்ல, எளிமைக்குள் இருக்கிற ஆழத்தைக் கண்டுகொள்வதுதான் வியப்பளிக்கக் கூடியது. இரண்டடியில் உலகை அளந்திருக்கிறதே என்று திருக்குறளை வியப்பது போல, ஹைக்கூவும் கூட மூன்று வரிகளில் உலகையும், இயற்கையையும், வாழ்க்கையையும் அளந்திருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்லலாம்.
மின்னலைப் போன்று ஒரு கவிஞனின் மனதில் எழுகின்ற உணர்வுகள்தான் கவிதைகளாக வெளிப்படுகிறது என்று வைத்துக் கொண்டோமானால், ஹைக்கூ என்பது வேறொன்றுமில்லை அந்த மின்னலேதான். ஒரு தேர்ந்த கவிஞன் தன்னுடைய கவிதைகளில் காட்சிகளை வார்த்தைகளால் வரைந்திருப்பான், அந்த வகையில் ஹைக்கூ என்பது ஒரு காட்சியின் நொடித்தோற்றம் தான். ஒவ்வொரு பொருளிலுமுள்ள மனித உழைப்பைக் கழித்துவிட்டால் இந்த உலகத்தில் வெறும் குப்பைகள்தான் மிஞ்சும் என்ற மாபெரும் உண்மையைப் போல, உணர்ச்சியைக் கழித்துவிட்டால் கவிதையில் எதுவும் மிஞ்சாது, அந்த வகையில் உணர்தலின் உச்சத்தில் நின்று வெளிப்படுத்தப்படுவதுதான் ஹைக்கூ. மழையை விரும்பாதவர்கள் யாராவது இருக்கமுடியுமா? அதுவும் கவிஞர்கள் மழையை ஆராதிக்கக் கூடியவர்கள். அந்தப் பெருமழையின் ஒற்றைத்துளி ஓராயிரம் விந்தைகளைத் தனக்குள் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா, அந்த விந்தைதான் கவிதை, அந்த விந்தைதான் ஹைக்கூ.
”நிலவைப் பார்க்கையில்
நினைவில் வருகிறார் தந்தை
மேகத்திற்குள் நடக்கிறோம்” 2
ராபர்ட் வெய்ஸ்னர் என்ற கவிஞன் எழுதிய இந்தக் கவிதையில் என்னைப்போலவே நீங்களும் நீண்டநேரம் தங்கியிருக்க நேரலாம். அதுவும் தந்தையை இழந்தவர்களுக்கோ இந்தக் கவிதையானது, தந்தையின் நினைவுகளையும் அவருடைய வார்த்தைகளையும் ஆழ்மனதிலிருந்து அள்ளிக்கொண்டுவரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இருக்கும் போது அலைக்கழிக்கப்படும் தந்தைகளோ, இறந்தபின்னர் இப்படியெல்லாம் நினைக்கப்படுகிறார்கள் என்ற நிகழ்கால வேதனையும் எனக்குள் எழாமலில்லை.
”பெயர் தெரியாத
பறவையின் பாடல்
அடர்ந்த காட்டுக்குள் அழைக்கிறது என்னை” 3
என்று எழுதியிருக்கிறான் லேரி கேட்ஸ் என்ற கவிஞன். பெயர் தெரியாத எந்தப் பறவையும் எந்த மனிதனையும் ஒருபோதும் அழைக்கப்போவதில்லை. பூ மலர்வதைப் போல, விடியல் வருவதைப் போல பறவையும் பாடுகிறது. ஆனால் தன்னை அழைக்கக்கூடிய ஒரு ஜீவனின் குரலை அந்தப் பறவையின் குரலோடு பொருத்திப் பார்க்கும்போது அது கவிதையாகிறது. அடர்ந்த காடுகளையெல்லாம் அழிக்க மட்டுமே தெரிந்த நம்மைப் போன்றவர்களுக்கு அந்தப் பறவையின் பாடல் முகாரி இராகத்தில் அமைந்த சோககீதமாகக் கூட இருக்கலாம். இருப்பதைச் சொல்வது மட்டுமல்ல கவிதை. இருப்பதையெல்லாம் இழந்ததோடு பொருத்திப்பார்ப்பதும், இழந்தைவற்றையெல்லாம் இருப்பவைகளோடு பொருத்திப் பார்ப்பதுமே கவிதையை மொழியின் அரசியாக்குகிறது.
”நீண்ட பயணத்தில்
ஓக் மரத்தின் கிளையானது
ஊன்றுகோலாகிறது” 4
என்ற இந்தக் கவிதையை கேரி கேய் என்ற கவிஞன் கண்டிப்பாக ஒரு நீண்ட பயணத்தில்தான் எழுதியிருப்பான் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஜப்பானியர்கள் ஹைக்கூ எழுதுவதற்காகவே பயணம் செய்வார்கள் என்ற உண்மையை உள்ளுக்குள் இருத்திக் கொள்ளுங்கள். ஊன்றுகோல் தேவைப்படுகிற பயணமென்றால் அது நடைபயணம்தான். அதுவும் நீண்ட பயணத்தில் கால்களின் வேதனை சொல்லி மாளாதது. அப்படிப்பட்ட கால்களின் வேதனையை மூன்றாவது காலாக மாறிய ஓக் மரத்தின் கிளையும் பகிர்ந்து கொள்கிறது என்பது ஆறுதலளிக்கக்கூடியதுதான். இந்தக் கவிதையை வாசிக்கும்போது கபிலர் ஞாபகம் வந்தார். பாரி இல்லாத பறம்பு மலையை, ”நிழலே இல்லாத நீண்ட பாதையில் இருக்கும் தனிமரம்“ என்று குறிப்பிடுவார் கபிலர். நீண்ட பயணம் என்ற வார்த்தைகளை நினைக்கும் போதே பொறுப்பற்ற அரசாங்கத்தால் பொறுப்பில்லாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அறிவிப்பால், இந்த தேசத்தை இணைக்கும் எல்லாச் சாலைகளிலும் சாரைசாரையாக நடந்துசென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம் என்னிதயத்தை நிறைத்துக் கொள்கிறது. வலிநிறைந்த அவர்களின் நீண்ட பயணத்தில் எத்தனை மரங்களின் எத்தனை கிளைகள் அவர்களுக்கு ஊன்றுகோலாக மாறியிருக்கும் என்ற எண்ணிக்கையை எண்ணாமல் இல்லை நான்.
இப்படி இயற்கையைப் பதிவு செய்யும், வாழ்க்கையைப் பதிவுசெய்யும், பயணங்களில் பார்த்த விந்தையைப் பதிவுசெய்யும் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதன் தோற்றம் ஜப்பானாக இருந்தாலும், அது சென்றுசேர்ந்த எல்லா மொழிகளிலும் அந்த மொழியின் ஓசைக்கு ஏற்ப, அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு சிப்பியும் முத்துக்களைப் பிரசவிப்பதைப் போல, ஒவ்வொரு சமூகமும் கவிதைகளைப் பிரசவித்துக் கொண்டேயிருக்கிறது. ஜப்பானில் இயற்கையைப் பாடிய ஹைக்கூவானது அமெரிக்காவிற்குச் செல்லும்போது அங்கே கறுப்பினத்தவர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்குகிறது. வாழ்வின் மீதான தங்களின் ஆசைகளையும், நிறப் பாகுபாட்டிற்கெதிரான தங்களின் கோபங்களையும், சமத்துவத்திற்கான தேவையையும் ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படுத்தினார்கள் கறுப்பினத்தைச் சேர்ந்த கவிஞர்கள். விடுதலையை விரும்பிய அவர்களின் இசைவடிவமான ஜாஸிலும், புளூஸிலும் ஹைக்கூ கவிதை வடிவமானது கச்சிதமாகப் பொருந்திப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஹைக்கூ கவிதைகளின் மேல் ஆர்வம் கொண்டு எழுதத்தொடங்கிய முதல் கறுப்பினக் கவிஞனான லூயிஸ் ஜி அலெக்ஸாண்டர் என் மக்களுக்கு என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறான்.
” இரவு அழகாக இருக்கிறது
அதனால் என் மக்களின் முகங்களும்”
” நட்சத்திரங்கள் அழகாக இருக்கின்றன
அதனால் என் மக்களின் கண்களும் “
” அழகானது, சூரியனும்
அழகானது என் மக்களின் ஆன்மாக்களும் “ 5
என்ற இந்தக் கவிதைகளுக்குள் நிறைந்திருக்கும் நியாயமும் ஆதங்கமும் இன்னுங்கூட தீர்க்கப்படாத பிரச்சனைகளாகத்தான் இருக்கின்றன. ஜார்ஜ் பிளாய்டின் நெரிக்கப்பட்ட குரல்வளைக்குள்ளிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலியின் சுயசரிதை நூலான ” கருப்பும் அழகானதே “ என்ற புத்தகத்தில் அவர் சொல்வது நினைவிற்கு வருகிறது, ” நல்லதாக இருக்கும் எதுவுமே எங்களின் – கருப்பர்களின் – பிரதிபலிப்பாக இல்லை. ஆனால் கருப்பாக இருக்கும் எல்லாமே கெட்டதாகவும், விரும்பத்தகாததாகவுமே கருதப்பட்டது. கருப்புப் பூனைகள் துரதிருஷ்டத்தின் குறீயீடாகச் சொல்லப்படுகிறது. பேய்கள் உண்ணும் கேக் கூட கருப்பாக இருக்கிறது, தேவதைகள் சாப்பிடும் கேக்கோ வெள்ளையாக இருக்கிறது. இவை யாவும் சிலவற்றை நுட்பமாகப் புலப்படுத்துபவையாக இருக்கிறது, ஆனாலும் அவை ஏற்படுத்தும் பாதிப்போ பெருவீச்சு கொண்டது.” அப்படிப்பட்ட பாதிப்பில் எழுதுகிறார் அலெக்ஸாண்டர்,
“ காற்றில் ஆடும்
செர்ரி பூக்களைப் போல
என் உடைந்த நம்பிக்கைகள் “ 5
என்ற கவிதையை வாசித்துவிட்டு நீண்டநேரம் மெளனமாகத்தான் இருக்க முடிந்தது. ” மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை “ என்ற புரட்சியின் குருநாதர் மாவோவின் கவிதையானது ஞாபகம் வந்தது தற்செயலானதல்ல என்றே நம்புகிறேன்.
ஜென் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்து வந்த ஹைக்கூ வடிவமானது, எந்தெந்த மொழியில் எப்படியெல்லாம் ஊடுருவி எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தொடக்ககாலத்தில் ஜப்பானில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஹைக்கூக்கான கடுமையான வரையறைகள் காலப்போக்கில் மாற்றம் பெற்றிருக்கின்றன. பொதுவாகக் ”கவிதையானது இலக்கணம் சாராதது” என்று சொல்லுவார் ஆய்வாளர் கிறிஸ்டோபர் காட்வெல். கவிதையென்பது உணர்ச்சிகளிலிருந்து பிறக்கக்கூடியது, இலக்கணப்படி உணர்ச்சிவசப்பட முடியாது என்பதைப் போல, இலக்கணப்படி மட்டுமே கவிதை எழுதவும் முடியாதுதான். எது எப்படி ஆயினும் கவிதை என்பது முழுமையாக உணர்ச்சி சார்ந்தது. ஹைக்கூ வடிவமும் கூட இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைத்தான் அதிகமாகப் பேசுகிறது. இயற்கையை மனிதன் இன்னும் புரிந்துகொள்ளும் முயற்சிதான் ஹைக்கூ என்றுகூடச் சொல்லலாம். எல்லோரும் பார்த்துவிட்டுக் கடந்துசெல்லக் கூடிய காட்சிகளை கவிஞன் தான் கவிதைகளாக மாற்றுகிறான். ஆகையால் கவிஞனைப் பற்றிக்கொள்ளுங்கள். இயற்கையின் இரகசியங்களை, வாழ்வின் சூட்சுமங்களை அவன் தான் உங்களுக்குச் சொல்லப்போகிறவன். அவனுடைய வார்த்தைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களை பற்றியெரியச் செய்யும் எண்ணற்ற வார்த்தைகளைப் பிரசவித்திருக்கிறான் அவன். அதனால்தான் ஆய்வாளர் எமர்சன் சொன்னார், ” சரித்திரத்தில் புனிதமான சம்பவமாகப் போற்றப்படுவது ஒரு கவிஞனின் பிறப்புதான் “ என்று.
இப்படிப்பட்ட ஹைக்கூ கவிதைகள் தன்னுடைய வளர்ச்சிப் போக்கில் இயற்கையை மட்டுமல்லாமல் மனித சமூகத்தின் சகலத்தையும் பாடுபொருளாகக் கொண்டு வெளிவரத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அழியா வடுக்களான இரண்டு உலகப் போர்களையும், முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் வடிவமான ஏராளமான போர்களையும் கண்ட பின்னர், போருக்கு எதிரான ஹைக்கூக்களை எழுதத் தொடங்கினார்கள் நிறையக் கவிஞர்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் கூட உக்ரைனைப் போர் மேகங்கள் சுற்றிலும் சூழ்ந்திருக்கின்றன. எல்லா அழிவுகளையும் பார்த்த பிறகும் கூட அழிவைத் தேடி ஓடுவது மனித மனத்தின் ஆச்சர்யமான அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் எம்.இ.சேஷ்டி என்பவரால் தொகுக்கப்பட்ட போருக்கு எதிரான ஹைக்கூ என்ற தொகுப்பில் இந்தக் கவிதையைக் கண்டபோது கலங்கிப் போனதும் கோபம் வந்ததும், ஒருசேர நிகழ்ந்தது.
” மாவீரர்களின் கல்லறையில்
தனியாக நிற்கிறான்
அழுகையை வென்றுகொண்டே “ 6
மாவீரர்களின் கல்லறைகள் நமக்குத் பரிச்சயமில்லாததல்ல. ஏகாதிபத்தியத்தின் கூட்டு யுத்தத்தில் நாமும் பறிகொடுத்திருக்கிறோம் எண்ணற்ற நம்முடைய மாவீரர்களை. மாவீரர்களின் கல்லறைகள் கண்ணீர் சிந்தக்கூடிய இடமல்ல. மாவீரர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் நினைவுகூரக்க்கூடிய இடம். மாவீரர்களின் கனவுகளை நனவாக்க உறுதிமொழி எடுக்கக்கூடிய இடம் என்றுதான் இந்தக் கவிதை என்றுதான் இந்தக்கவிதை நினைக்கத் தூண்டுகிறது. மாவீரர்களின் கல்லறையில் தனியாக நிற்கும் அந்தக் காட்சி மனக்கண்ணில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
புகைப்படக்கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் வரையிலும் ஒருபக்கம் ஓவியர்களென்றால் இன்னொருபக்கம் கவிஞர்களும் சேர்ந்தல்லவா கழித்துவிட முடியாத அத்தனைக் காட்சிகளையும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சிக் கவிஞர் என்றழைக்கப்படும் கபிலரின் பாடல்களிலும், எண்ணற்ற சங்க இலக்கியப் புலவர்களின் பாடல்களிலும் அன்றைய இயற்கையை, அன்றைய வாழ்க்கையை புருவம் உயர்த்தி, இமைக்காமல், வியப்பு அடங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். முக்கியமாக நமது பத்துப்பாட்டின் ஏழாவது பாட்டாகிய நக்கீரனாரின் நெடுநல்வாடை முழுக்க காட்சிக் கவிதைதான். என்னைக் கேட்டால் ஹைக்கூவைப் புரிந்துகொள்ள விரும்பும் யாருக்கும் நெடுநல்வாடையைப் பரிந்துரை செய்வேன் நிச்சயமாக. 188 வரிகளாலான நெடுநல்வாடை ஹைக்கூ வடிவத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தக் காட்சிக் கவிதையின் அத்தனை வரிகளிலும் ஹைக்கூ கவிதையின் தன்மை இருக்கத்தான் செய்கிறது.
குளிர்காலத்தைக் காட்சிப்படுத்த விரும்பிய நக்கீரானாரின் காட்சித்தொகுப்பைக் கொஞ்சம் பாருங்கள்.
”ஓயாத மழையில் உயரமான இடங்களுக்கு ஆடு மாடுகளோடு விரைகிறார்கள் இடையர்கள். ”
”குன்றும் குளிர்ந்து கிடக்கிறது குளிர்கால இரவில். ”
”மேய்ச்சலையே மறந்து கிடக்கின்றன விலங்குகள். ”
”ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் புறாக்கள் கால்களை மாற்றிமாற்றி வைத்துக்கொள்கின்றன. ”
”அரைக்கப்படாமல் கிடக்கின்றன சந்தனக் கட்டைகள். ”
”பயன்படுத்தப்படாத விசிறியானது சிலந்திவலை பின்னப்பட்டு ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது”.
”தொடர் மழையின் கடுங்குளிரால் மாறுபட்ட ஸ்வரத்தில் ஒலிக்கும் யாழினை தங்களுடைய மார்பினில் ஏந்திஏந்தி வெளிப்படும் வெப்பத்தில் சரிசெய்கிறார்கள் ஆடல்மகளிர்கள். ”
என்பதைப் போல இன்னும் ஏராளமான புதையல் இருக்கும் நெடுநல்வாடையை கொஞ்சமாக உங்களுக்குத் திறந்து காட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். ஹைக்கூவை ஹைக்கூவில் இருந்து மட்டும் புரிந்துகொள்ள முடியாது என்பதையும், கவிதையைக் கவிதையில் இருந்துமட்டுமே விளங்கிக்கொள்ள முடியாது என்பதையும் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். போலிகளைக் கண்டு ஏமாறாத திறமை உங்களுக்கு இருக்குமானால் ஹைக்கூ கடலில் கண்டிப்பாக முத்தெடுக்கலாம் அள்ள அள்ளக் குறையாமல்.
தேடுங்கள் கண்டடைவீர்கள். ஒற்றைத் துளியில் ஒளிந்திருக்கும் பெருங்கடலைப் போல ஹைக்கூ எங்கெங்கும் நிறைந்திருக்கிறது.
(நன்றி : 2023 தை இதழில் வெளியிட்ட அண்ணன். அறிவுமதி அவர்களுக்கு )
,
