வெறுப்பின் வரலாற்றுப் பாத்திரம்

“வெறுப்பு” சமீப காலமாக இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

நீண்டகாலமாக வெறியூட்டப்பட்ட சாதியுணர்விலிருந்தும், நீண்டகாலமாகத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மதவுணர்விலிருந்தும் பீறிட்டுக் கிளம்பும் வெறுப்பின் விளைவுகள் இரத்தமும் சதையுமாக, ஏன் சிலவேளைகளில் அம்மணமாகவும் நம் கண்முன்னால் பரந்து கிடக்கிறது.    

ரஷ்யாவிற்கும், உக்ரைனைப் பகடைக்காயாகப் பயன்படுத்திப் போரில் ஈடுபட்டிருக்கும் நேட்டோவிற்கும் இடையில் நீடித்துக் கொண்டிருக்கும் யுத்தத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அணுஆயுத அச்சங்களை விடவும் வெறுப்புதான் மிகுந்த அச்சந்தரக்கூடியது என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது.

சமூக வாழ்க்கையில் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று இருக்குமானால், அது சக மனிதர்களின் மீது காட்டப்படும் வெறுப்புணர்வுதான்.

சொல்லப்போனால் மனிதகுல வரலாறு முழுவதுமே வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறுதான்.

ஆதியில் பிரசவிக்கப்பட்ட வெறுப்பு உட்கார்ந்து சாப்பிடவும், உழைக்கவும் என மனித சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்தது. மதத்தின் துணைகொண்டு இதுதான் உன்னுடைய விதி, இதுதான் உன்னுடைய வாழ்க்கை என்று ஓவ்வொரு உழைக்கும் மனிதனையும் நம்பச்செய்தது.

அவன் நம்பிக் கொண்டிருந்தான், அப்படி நம்பிக் கொண்டுதான் அவன் உழைத்துக் கொண்டிருந்தான். அப்படி உழைத்து உழைத்துதான் அவன் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தான்.

இந்தச் சமூகத்தில் தீண்டாமை என்ற மனிதத் தன்மையற்ற செயலை நிலைநாட்டியவர்கள் எவ்வளவு குரூர மனங்கொண்டவர்களாகவும், இதயத்தில் எவ்வளவு வெறுப்பைச் சுமந்தவர்களாகவும் இருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

அதற்குத் தகுந்தவாறு கடவுள்களை உருவாக்கிக் கொண்டும், அதற்கு தகுந்தவாறு மதங்களைக் கட்டமைத்துக் கொண்டும் வரலாறு முழுக்க வெறுப்பின் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை.

அடிமைகளின் மீதான வெறுப்பைக் கொட்டிக் கொட்டித்தான் கட்டியெழுப்பப்பட்டன உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு சாம்ராஜ்யங்களும்.  

உலகத்தின் உயர்ந்த நாகரீக சமூகமென்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் அமெரிக்க இதயங்களிலிருந்து கறுப்பினத்தவர்கள் மீதும், அந்த நிலத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் மீதும் காட்டப்பட்ட வெறுப்பை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா.

இந்த உலகத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் மறைந்துவிடமுடியாத அளவிற்கு வெறுப்பின் அடையாளமாய் வரலாற்றில் வந்துவிட்டுப் போனான் ஒருவன்.

ஆரியத்தூய்மை பேசிப்பேசி, ஆரியமேன்மை பேசிப்பேசி அவன் வளர்த்துவிட்ட வெறுப்பின் விளைவுகளை இன்னும்கூட மறைந்திருக்கும் புதைகுழிகளில் இருந்து தோண்டித் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் வெறுப்பின் வரலாற்றுப் பாத்திரம் படுகொலைகளாலும், அடிமைகளின் அவலங்களாலும், தீண்டாமையென்னும் மன்னிக்கவே முடியாத பெருங்குற்றங்களாலும் நிறைந்திருக்கிறது.

மனித வரலாற்றில் நவீன சமூகமான முதலாளித்துவ சமூகமானது உழைக்கும் மக்களின் மீது காட்டிய வெறுப்புதான் இலாபங்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன இன்றளவும்.

சமூகங்களுக்குள் பற்றவைக்கப்படும் வெறுப்பென்னும் நெருப்பு அவ்வளவு எளிதாக அணைக்க முடியாதது என்பதற்கு மணிப்பூர் சாட்சியாக எரிந்து கொண்டிருக்கிறது.

பால்வெளியில் இருக்கும் கருந்துளையானது எல்லாவற்றையும் இழுத்துக்கொள்வதைப்போல, சமூகங்களுக்கிடையில் விதைக்கப்பட்ட வெறுப்பும் அளவிடமுடியாத மனித இரத்தத்தையும், கணக்கிடமுடியாத மனிதக்கறியையும் இழுத்துக் கொள்ளத்தான் செய்யும்.

மனித வரலாற்றோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அந்த வெறுப்பை வேரறுக்க வேண்டுமானால் நிச்சயமாக வெறுப்பின் வேர்களை முற்றும் முழுவதுமாக ஒழித்தாகத்தான் வேண்டும்.

அந்தவகையில் வெறுப்பின் வரலாற்றுப் பாத்திரம் வெறும் வெறுப்பினால் மட்டுமே நிறைந்திருக்கவில்லை. அன்பின் ஆயுத்தை ஏந்தியவர்களும் வரலாறு முழுக்க வரிசையாக வந்துகொண்டேதான் இருந்தார்கள்.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று சொன்ன மாமேதையின் மேதமையை இந்த வேளையில் நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு தெரியுமா மாமேதைகள் மானுட வெறுப்பிலிருந்தல்ல மானுட அன்பிலிருந்துதான், அன்பிலிருந்து மட்டும்தான் உருவாகி வருகிறார்கள்.

அப்படித்தான் சமூகங்களை வர்ணங்களாகப் பிரித்து வசதியாக உட்கார்ந்து கொண்டிருந்த சனாதான தர்மத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தார் புத்தர்.

நாங்கள்தான் உலகத்தின் மாபெரும் சாம்ராஜ்யம் என்று பீற்றிக்கொண்டிருந்த அந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடிமடியில் புரட்சியின் நெருப்பை பற்றவைத்து, மணிமுடி தரித்த மன்னர்களையெல்லாம் பதைபதைக்க வைத்தான் அடிமைச் சமூகத்திலிருந்து எழுந்து வந்த உண்மையான மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.

புதிய சமூகத்தை புதிய வாழ்க்கையை நிலைநாட்டப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டு வந்த முதலாளித்துவச் சமூகத்தின் இலாப வெறியை, நாடுபிடிக்கும் ஆசையை, நாள்முழுக்க முதலாளிகள் நிகழ்த்திய கொடூரமான உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்து உண்மையான புதிய சமூகத்திற்கு வழியமைத்துக் கொடுத்தார் கார்ல் மார்க்ஸ்.

பாட்டாளிவர்க்கத்தின் மீது கொண்ட மாபெரும் அன்பினால் நடக்கவே நடக்காது என்று நம்பிக்கொண்டிருந்த புரட்சியை உலகத்தின் கண்களெல்லாம் வியந்து பார்க்கும்படி நடந்திடச் செய்தார் புரட்சியின் விஞ்ஞானி லெனின்.

அந்தப் புதிய சமூகத்தின் போர்வீரர்கள் வெறுப்பை விதைத்து அதிகாரத்தை பற்றிக்கொண்டிருந்த இரக்கமேயில்லாத ஹிட்லரை என்ன செய்தார்கள். போல்ஷ்விக்குகள், மனிதகுல விரோதிகளான நாஜிக்களையும் அவர்களின் தலைவன் ஹிட்லரையும் அழித்ததை வரலாற்றின் ஆனந்த நடனமாகத்தான் எப்போதும் நினைவு கூறுவேன் நான்.   

ஆகவே தோழர்களே, மானுட வரலாறு முழுவதும் வெறுப்பு நிறைந்திருக்கிறதைப்போல, வெறுப்பிற்கெதிரான போராட்டங்களும், புரட்சிகளும், வெற்றிகளும் நிறைந்திருக்கின்றன என்பதும் கவனிக்கப்படக்கூடியதுதான்.

வெறுப்பின் கரங்களால் வீடுகள் இடிக்கப்படும் போது, ஆண்டாண்டு காலங்களாக அங்கே வாழ்ந்தவர்களின் இதயங்கள் எப்படித் தவியாய்த் தவித்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

வெறுப்பின் கரங்களால் ஆடைகள் களையப்பட்டு, அம்மணமாக்கப்பட்டு, பலாத்காரம் செய்யப்படும்போது உதவிக்காகத் துடிக்கும் அந்த இதயத்தின் அழைப்பைக் கேட்க முயற்சி செய்யுங்கள்.

சொந்த நிலத்தில் அகதிகளாக நின்றுகொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில் நீங்களும் நின்று கொண்டிருப்பதாக ஒருதரம் நினைத்துப்பாருங்கள்.

வெறுப்பு பிரசவிக்கும் வலிகளையும், வேதனைகளையும், இழப்புகளையும் மாற்றத்திற்கான விசையாக மாற்றியே தீரவேண்டிய காலத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

குஜராத்தில் தொடங்கி மணிப்பூரில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பின் நெருப்பை பற்றவைத்தவர்களைப் போலவே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வரலாறு அவப்பெயரைத்தான் வழங்கப்போகிறது. அந்த அவப்பெயர் நமக்கு வேண்டாம்.

இந்த முதலாளித்துவ சமூகம் வெறுப்பின் மூலம் கட்டமைக்கப்படும் யுத்தங்களின் வழியாகவும், கலவரங்களின் வழியாகவும் வரலாறு நெடுகிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. யுத்தமோ கலவரமோ ஆதாயமடைந்தவர்கள் யாரென்று பார்த்தால் எளிமையாகப் புரியக்கூடிய உண்மையிது.

இப்போது செய்யவேண்டியதெல்லாம் வெறுப்பின் வேர்களை முழுவதுமாக, முற்றும் முழுவதுமாக வெட்டிச் சாய்க்கவேண்டியதுதான்.

சொல்லமுடியாது நாளைய வரலாற்றில் நீங்களே நாயகராக இருக்கலாம்! இருக்கவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன் நானும்.

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 11/08/2023 - 12:23 PM

வெறுப்பு அரசியல் அரியணையில் அமர்ந்திருக்கிறது.
அது செய்யக்கூடாத செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.

வெறுப்பு அரசியல் மனிதம் மாய்க்கும் நஞ்சு. மதம், சாதி, இனம், நிறம் என வேற்றுமையைத் தூண்டித் தூண்டி மோதவிட்டுப் பற்றி எரிகிறது தேசம். அதில் குளிர் காய்கிறது ஆளும் வர்க்கம். இதைத்தான் எளிய நடையில் புரிய வைக்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

இனியும் அமைதியாக இருந்தால் நாடு தாங்காது. விழி எழு புறப்படு. மனிதம் காப்போம்.

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்.

Reply

Leave a Comment