வீரம் விளைவித்த நாவல்

சென்றவருடம் தொடங்கப்பட்ட ரஷ்ய – உக்ரைன் யுத்தமானது ஓராண்டைக் கடந்தும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. தங்களுடைய இருப்பிற்கு நெருக்கடி வரும் எல்லா நேரங்களிலும் முதலாளிகளும், வலதுசாரிகளும் முதன்மையாக தேசியவாதத்தைக் கையில் எடுப்பதுபோலவே, இப்போதைய உக்ரைன் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிறார்கள். மக்களைத் தங்கள்பக்கம் வரச்செய்யவும், தங்களுக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்ளவும் தேசியவாதமும், இனவாதமும் முதன்மையாய் முன்னிறுத்திப் பேசப்படுவது வரலாற்றில் புதிய செய்தியல்ல. அந்த வகையில் சோவியத் யூனியன் காலத்தின் நினைவுச் சின்னங்களை அகற்ற முடிவுசெய்து, ஒவ்வொன்றாக அகற்றிக் கொண்டிருக்கிறார்கள் உக்ரைனின் இன்றைய தேசியவாதிகள். அப்படி அகற்றப்பட்ட சிலைகளில் உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியரான நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் சிலையும் அடக்கம். இத்தனைக்கும் ஒஸ்திரோவ்ஸ்கி உக்ரைனைச் சேர்ந்தவர்தான். ஆனால், அகற்றியவர்கள் சொன்னார்கள், ஒஸ்திரோவ்ஸ்கி சோவியத் யூனியனின் ஆதரவாளர், உக்ரைனில் இருந்துகொண்டு சோவியத் யூனியனுக்காகச் சிந்தித்தவர் என்று. ஒருவகையில் இது மறுக்கமுடியாத உண்மைதான் என்றாலும் அதுமட்டுமே காரணமாக இருக்கமுடியுமா? சோவியத் யூனியனைப் பற்றிய தடயமே இருக்ககூடாதென்று சொல்லிவிட்டு, அந்தப் புரட்சியின் வரலாறே வரும் சந்ததிகளுக்குத் தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டு, அமெரிக்காவோடு சேர்ந்துகொள்ளத் துடிக்கும் துடிப்பும், அமெரிக்கத் தலைமையிலான நேட்டோவில் இணைந்துகொள்ளத் தவிக்கும் தவிப்பும் இன்றைய உக்ரைன் ஆட்சியாளர்கள் யாரென்று உலகத்திற்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. அன்றைய ஆட்சியாளர்களால் சிலைகளும், நினைவுச்சின்னங்களும் அமைக்கப்பட்டதற்கும், இன்றைய ஆட்சியாளர்களால் அவசரஅவசரமாக அகற்றப்படுவதற்கும் மூலகாரணம் ஒன்றுதான், அது போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் பாட்டாளிவர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சோவியத் புரட்சி.

அந்தப் புரட்சி நடக்கும்வரையிலும் உலகத்தின் எல்லா நாடுகளும் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இருந்தது அந்த நாடும். விவசாயிகளின் வியர்வையும், தொழிலாளர்களின் இரத்தமும் உருவாக்கிக் கொடுத்த செல்வங்களை ஆடம்பர மாளிகைக்குள் உட்கார்ந்தபடி அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் மன்னர்கள். தொழிலாளர்களின் நேரத்தையும், உழைப்பையும் கச்சக்கிப்பிழிந்த முதலாளிகள் பணத்தைப் பெருக்கிப்பெருக்கிக் கூடவே இன்னும் பெருத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தேசத்திலுமுள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் இருண்ட தங்களின் வாழ்க்கைக்கு விடிவுகாலம் பிறந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள். நீண்ட அந்த ஏக்கத்திற்கான விடைதான் அந்தப்புரட்சி. நீண்ட அந்தக் கோபத்திற்கான விடைதான் அந்தப்புரட்சி. நீண்ட அந்தக் காத்திருப்பிற்கான பரிசுதான் அந்தப்புரட்சி. அதுவரையிலும் அடக்கிவைத்திருந்த ஆசை நிறைவேறிய அற்புதமான தருணம்தான் அந்தப்புரட்சி. இது சாத்தியமா என்று அந்தப் புரட்சி நடந்து முடிந்தபின்பும் கூட யாரும் நம்பிவிடவில்லை. ஏனென்றால், உலகத்தின் போக்கு அப்படி இருந்தது. வலியநாடுகள் எளிய நாடுகளை வியாபாரத் தந்திரத்தாலும், யுத்தமெனும் கொடூரத்தாலும் காலனி நாடுகளாக மாற்றிக்கொண்டு சுரண்டிக் கொழுத்துக்கொண்டிருந்த காலம். இந்தியாவும் கூட இங்கிலாந்தின் காலணி நாடாகத்தான் இருந்தென்பது நீங்கள் அறியாதல்ல. அதனால்தான், அப்படிப்பட்ட அடிமைத்தளையிலிருந்து அந்த யுகப்புரட்சியைக் வரவேற்றுப் பாடினார்கள் பாரதியைப் போன்ற கவிஞர்கள்.

அந்தப் பாட்டாளிவர்க்கப் புரட்சி மட்டுமல்ல, அந்தப் பாட்டாளிவர்க்க இலக்கியமும் கூட உலகத்தின் பெரும்பாலான இதயங்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இன்னும் சொல்லப்போனால் மகத்தான அந்தப் பாட்டாளிவர்க்கப் புரட்சியை, அந்தப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட மகத்தான மாற்றங்களைக், கண்டங்கள் தாண்டி, கடல்கள் பலகடந்து, மலைகள் பலகடந்து ஒவ்வொரு இதயங்களிலும் விதைத்துவிட்டதற்குப் பாட்டாளிவர்க்க இலக்கியத்திற்கு, அந்த இலக்கியத்தை உருவாக்கித் தந்தவர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. உலகத்தின் எந்த மூலையிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த எந்தவொரு எழுத்தாளனும் சோவியத் இலக்கியத்தின் தாக்கம் இல்லாமல் எழுதத் தொடங்கியிருப்பது சாத்தியமில்லாதது. அந்தப் புதிய புரட்சியை, அந்தப் புதிய சமூகத்தை, அந்தப் புதிய மனிதனை, அந்தப் புதிய வாழ்க்கையைத் தங்களுடைய வார்த்தைகளால் உலகத்தின் ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும் கடத்தினார்கள் சோவியத் யூனியனைச் சேர்ந்த ஒவ்வொரு இலக்கியவாதிகளும். அந்த வரிசையில் சோவியத் இலக்கிய வரலாற்றில், ஒருநாவல் உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. அந்த நாவலாசிரியர் உலகத்தின் ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும் பெருநெருப்பைப் பற்றவைத்தார். அந்த நாவலின் பெயர் வீரம் விளைந்தது. அந்த நாவலை எழுதியவர் நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்கி.

இதோ, பதினேழு வருடங்களுக்குப் பின்னால் அந்த நாவலை என் கைகளில் ஏந்தியிருக்கிறேன். அன்றைக்கு உணர்ந்த அதே சூட்டை இப்போதும் உணர்கிறேன். அன்றைக்குப் புரியாத எத்தனையோ பக்கங்களை இன்று புரிந்துகொள்வதில் ஒருவித மகிழ்ச்சி நிறைக்கிறது இதயத்தை. ஒரு புதிய சமூகத்தின் பிறப்பை இரத்தமும் சதையுமாக இதைவிடச் சொன்ன நாவல் இருக்கமுடியுமா? ஒரு புதிய மனிதனின் பிறப்பை உறுதியோடும், உண்மையோடும் இதைவிடச் சொன்ன நாவல் இருக்கமுடியுமா? லட்சோபலட்சம் இதயங்களை வெற்றிகொண்ட பாவெல் கர்ச்சாகின் என்னையும் வெற்றிகொள்கிறான். ஒரு லட்சியவாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் பாவெல் கர்ச்சாகின்தான். தாய்நாட்டை எப்படி நேசிக்கவேண்டும் என்று உலகத்தின் மானுடத்திரளுக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள் சோவியத் யூனியனைச் சேர்ந்த கலைஞர்கள்தான். இதோ பாவெலின் இதயம் தாய்நாட்டிற்காக எப்படித் துடிக்கிறது என்பதை வார்த்தைகளின் வழியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். நாவலில் லெனினின் மரணச்செய்தியைச் சொல்லும் பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். பதட்டமும், துயரமும் ஒருசேரப் பற்றிக்கொள்கிறது. இத்தனைகால இடைவெளிக்குப் பிறகு லெனினை எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு நிறைந்திருக்கும் கண்களே சாட்சியாக இருக்கிறது. புரட்சிக்குப் பின்னர் புதுமொழியைக் கற்றுக்கொண்டு எழுதிய அந்த ஒஸ்திரோவ்ஸ்கி இந்தப் பக்கங்களை எழுதும்போது எப்படித் துடித்திருப்பானோ அப்படியே நானும் துடித்துப்போகிறேன். ஒரு கதைசொல்லியாக ஒஸ்திரோவ்ஸ்கி என்னைக் கலங்கடித்து நொறுக்கிப்போட்ட இடமாக இதைத்தான் சொல்லுவேன் எப்போதும். ஏனென்றால் ஒஸ்திரோவ்ஸ்கிக்கு இணையாக நானும் லெனினை நேசிக்கிறேன்.

இப்படிப்பட்ட அற்புதமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரான ஒஸ்திரோவ்ஸ்கி குறுகிய காலமே வாழ்ந்தார் என்பது கசக்கத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அந்தக் குறுகியகால வாழ்க்கையும் அவ்வளவு சாதாரணமானதல்ல. வறுமையும், வாழ்வின் கசப்புகளும் எல்லாவற்றையும் புரியச்செய்துவிடும் என்பது ஒஸ்திரோவ்ஸ்கி விஷயத்தில் மாபெரும் உண்மையானது. சிறுவயதிலேயே ரயில்வே கேண்டீனில் பாத்திரம் கழுவுகிறவனாக வேலையைத் தொடங்கிய ஒஸ்திரோவ்ஸ்கி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, புரட்சியையும், புரட்சியின் தேவையையும் நன்றாகப் புரிந்துகொண்டு புதிய சமூகத்தைக் கட்டமைக்கும் வேலைகளில் தன்னுடைய வயதொத்தவர்களோடு சேர்ந்து தீவிரமாக உழைக்கிறான். புதிய சமூகத்தின் கனவுகளோடு அவ்வப்போது தன்னை நோக்கிவரும் காதலைக்கூடக் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்கிறான். இளைஞர்களைக் கம்யூனிசத்தை நோக்கி அழைத்துச் செல்லவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறான். அதற்காகத் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டிச் செலவுசெய்கிறான். அந்தோ! அப்பேர்ப்பட்ட வலிமையான மனிதனை, யாராலும் வீழ்த்தமுடியாத தோழனை தொடர்ந்து தாக்குகிறது கொடூரமான நோய்கள். ஒருகட்டத்தில் கால்கள் செயலிழந்து போகிறது, தொடர்ந்து கண்பார்வையும் இல்லாமல் போகிறது. ஆனால் அவன் தளர்ந்துவிடவில்லை போல்ஷ்விக் கட்சியால், புரட்சிகரத் தத்துவத்தால் புடம்போடப்பட்டவனாச்சே! அடுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான். இந்தப் புதிய சமூகத்தைப் பற்றியும், புதிய சமூகத்தின் புதிய மனிதர்களைப் பற்றியும், அதற்கான போராட்டங்களைப் பற்றியும் எழுதலாமல்லவா என்று முடிவுசெய்து எழுதத் தொடங்குகிறான். அப்போதுதான் பிறக்கிறது புரட்சிகர இலக்கியத்தின் முக்கியமான படைப்பான வீரம் விளைந்து நாவல்.   

ஒவ்வொரு காலகட்டமும் இலக்கியத்தின் ஒவ்வொரு வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் தீர்மாணிப்பது போல, புரட்சியின் காலகட்டம் புரட்சிகர இலக்கியத்தைத் தோற்றுவிக்கத்தானே செய்யும். கபிலனும், மருதனும், கல்லாடனும் சங்காலத்தைத் தங்கள் வார்த்தைகளில் வரைந்துவிட்டுப் போனதைப்போல, கம்பனும் இளங்கோவும் காப்பியங்களின் வழியாகத் தங்கள் காலத்தைக் காட்டிவிட்டுச் சென்றதைப்போல. ஏன், ஒருகாலகட்டம் முழுக்கப் பக்திநிறைந்த வார்த்தைகள் இந்த நிலத்தில் ஆறாய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருந்ததைப்போல, காலனியாதிக்கத்தின் கீழ் பாரதியைப் போன்ற கவிஞர்கள் சுதந்திரத்தின் தேவையை உணர்த்திச் சென்றதைப்போல, அப்படிப்பட்ட சுதந்திரத்தை செங்குருதி சிந்தச்சிந்த புரட்சியின் மூலம் பெற்றுக்காட்டிய அந்த நிலத்திலிருந்து வந்த எழுத்துக்கள் எப்படி இருக்கும். ஆயிரமாயிரம் அக்கினிக்குஞ்சுகளாகத்தான் இருக்குமென்பதை சொல்லவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன்.

இந்தக்காலம் எல்லாவற்றையும் பற்றிய வியாக்யானங்கள் பெருகியிருக்கின்ற காலம். உண்மைகள் உறுதியாக மறைக்கப்படுகின்ற காலம். பொய்களும், புரட்டுகளும் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் பொதுவெளியில் பொழியப்படுகின்ற காலம். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் திருவண்ணாமலையில் நடந்த ஓர் இலக்கியச் சந்திப்பில் கார்க்கியின் தாய்நாவல் இனி தேவையில்லை என்று சொன்னார் ஒரு எழுத்தாளர். சமீபத்தில்கூட ஒஸ்த்ரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது நாவலைக் கடுமையாக விமர்சனம் செய்தார் இன்னொரு எழுத்தாளர். இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இது கடந்த நூறு வருடங்களாக நடந்து கொண்டிருப்பதுதான். உலகம் முழுக்கக் கம்யூனிஸ்ட்களை உருவாக்கியதில் வீரம் விளைந்து நாவலுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அப்படியென்றால் அந்த நாவலைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவன் எதைப் புறக்கணிக்கிறான். எந்தச் சூழலிருந்து அந்த நாவல் பிறந்துவந்ததோ அதைத்தான் புறக்கணிக்கிறான். புரட்சியின் ஒவ்வொரு அணுவையும் புரிந்துகொள்ளாமல் வீரம் விளைந்து நாவலைப் புரிந்துகொள்வதென்பது சாத்தியமேயில்லாது. ஒவ்வொரு புரட்சியும் புரட்சிகர இலக்கியத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்யும். ஒவ்வொரு புரட்சிகர இலக்கியமும் இன்னும் இன்னுமாய்ப் புதிய புரட்சிகளுக்கான பாதையை உருவாக்கத்தான் செய்யும். முதலாளித்துவச் சகதியை மூளைக்குள் வைத்துக்கொண்டு வீரம் விளைந்து நாவலையோ தாய் நாவலையோ இன்னபிற புரட்சிகர இலக்கியங்களின் ஆன்மாவையோ நெருங்குவதென்பதே கடினம்தான். சிலமேதைகள் இந்தவகை இலக்கியங்களைப் பிரச்சாரவடிவமென்றும், அழகியல் இல்லாததென்றும் சொல்லிக்கொண்டிருப்பது புதியவகை விமர்சனம் ஒன்றுமில்லை. முதலாளித்துவத்தின் ஆன்மாவை இரக்கமேயில்லாமல் மார்க்ஸ் ஓங்கி அறைந்ததிலிருந்து, முதலாளித்துவத்தின் ஆணிவேரை கருணையே இல்லாமல் லெனின் வெட்டிவீசியதிலிருந்தே தொடங்கியதுதான் இந்தவகை விமர்சனங்கள். உழைக்கும் மக்களிடம் இல்லாத அழகியல் உணர்வா? அவர்களிடம் இல்லாத மானுடநேசமா என்பதுபோல இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் கார்க்கி கேட்ட கேள்விதான் இந்நேரம் ஞாபகம் வருகிறது எனக்கு, ”நீங்கள் எந்தப் பக்கம்?” இந்தக் கேள்விக்கான பதிலில் எல்லாமும் அடங்கியிருக்கிறது. ஒவ்வொருவருடைய வர்க்கச்சார்பும் கூட.  

இறுதியாக, வீரம் விளைந்தது நாவலில் என் இதயத்தில் ஒட்டிக்கொண்ட ஒரு காட்சி இருக்கிறது. இன்னும் அதிகமாக வேலைசெய்ய விரும்பிய பாவெல் அம்மாவைப் பிரியநேரும் ஒருகட்டம் வருகிறது. திருமணம் செய்துகொள்ளலாமே என்று அம்மா கேட்கிறார் (அம்மாவல்லவா!). ஆனால் பாவெல் சொல்கிறான், அம்மா, உலகத்திலுள்ள சகல முதலாளிகளுக்கும் முடிவுகட்டும் வரையில் நான் எந்தப் பெண்ணையும் நாடமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறேன். அப்படியானால் நீண்டகாலம் காத்திருக்க வேண்டுமென்று சொல்கிறாயா? இல்லை அம்மா. இனிமேல் முதலாளிகள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. சீக்கிரமாகவே பெரிய குடியரசு மலரும். அதில் உலகமாந்தர் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வார்கள். அப்பொழுது வாழ்நாளெல்லாம் உழைத்து ஓடாகியிருக்கும் உன்னைப் போன்ற வயதானவர்கள் எல்லாம் இத்தாலிக்குப் போய் வசிப்பார்கள். இத்தாலி என்பது கடற்கரையிலுள்ள கதகதப்பான தேசம். எழில்கொஞ்சும் நாடு, அம்மா, அங்குக் கடுங்குளிர் கிடையாது. உன்னைப் போன்றவர்களைப் பணக்கார்களின் மாளிகைகளில் வாழச்செய்வோம். நீங்களெல்லாம் கதிரொளியில் குளித்துக் காலம்தள்ளும் போது, நாங்கள் அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள முதலாளிகளுக்கு முடிவு கட்டுவோம். என்று. இப்போது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன். ஒஸ்திரோவ்ஸ்கியின் சிலை ஏன் அகற்றப்பட்டது என்று. பிற்போக்கு எண்ணங்கொண்டவர்களால் ஒஸ்திரோவ்ஸ்கியின் நாவல் ஏன் தூற்றப்படுகிறது என்று. ஆனால் பதினேழு வருடங்களுக்குப் பிறகும் வீரம் விளைந்தது நாவலை வாசிக்கும் போது நான் அடைந்த உணர்விலிருந்து நான்பெற்ற பெருமிதமும் நம்பிக்கையும் இதுதான். இவ்வளவு காலமும் இந்த ஆன்மா கெட்டுப்போகாமல் இருக்கிறதே என்பதுதான்.

நீங்களும் வாசித்துப் பாருங்கள். உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கலாம். உங்களுடைய ஆன்மவலிமையின் விகிதம் கூடலாம். வாழ்க்கையும், சமூகமும் இன்னும் உங்களுக்கு ஆழமாக விளங்கலாம். காதலின், உறவுகளின் உள்ளர்த்தங்கள் பிடிபடலாம், ஒருவேளை நீங்களும் பாவெல் கர்ச்சாகினைப் போலப் புரட்சிக்காரனாக மாறலாம். சொல்லமுடியாது! உங்களுக்கு மட்டும் வாழ்க்கை இனிக்கவா செய்கிறது?


Related Articles

4 comments

பெரணமல்லூர் சேகரன் 27/04/2023 - 2:21 PM

ஒஸ்திரோவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’ நாவலை அறிமுகம் செய்துள்ள கவிஞர் ஜோசப் ராஜா வழக்கம்போல் அந்நாவலின் பின்புலத்தை
அதன் தாக்கத்தை
அதன் உள்ளடக்கத்தை
அதன் அர்த்த அடர்த்தியை
அழகுற விளக்கியுள்ளார்.
அதே நேரம்
இப்படிப்பட்ட புரட்சி கர நாவல்களை மறுதலிக்கும் குயுக்தியையும் குறிப்பிடத் தவறவில்லை.

முதலாளித்துவம் வாழும் வரையில்
வர்க்க பேதம் உள்ள சமுதாயம் நீடிக்கும் வரையில் இத்தகைய நாவல்கள் தேவையே.

ஏற்கெனவே படித்தவர்கள் மீண்டும் மீண்டும் கவிஞர் ஜோசப் ராஜவைப் போலப் படிப்பதும் படிக்காதவர்கள் வீரம் விளைந்தது நாவலைப் படிப்பதும் காலத்தின் அவசியம்.

Reply
சி.தனரஜ் 27/04/2023 - 2:49 PM

அவர்களால் சிலைகளை மட்டும்தான் அகற்றமுடியும், அடிநாதமான சித்தாந்தத்தை அல்ல. வீரம் விளைந்துகொண்டேதானிருக்கும். கவிஞர் ஜோசப்ராஜா அவர்களின் எழுத்தும் நம்முடனான அவரது உரையாடலைப்போலவே…….
என்றும் தொடர…..

Reply
முனைவர் பெ.அண்ணாதுரை 27/04/2023 - 11:53 PM

கவிஞர் ஜோசப் ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்.நிக்கோலாய் ஒஸ்ரோவ்ஸ்கிய் எழுதிய வீரம் விளைந்தது நாவல் ஒரு சமூக மாற்றத்தின், புதிய கட்டுமானத்தின் சிறப்பினை,செயல்பாட்டினை எடுத்துக்காட்டுவது.ஆளும் வர்க்கத்தை வீழ்த்தியப் பின்னும் நம் கையில் முழு அதிகாரமும் வந்து சேராத போது அதனை உழைக்கும்
மக்களைக் கொண்டு ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை கட்டமைக்கும் பணி வரலாற்றில் முன் மாதிரி பணியாகும்.அதனை எடுத்துக் கூறுவது வீரம் விளைந்த புதினமாகும்.கவிஞர் போல நானும் எனது இளமை காலத்தில் படித்துள்ளேன்.இன்றைக்கு உக்ரைன் பாசிச நாட்டு பிற்போக்கு அரசாங்கம் மக்களிடம் சோசலிசம் கொடுத்த கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,புரட்சியாளர்கள்,
பாட்டாளி இலக்கியங்கள் என அனைத்தையும் சிதைத்து மறைக்கச் செய்யலாம் என்று நினைக்கின்ற அபத்தமான நோக்கம் நிறைவேறாது.உலகம் மக்கள் சந்தையை போல் இணைய உலகத்தில் இணைந்து விட்டனர்.அதனால் எத்தகைய பாசிச அரசாங்கமும் தன் சர்வாதிகாரத்தை கொண்டு நீடித்து வாழ முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். சிறப்பாக கவிஞர் ஜோசப் ராஜா தனது விளக்கவுரையில் எடுத்துக்காட்டி உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

Reply
வெற்றி சங்கமித்ரா 29/04/2023 - 2:54 AM

சிறப்பான எழுத்து நடை. கவித்துவமாக உணர்வைப் பற்றிக்கொள்ளும் கருத்துச்செறிவு.

Reply

Leave a Comment