மக்கள் கவிஞனுக்கு வாழ்த்து மடல்…
மானுட சமூகத்தை மட்டுமன்றி இப்பிரபஞ்சம் முழுவதையும் நேசிப்பதே, ஒரு கவிஞனின் உன்னதமான பண்பு. அக்கவிஞன் தன் படைப்பிற்கான கச்சாப்பொருளைத் தனது வாழ்வியலிலிருந்தும் தான்சார்ந்த சமூகத்திடமிருந்துமே பெற்றுக்கொள்கிறான். படைப்பிலக்கிய வகைமைக்குள் தன்னை இணைத்துக்கொள்ள முயலும் பலரையும் கவிதை மிக எளிமையாக வசீகரித்துவிடும். நாம் எல்லோரும் அறிந்ததைப் போலே, காதல் கவிதைகளே பலருக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும்; சமயத்தில் அதுவே முற்றுப்புள்ளியாகவும் மாறியிருக்கும். ஏனெனில் கவிதை விழுங்கிச் செரித்த காதலர்களும் கவிதையை விழுங்கிச் செரித்த காதலர்களும் மண்ணில் ஏராளம். எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை தானே.! காதலைப் போலவே இயற்கை, தத்துவம், அழகியல், துன்பியல், சமூக முரண், சாதி, வர்க்கம், பாலினம், ஏற்றத்தாழ்வு, வல்லாதிக்க எதிர்ப்பு, பகடி எனப் பலதரப்பட்ட வகைகளிலும் கவிதைகள் எழுதப்படலாம். ஒருவேளை நாமும் ஒரு கவிஞராகுகையில் இவற்றுள் எதை நேசித்துக் கவிபாடுவது என நீங்கள் நினைத்ததுண்டா.? நம் கவிதைக்குப் பொருள் வேண்டி யாசித்து நிற்கையில் எந்த மனிதர்களை, எந்தச் சமூகத்தை, எந்த நிகழ்வுகளைப் பாடுபொருளாக்குவது என நீங்கள் யோசித்ததுண்டா.?
அவ்வாறு குழம்பி நிற்கையிலே, நாள்தோறும் கடவுளின் பெயரால் கழுத்தறுபட்ட மனிதக் கூக்குரல்களைக் கேட்கலாம். அதிகார வெறி கொண்டு துப்பாக்கித் தோட்டாக்களாலும் பீரங்கிக் குண்டுகளாலும் துளைக்கப்பட்ட இதயத்தின் கடைசித் துடிப்பினைக் காதுகள் உணரலாம். மனிதக் கழிவினை மனிதனே அள்ளி, மூச்சடைக்கத் துடிதுடித்து மாண்ட மலக்குழி மரணத்தைக் கடந்து செல்ல நேரலாம். சகமனிதரைப் போலன்றி, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு விலங்கினும் கீழாய் நடத்தப்படும் மனிதர்கள் மீதான பல வன்கொடுமைகளைக் காணலாம். மானுட சமூகத்தைத் தழைத்தோங்கச் செய்யும் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் காதலை நுகர எத்தனிக்கும் ஒரு சாரரின் உயிரற்ற உடல்கள் சாலையோரங்கள், இரயில் தண்டவாளங்கள், கிணறுகள், மரக்கிளைகள், முட்புதர்கள் என ஊரின் மூலைகளெங்கும் பிணமாய்க் கிடக்கும் அதிசயம் காணலாம். தினம்தினம் வன்புணரப்பட்டு யோனிகள் கிழித்தெறியப்பட்ட பாரத மாதாக்களையும் பச்சிளங் குழந்தைகளையும் எதிரிலோ / மிக அருகிலோ சந்திக்க நேரலாம். இவ்வளவு ஏன் மனிதர்கள் குடிக்கின்ற நீரில் பீயைக் கரைத்துச் செல்லும் பேரவலங்களைக் கூட இயல்பாய்க் கடக்கும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை மிக எளிமையாய்க் காணலாம். இவற்றில் எதுவோ ஒன்று உங்களைக் கவிதையின் பக்கம் நகர்த்தவும் செய்திருக்கலாம், இல்லாமலும் போயிருக்கலாம்.
கவிதை என்ற பெயரில் பெண்ணுடலையும் பெண்ணழகையும் வியந்தோதும் பல கவிஞர்களுக்கிடையில், அதே பெண்ணையும் பெண்ணுடலையும் மையமிட்ட மாற்றுப்பார்வை கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பின் வழியே தான் அறிமுகமானார் கவிஞர் ஜோசப் ராஜா. அதற்கு முன்பே நேரில் சந்தித்திருந்தாலும் சற்று கூடுதல் நெருக்கமாக்கியது அவரது கவிதைகள் தான். “இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக” என்கிற அந்தக் கவிதை நூலின் தலைப்பே, இனி மிச்சமே வைத்துவிடக்கூடாத பேரவலத்தின் மீதான பெருங்கோபத்தைக் கடத்திச் சென்றது. நம்மில் பலரும் கேட்கவே விரும்பாத எளிமையாகக் கடந்துசெல்லும் பெண் மீதான வன்புணர்வுகளை, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மையை, பெண் சமூகத்தின் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை பற்றியெரியும் நெருப்பைப்போல வீறுகொண்டு சுற்றிச் சுழற்றியடித்தன அவரது கவிதைகள். வார்த்தைகளில் வலியைக் கடத்திக் கொண்டே,
“பிறப்புறுப்பு சிதைக்கப்படும் நேரத்தின்
பிறப்புறுப்பு எரிக்கப்படும் நேரத்தின்
மார்புகள் குதறப்படும் நேரத்தின்
சதைகள் கிழிக்கப்படும் நேரத்தின்
வலியை வலியை வலியை வலியை
உணரத் தொடங்கும் கணத்தில்
மனிதனாய் கவிஞனாய்
வன்முறையின் தழும்புகளை
உடலெங்கும் ஏந்திக்கொண்டபடி
வெட்டுண்ட மரம்போல் துடிதுடிக்க
துடிதுடிக்க வீழ்ந்து போகிறேன்” (இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக; 33)
என உங்கள் முன் ஒரு கவிஞன் மண்டியிட்டு வீழ்கையிலாவது, அந்தக் குற்றங்களுக்கு நாம் எதிர்வினையாற்றத் துணிவோமா என்பதே அவர் மனதில் ஆழப்புதைந்த வலி. எனினும் மானுட சமூகத்தின் மீதான அவரது நேசம் குறைபடவுமில்லை; கறைபடவுமில்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார். மானுட அவலங்களைக் கண்டு மனம் வெதும்பியிருந்த பல வேளைகளில், என்னைத் தேற்றியது அவரும் அவரது கவிதைகளும் தான்.
கவிஞர் ஜோசப் ராஜா காத்திரமான ஒரு இடதுசாரி. தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இந்திய இலக்கியம் வரையிலும் பரவலான வாசிப்புப் பின்புலம் கொண்டவர். கவிதைகளின் பல்பரிமாணங்களையும் ஆழமாக விவரிக்கும் ஓர் ஆய்வாளர். அதுமட்டுமன்றி திரைத்துறைக் கதை வடிவமைப்பிலும் கைதேர்ந்தவர். குறிப்பாக, மானுட சமூகத்தை நேசிக்கும் மானுடக் காதலன். அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருந்த கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்திலும் சாரைசாரையாய்ப் புலம்பெயர்ந்து கொண்டிருந்த மனிதக் குழுக்களின் வலியைத் தன் கவிதைகளால் கடத்திக் கொண்டிருந்தார். அக்கவிதைகள் யாவும் “ஊரடங்கின் உளவியல்” எனும் கவிதை நூலாக வெளியாகியுள்ளது. அதுபோலவே, “பெருந்தொற்றும் யுத்தமும்” எனும் நூலும், தலைநகரில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் குறித்து “முற்றுகை” எனும் நூலும், லெனின் சிலை தகர்ப்பு தொடர்பாக “தவாரிஷ் லெனின்” எனும் நூலும் வெளியாகியுள்ளது. அவர், நகரம் பற்றியெரிந்து கொண்டிருக்கும்போது ‘பிடில்’ வாசித்துக் கொண்டிருக்கும் மன்னர் வகையறாக்களைப் போலன்றி, ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்களின் வலியைப் பாடிக்கொண்டே நம் நினைவிலும் முன்னிறுத்தும் மகாகவிஞன்.
கால மாற்றத்தினால் விளைந்த அச்சு ஊடகத்தைப் போல, நவீனமாகிவிட்ட இணையவழி ஊடகத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் நிலத்திற்கான பூர்வகுடிகள் அந்நிலத்தை விட்டுத் தூக்கியெறியப்பட்ட போதும், மணிப்பூர் நகரம் கலவரக்காரர்களால் பற்றியெரிந்து கொண்டிருந்த போதும், பாலஸ்தீனம் அதிகாரச் சக்திகளால் துண்டாடப்பட்ட போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அந்த மக்களுக்காய்த் துடித்துக் கொண்டிருந்தார். கவிதை அவருக்கு இன்பம்; அதுவே துன்பமும் கூட.. என்றாலும் அவர் கவிதை பாடுவதை நிறுத்தவில்லை. இன்னமும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார். உண்மையைக் கேட்கக்கூடிய காதுகளைத் தேடிக்கொண்டு.. உலகத்தை மாற்றியமைக்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டு..
கவிஞர் ஜோசப் ராஜா, எனக்கு மூத்த சகோதரனாகவும் நல்வழிகாட்டியாகவும் நிற்பவர். அவர் தனது படைப்புகளை வெளியிட இணையதளம் தொடங்கி, தற்போது ஓராண்டு நிறைவு பெறுகிறது. சமூக அக்கறையோடு ஊக்கத்துடன் மென்மேலும் தொடர்ந்து செயல்பட அவரை வாழ்த்தி வரவேற்பது நமது கடமை. வாழ்த்த வயது வேண்டாம், நல்ல மனம் போதும் என்பது எனக்குப் பிடிமானம். ஆக, வயதிலும் அறிவிலும் இளையோனாக இருந்தாலும் வழிகாட்டும் இந்தப் பெருங்கவிஞனை வாழ்த்துவதில் எனக்குப் பெருங்கர்வமே முளைக்கிறது. என்றும் நலமோடு வாழ வாழ்த்தும் அன்பும்.. நல்வாழ்த்துகள் அண்ணா.!
தொடர்ந்து இயங்குங்கள்..
இணைந்து செயலாற்றுவோம்..
மு. அஜித்குமார் . கோவில்பட்டி.