இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில், இணையதளம் என்னும் எனக்குப் புதியதான இந்த ஊடகத்தின் வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கவியரங்கங்களிலும், இலக்கிய மேடைகளிலும் என்னுடைய வார்த்தைகளை வாரியணைத்துக் கொண்டதைப் போல, இத்தளத்தில் வரப்போகும் வார்த்தைகளையும் வரவேற்பீர்கள், வாரியணைத்துக் கொள்வீர்கள் என்றும், இதுவரையிலும் வெளிவந்திருக்கும் படைப்புகளுக்குக் கொடுத்த ஆதரவை, இனிமேலும் வரப்போகும் படைப்புகளுக்கும் வழங்குவீர்கள் என்றும் நம்புகிறேன். உண்மையைச் சொன்னால் இந்த நம்பிக்கைதான் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக உயிர்ப்போடும், உணர்வோடும் என்னை எழுதச்செய்து கொண்டிருக்கிறது.
கவியரங்கங்களும், இலக்கியநிகழ்வுகளும் மெல்லக் குறைந்து கொண்டிருந்த இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் எழுதவந்தவன் நான். பதிப்பாளர்கள் கவிதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கத் தொடங்கியிருந்த நேரம். கவிதைகள் விற்பனையாவதில்லை என்று ஒவ்வொரு கவிஞனின் நம்பிக்கையும் நசுக்கப்பட்ட நேரம். எழுதிக் கொண்டிருந்த, எழுதவந்த எத்தனையோபேர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறுங்கையோடு திரும்பிச் சென்றதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாகக் கடந்த பத்து வருடங்களில் கவியரங்கங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து காணாமலே போய்விட்டன. இலக்கிய மேடைகளில் கவிதை வாசிப்பது அபூர்வமான ஒன்றாக ஆகிப்போனது. ஆனபோதிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது நம்பிக்கையூட்டக் கூடியதாகத்தான் இருக்கிறது.
இன்னொரு பக்கம், உண்மையை மக்கள் விரும்புவதைப் போல, கவிதைகளையும் விரும்பத்தான் செய்கிறார்கள். சமூக மாற்றத்தை விரும்பும் இதயங்களால் முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ நிகழ்வுகளில், கவிதை வாசித்து முடித்தபின் இறுகும் ஒவ்வொரு கரம் பற்றுதலிலும் உணர்ந்திருக்கிறேன். பெரிய வீதிகளிலும், முச்சந்திகளிலும் அவர்களது துயரங்களை, அவர்கள் ஏமாற்றப்படுவதைக் கவிதையாக உரக்க வாசித்தபோது, உள்ளும் புறமும் உணர்வெழுச்சி அடைந்தவர்களால் அணைக்கப்பட்டிருக்கிறேன். மெத்தப் படித்தவர்கள் மெளனமாகக் கடந்து போனதையும், உண்மைக்கு நெருக்கமான எத்தனையோ மனிதர்கள் உடைந்து கண்ணீர் சிந்தியதையும் கண்கூடாகப் பார்த்த நேரங்கள்தான், நிற்காமல் ஓடவேண்டும் என்ற வேகத்தையும், நிறுத்தாமல் எழுதவேண்டும் என்ற தாகத்தையும் எனக்குள் ஏற்படுத்துகின்றன.
எனக்குத் தெரியும். கலை இலக்கியத்தைக் கைவிடவில்லை மக்கள். இலாபம் ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையால் முறையாகப் பின்னப்பட்டிருக்கும் இந்தச் சமூகமைப்பில் திட்டமிட்டு கலை இலக்கியத்திலிருந்து, அதாவது உண்மையிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். அதன் விளைவுகளைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கலை இலக்கியத்தை அடிப்படையாக வைத்தே வளர்த்தெடுக்கப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்று கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல உருமாறி இருக்கும் காட்சிகள் எல்லோரும் காணக்கூடியதுதான். அதிலும் கூட இடதுசாரி இயக்கங்களே கலை இலக்கியத்திலிருந்து விலகிப்போகும் வேதனை வருத்தத்தான் செய்கிறது. என்ன செய்ய? எல்லா உண்மைகளுக்கும் நானே சாட்சியாக இருக்கிறேன். எழுச்சியை ஒரு கண்ணிலும், வீழ்ச்சியை இன்னொரு கண்ணிலும் ஒரே நேரத்தில் பார்க்கும் வேதனை என்னோடு போகட்டும். ”உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்புவிக்கும் எந்தன் உள்ளம்” என்று பாடிய பேரன்புக்குரிய பெருங்கவி ஒளவையைப் போல, எப்போதும் என் வார்த்தைகள் எளிய மனிதர்களுக்காக ஒலிக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
ஒழுங்கில்லாமல் ஒவ்வொரு திசையிலும் சிதறிக்கிடந்த என்னுடைய அறிவை நேர்க்கோட்டில் குவியச்செய்து வாழ்வையும், இலக்கியத்தையும் நேர்செய்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய குருநாதர் மா.ப.அண்ணாதுரை அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு கவிதையையும் வாசித்துவிட்டு அன்பொழுகக் கரம்பற்றிக் கொண்டதையும், மேடைகளில் கவிதை வாசித்து முடித்தபின் பேரன்பு பெருக்கெடுக்க என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததையும் வாழ்வு முழுவதற்குமான வற்றாத அங்கீகாரமென ஏந்திக் கொள்கிறேன்.
இதுவரையிலும் என்னுடைய கவிதைகளைக் காற்றைப்போல எல்லாத்திசைகளிலும் கொண்டுசென்ற ஒவ்வொரு தோழரின் கரங்களையும் அன்போடு பற்றிக்கொள்கிறேன். கடந்த பெருந்தொற்றுக் காலத்தை எழுதியே கடந்தேன் என்பது மறுக்கமுடியாத உண்மை. எல்லாநேரங்களிலும் என்னோடு இருக்கும் தோழர்களுக்கு நன்றி தெரிவிப்பது சம்பிரதாயமாகத்தான் இருக்கும். இன்னும் எழுதுவதுதான் அவர்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என் கடனும் பணிசெய்து கிடப்பதுதான்.
நண்பர் ஒருவர் கேட்டார். வாழ்வின் கசப்பையும், மனிதர்களின் துயரங்களையுமே பெரும்பாலும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருவேளை இந்தக் கசப்பும் துயரங்களும் இல்லாமல் போய், மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தால் எதைப்பற்றி எழுதுவீர்கள்? என்று. கண்டிப்பாக மகிழ்ச்சியின் பாடல்களால் உங்கள் இதயத்தை நிறைப்பேன் என்று பதில் சொன்னேன். தோழர்களே! எப்போதும் நான் விரும்புவதும் கூட மகிழ்ச்சியின் பாடல்களை எழுதத்தான். ஆனால்?
புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்களே!
இந்த இணையதளம் இனி உங்களுக்கானது!
தோழமையுடன்
ஜோசப் ராஜா
01..01..2023
1 comment
Nice