லெபனானில் நிகழ்த்தப்பட்ட கொடூரச்செயல்

ன்பது வயதான பாத்திமா லெபனானின் தெற்குப்பகுதியில் பெற்றோரோடு வசித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது வகுப்பின் முதல் நாளானதால் மிகுந்த மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்கிறாள். புதிய வகுப்பு, புதிய ஆசிரியை, புதிய அனுபவம் கிடைத்ததில் அளவில்லா ஆனந்தத்தோடு பட்டாம்பூச்சியைப்போல பறந்து வருகிறாள் வீட்டிற்கு.

நீங்களே சொல்லுங்களேன், லெபனானாக இருந்தால் என்ன, எந்த நாடாக இருந்தால்தான் என்ன? பள்ளியிலிருந்து பசியோடு வரும் குழந்தை என்ன செய்யும்? அதைத்தான் பாத்திமாவும் செய்தாள். சமயலறைக்குச் சென்றவள் சாப்பிட என்ன இருக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள். இருந்ததை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இன்னொரு அறையிலிருந்து பீப் பீப் பீப் என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது.

அவளுக்குத் தெரியும் அது அவளது தந்தை உபயோகிக்கும் தொலைத்தொடர்பு சாதனமான பேஜர் கருவி. ஓடிச்சென்று எடுத்தவள் வீட்டிற்கு வெளியே இருக்கும் தந்தையிடம் கொடுக்க ஓடிச்செல்கிறாள். கண்ணை மூடிக்கொள்ளுங்கள். முடிந்தால் காதையும் பொத்திக் கொள்ளுங்கள். ஒரு ஒன்பது வயதுக்குழந்தையின் கோரமான மரணம் நிச்சயமாக உங்களை நிலைகுலையச் செய்யலாம். ஆம், பாத்திமாவின் கையிலிருந்த பேஜர் கருவி வெடித்துச்சிதற, படுகாயமடைந்து பரிதாபமாக இறந்து போகிறாள். அவளது வீட்டிலிருந்தவர்கள், அவளது ஊரிலிருந்தவர்கள், அவளது பள்ளியிலிருந்தவர்கள் என எல்லோரும் நிலைகுலைந்து போனார்கள்.

இது விபத்து அல்ல, சரியாகத் திட்டமிடப்பட்டு, மிகச்சரியாக அரங்கேற்றப்பட்ட படுகொலை. பாத்திமாவின் கையிலிருந்த பேஜர் மட்டுமல்ல கடந்த செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் ஒரேநேரத்தில் வெடித்திருக்கின்றன. பாத்திமா உட்பட பன்னிரெண்டுபேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். லெபனானில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது இந்தத் தாக்குதல். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட்டையும், இஸ்ரேல் அரசாங்கத்தையும் சந்தேகிக்கிறார்கள் எல்லோரும். வழக்கம்போல மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

ஒன்பது வயதான பாத்திமாவிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்தில் ஒன்பது வயதான பாத்திமா இஸ்ரேல் அரசாங்கத்திற்கோ அல்லது அதன் உளவு அமைப்பான மொஸாட்டிற்கோ எந்த அச்சுறுத்தலும் விளைவிக்கப் போறதில்லை. ஆனால் நவீன கால யுத்தத்தின் காட்சிகள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளே சாட்சியாக இருக்கிறார்கள். பாத்திமாவிற்கான இறுதிச்சடங்கில் யுத்த வெறியர்களுக்கு எதிரான வார்த்தைகளைத்தான் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள்.

செவ்வாய்க்கிழமை நடந்தேறிய கோரத்தின் விளைவுகள் ஏற்படுத்திய பதட்டமும், கோபமும் அடங்குமுன் மறுநாள் கையிலிருந்த வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறுகின்றன. இருபது பேர் மரணமடைகிறார்கள். மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது லெபனானில் இருப்பவர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்களேன். சதா கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் கைப்பேசியை என்ன செய்வார்கள்? வீட்டிலிருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வார்கள்? வேலைக்காகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மடிக்கணிணியை என்ன செய்வார்கள்? பேஜரையும், வாக்கிடாக்கியையும் வெடிக்க வைத்து படுகொலை செய்தவர்களால் எல்லாவற்றையும் வெடிக்க வைக்க முடியும்தானே!

இந்தப் படுகொலையை பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள் கிண்டலாக எழுதியிருக்கின்றன. மத்திய கிழக்கின் மரணங்கள் நீண்ட காலங்களாகவே அவர்களுக்கு வேடிக்கை தருகின்ற நிகழ்வுகளாகத்தான் இருந்து வருகின்றன. படுகொலைகளை இரசிப்பவர்களையும், படுகொலைகளை விரும்புகிறவர்களையும் நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், உலகமே நம்மைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சொல்கிறார், “தைரியமும், விடாமுயற்சியும், உறுதியும் கொண்டு போரின் புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறோம்” என்று. இதுதான் அந்தப் புதிய கட்டமா என்று சொல்லாமல் நழுவியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையோ தன்னுடைய எந்த அதிகாரமும் இல்லாத குரலில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

ஹாலிவுட்டின் கைதேர்ந்த இயக்குநரோ அல்லது திரைக்கதை ஆசிரியரோ இந்நேரம் இந்தக் கொடூரமான கொலையையும், அது நிகழ்த்தப்பட்ட விதத்தையும் பரபரப்பான ஒரு திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் பார்க்க வேண்டியது இந்த நவீன உலகம் எப்படியெல்லாம் நவீனமாக கொலைசெய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதைத்தான். நம்முடைய நாட்டில்கூட தொலைபேசிகளும், கைப்பேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம், முடியவே முடியாது என்று சொன்னவர்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வெடிக்கவே செய்ய முடியுமென்றால் ஒட்டுக்கேட்கவா முடியாது!

ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. இந்த முதலாளித்துவ சமூகம் விஞ்ஞான வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் இப்படியான பேரழிவுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அழுகிப்போன அதன் கைகளிலிருந்து ஆக்கப்பூர்வமான எந்த ஒன்றும் எப்போதுமே உருவானது கிடையாது. ஒவ்வொரு யுத்தத்திலும் அப்பாவி மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றுகுவிக்க நவீன ஆயுதங்களை உற்பத்திசெய்து குவித்தது போதாதென்று, பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தொலைத்தொடர்புச் சாதனங்களை வெடிக்கவைத்துக் கொலைசெய்வது என வளர்ச்சியடைந்திருக்கிறது முதலாளித்துவ சமூகம்.

உண்மைதான் இந்த உலகம் முன்னேறித்தான் இருக்கிறது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்!!!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 22/09/2024 - 8:28 AM

லெபனான் நிகழ்வுகள் நெஞ்சை உலுக்குகின்றன. இவற்றையெல்லாம் கடந்து போகும் நம்மிடையேயும் அத்தகைய நிகழ்வுகள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எல்லாம் ஆதிக்க அமெரிக்காவுடன் துணையோடு நடக்கும் கொடூரங்கள்‌. அரிதான மானுட வாழ்வை இழப்பது.. ஏதுமறியா குழந்தைகளும் என்னும்போது “நெஞ்சு பொறுக்கதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்” என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகள் உங்களையும் பாதிக்கும். படியுங்கள்‌. பரப்புங்கள்.

Reply

Leave a Comment