எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தியது போல சிம்பொனி இசையையும் குருநாதர் அறிமுகப்படுத்தினார். திரைப்படப் பாடல்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த செவிகளில் அந்தக் கூட்டிசை பெரும் பிரளயத்தையே உண்டுசெய்தது. மொசார்ட்டின் அமேதியஸ் திரைப்படத்தை முதன்முறையாகப் பார்த்தபோது இசையாகவே ஒருவனால் வாழமுடியுமா என்று எனக்குள் ஏற்பட்ட வியப்பு அடங்க சில நாட்கள் ஆனதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஹைடனின், பாஃகின், மொசார்ட்டின், பீத்தோவனின், சைக்கோவ்ஸ்கியின், ஷொஸ்டகோவிச்சின் சிம்பொனிகளைத் தேடித்தேடிக் கேட்டுக்கொண்டிருந்த இந்தக் காதுகள், நம் மொழி பேசிக் கொண்டிருக்கும், இத்தனை வருடங்களாக நம்மையெல்லாம் இசையால் ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜாவின் சிம்பொனியைக் கேட்கப் போகிறது என்ற எண்ணமே இந்தக் காலையை இன்னும் அழகாக்குகிறது. இந்தக் காலையில் இன்னும் நம்பிக்கையை நிறைக்கிறது.
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்துவ சமூகத்திற்கு முடிவுகட்டி, அன்றைய நவீன சமூகமான பூர்ஷீவா வர்க்கம் புதிய சிந்தனையோடு முளைக்கும் போது, கவிதை, ஓவியம், இசை என எல்லாமும் புதியதைப் பற்றிக்கொள்ளத் தொடங்கியது. புதிய சிந்தனைகள் நிரம்பிய புதிய படைப்புகள் பிரசவிக்கப்பட்டன. தேவாலயங்களில் இறைவனுக்காகவே பெரும்பாலும் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த இசையை, மொசார்ட் மக்களுக்காக வெளியே கொண்டுவருகிறார். பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து பீத்தோவான் இன்னும் வேகமாக இசையை வெகுமக்களின் உணர்வோடு இணைத்து வெளிப்படுத்துகிறார். பீத்தோவானை தத்துவாதி ஹெகலுக்கு நிகரானவர் என்று சொல்கிறார் ஜார்ஜ் தாம்சன். ஆம், ஒரு கலைஞனாக சமூகத்தின் முரண்களைப் புரிந்துகொண்டவர் பீத்தோவான். சமூகத்தின் விருப்பங்களை, வெறுப்புகளை இசையில் பிரதிபலித்தவர் பீத்தோவான். இசையின் உன்னதமாகப் பார்க்கப்படும் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி இன்றும் எங்காவது ஒரு மேடையில் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்காவது சில காதுகள் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.
சமூகம்தான் எல்லாவற்றையும் பிரசவித்துக் கொண்டிருக்கிறது. சமூகத்திலிருந்துதான் ஒரு கலைஞன் தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் உருவாக்குகிறான். சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல், கலைஞனையோ அவனது கலையையோ ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. திமித்ரி ஷொஸ்டகோவிச் என்ற சோவியத்தின் இசைக்கலைஞர், யுத்தகால சிம்பொனிகளை உருவாக்கியவர். இரண்டாம் உலகப்போரின் போது, சோவியத்தின் மக்களை பாசிஸத்திற்கு எதிராக இலக்கியம் எந்தளவிற்கு உந்தித் தள்ளியதோ, அதே அளவிற்கு இவருடைய இசையும் உந்தித் தள்ளியது. குண்டுவீச்சில் இடிந்த இசைக்கூடத்திற்குள்ளிருந்து புறப்பட்டு வந்த சிம்பொனி இசை, ரஷ்யர்களின் நரம்புகளுக்குள் மாற்றத்திற்கான உணர்வை ஊட்டிக் கொண்டிருந்தது. இன்றைக்கு உலகம் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் ராஜாவின் சிம்பொனி என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.
திரையிசை என்றாலும் நம் ராஜா இந்தச் சமூகத்தின் மனசாட்சியை இதுவரையிலும் பிரதிபலித்திருக்கிறார் என்பதிலும், தன்னுடைய இசையால் இந்த மானுடத் திரளை மேம்படுத்திடுத்தியிருக்கிறார் என்பதிலும் எனக்கும், யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் ராஜாதான். சமூக ஊடகத்தின் பக்கங்களிளெல்லாம் நிறைந்திருக்கிறார் ராஜா. சிம்பொனி என்றால் என்னவென்று எல்லோரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனால் மட்டுமே இந்த ஒத்திசைவை உருவாக்க முடியும். ஒரு கலையால் மட்டுமே இந்த ஒருமித்த உணர்வை உருவாக்க முடியும். ராஜா உருவாக்கியிருக்கிறார். அவருடைய சிம்பொனியும் அதைச்செய்யுமென்று உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் அவருடைய அசாத்தியமான உழைப்பு அவருக்கு வெற்றியையே தேடித்தரும். உழைப்புதான் அவரை சிம்பொனி வரையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதுதான் தோழர்களே அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் அதுதான். இசைக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவரை இந்த உலகம் ஏந்திக்கொள்ள வேண்டுமென்றுதான் விரும்புகிறேன் நான்.
ராஜா தன்னுடைய சிம்பொனிக்கு வேலியண்ட் என்று தலைப்பு வைத்திருக்கிறார். அச்சமில்லாத, உறுதிகொண்ட என்று பொருள் கொள்ளலாம். யுத்தங்கள் உலகத்தின் தோலைக் கிழித்து, ஒவ்வொரு மனிதரையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் காலமிது. குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது. யாரும் தப்பித்துவிட முடியாது. யுத்தத்தின் பாதிப்பை உலகத்தின் ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறான். ஐரோப்பாவின் சமூகமாற்றத்தின் விளைவாகப் பிரசவிக்கப்பட்டது சிம்பொனி இசை, இப்போதும் சமூக மாற்றத்திற்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொண்டிருக்கின்றன. உண்மை என்னவென்றால் இது சிம்பொனி இசை தேவைப்படும் காலம், இது நீண்ட கவிதைகள் தேவைப்படும் காலம். சமூகம் மாறிவிட்டது, முன்னேறி விட்டது என்று பொய்சொல்லிக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம். இன்னும் வேகமாக உலகத்தின் வளங்களை வாரிச்சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். உக்ரைனின் வளங்களுக்காக அந்த நாட்டைப் பகடைக்காயாக மாற்றி ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம் நாம்.ஒவ்வொரு தேசத்தின் மக்களும் அடக்கப்பட்ட ஆத்திரத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. அதுவும் வெறுப்பு வேகமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலத்திலிருந்து சிம்பொனி இசைக்கச் செல்லும் ராஜாவின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன்., ராஜாவின் சிம்பொனி, இப்பேர்ப்பட்ட மானுடக் காயங்களுக்கு மருந்தாக இருக்குமென்று நம்புகிறேன். ராஜாவின் சிம்பொனி ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்குமென்று உறுதியாக நம்புகிறேன்.
நம்முடைய ராஜா சிம்பொனி எழுதியிருக்கிறார்! நம்முடைய ராஜா சிம்பொனி இசைக்கப் போகிறார். ஃபாக்கின் சிம்பொனி என்பது போல, மொசார்ட்டின் சிம்பொனி என்பது போல, பீத்தோவனின் சிம்பொனி என்பது போல, சைக்கோவ்ஸ்கியின் சிம்பொனி என்பது போல, சொஸ்டகோவிச்சின் சிம்பொனி என்பது போல, ராஜாவின் சிம்பொனி என்றழைப்பதே பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ஜோசப் ராஜா
