யுத்தத்தை, யுத்தத்தின் விளைவுகளை, யுத்தத்தின் காட்சிகளை இவ்வளவு நெருக்கமாக எதற்காக எழுதினீர்கள் என்று என்னைக்கேட்ட நண்பர் ஒருவருக்கு, அமைதிக்காகத்தான் என்றுமட்டும் பதில்சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இரண்டு நாட்களாக மூளைக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கிறது அந்தக் கேள்வியும், இந்தப் பதிலும்.
இரண்டு உலகயுத்தங்களின் பேரழிவை வார்த்தைகளாகக் கவிதைகளிலும், கதைகளிலும் வாசித்தபின்னரும், இரண்டு உலகயுத்தங்களின் விளைவுகளைக் காட்சிகளாகக் கணக்கற்ற திரைப்படங்களில் பார்த்தபின்னரும் மூன்றாவது உலகயுத்தத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் மூடர்கள் நிறைந்திருக்கும் காலத்தில் கழிந்து கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.
இந்த வேளையில் போரும் அமைதியும் என்ற மகத்தான படைப்பைக் கொடுத்த டால்ஸ்டாயை நினைத்துக் கொள்கிறேன். அமைதி இல்லாத இடத்தில் போர்கள் நிகழத்தான் செய்யும். அப்படி நிகழும் ஒவ்வொரு போரும் அமைதியை நிலைநாட்டக் கூடியதாகத்தான் இருக்கும்.
சாதாரண குடும்ப உறவுகளிலிருந்து, சமூக உறவுகளின் வழியாக, நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வரையிலும் இருக்கும் குழப்பங்களை இந்தக் கண்ணோட்டத்தில் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கம் அல்லது ஒரு புதிய இலக்கை நோக்கிய பயணம் வலி நிறைந்ததாக, இழப்பு நிறைந்ததாக இருக்கத்தான் செய்யும்.
ஹிட்லர் யுத்தத்தைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் அதன் முடிவை அவனால் தீர்மானிக்கமுடியாது என்பதுதான் வரலாறு. அது இஸ்ரேலுக்கும் பொருந்தும். அத்தனை யுத்தங்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் பொருந்தும். அதனால்தான் யுத்தத்திற்கு எதிரான குரல்கள் அமெரிக்காவிற்கு உள்ளிருந்தும், ஏன் இஸ்ரேலுக்கு உள்ளிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், நவீன உலகம் நவீன சிந்தனைகளையும் கொண்டிருக்கிறது. மானுடத் துயரங்களை எல்லா மானுடர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
யோசித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கவிஞனும் எதற்காகத் துயரங்களை எழுதிக்கொண்டிருக்கிறான்? மானுடத் துயரங்களை வார்த்தைகளில் சுமந்து கொண்டிருக்கும் மகத்தான காவியங்களை எண்ணிக்கையில் சொல்லிவிட முடியுமா? இத்தனை காலங்களாக இசையில் எதற்காக இவ்வளவு துயரங்கள் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன? துயரங்கள் எழுதப்படுவது மகிழ்ச்சிக்காகத்தான். துயரங்கள் இசைக்கப்படுவதும் மகிழ்ச்சிக்காகத்தான்.
மானுடத் துயரத்தை, மானுடத் துயரங்களுக்கான காரணங்களை புரிந்துகொள்ள எடுத்த முயற்சியில்தானே, சாதாரண மனிதர்கள் மகான்களாகவும், தீர்க்கதரிசிகளாவும் ஏன் கடவுளாகவும்கூட வணங்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற கெளதம புத்தரின் பிரபலமான கூற்றைக்கூட, துன்பத்திற்கு காரணமான ஆசையை விட்டொழிக்கச் சொன்னதாகத்தான் புரிந்துகொள்கிறேன்.
துன்பத்திற்குக் காரணமான மானிடர்களின் ஆசைகள்தான் தொடர்ந்து பேரழிவிற்கும் காரணமாக இருந்துவருகின்றன. ஆக, மானுட வாழ்விற்குள் நிறைந்திருக்கும் துயரத்தை எழுதுவதுவதற்குப் பின்னால், அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பும், தேவையும் அடங்கியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
வெளிவந்திருக்கும் காத்திருக்கும் சாவிகள் தொகுப்பை வாசித்தவர்களில் நிறையப்பேர். இதயம் கனத்துவிட்டது என்றும், படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளை நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் கலங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள். அவர்களின் கரம்பற்றிக் கொள்வதைவிட வேறென்ன இருக்கிறது. கவிதை தன் வேலையைத் தானாக செய்யும். செய்ய வேண்டும்.
ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது நாம். இஸ்ரேலிய ஏவுகணைகளாலும், பீரங்கிகளாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தின் பாடுகளுக்கு நீங்களும் நானும் பார்வையாளர்கள்தான். அப்படியென்றால் அந்தக் குண்டுகளுக்கு மத்தியில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல், அந்த இடிபாடுகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட புகைப்படங்கள் மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை ரணமாக்கிக் கொண்டிருக்கும் போது, அந்தக் குழந்தைகளின் தாய்மார்களின் இதயங்கள் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
அந்தத் தாய்மார்களின் தவிப்பை, அந்தக் குழந்தைகளின் அழுகுரலை, இரக்கமில்லாமல் குவிக்கப்பட்டிருக்கும் அந்தப் பிணக்குவியல்களை, இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் வீடுகளை, பள்ளிக்கூடங்களை, வழிபாட்டுத்தலங்களை ஒன்றுவிடாமல் கவிதை காட்சிப்படுத்துவது எதற்காக? இந்த அவலங்களெல்லாம் இல்லாத அழகான பாலஸ்தீனத்திற்காகத்தான்.
ஆம், பேரழகான, சுதந்திரமான பாலஸ்தீனத்திற்காகத்தான். இதயமுள்ள எவனாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத, அருவருக்கத்தக்க அவலங்களுக்கு எதிராக இந்த மனிதகுலம் ஒன்றிணையும் போதுதான், நீங்களும் நானும் உள்ளூர விரும்புகின்ற அழகான, சுதந்திரமான ஒரு சமூகமைப்பை கட்டமைக்க முடியும். காலகாலமாக கவிதை வேண்டுவது அதைத்தான். அதைமட்டும்தான்.
கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பூமியையுமே அழித்துவிடக்கூடிய அளவிற்கு அணுஆயுதம் அத்தனை பேரின் கைகளிலும் இருக்கிறது. இந்தப் பைத்தியக்காரர்களுக்கு நடுவில்தான் ஒவ்வொரு கலைஞனும் அன்பை வலியுறுத்தியபடி அங்குமிங்கும் வலம்வந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் பாருங்களேன் எந்த நாட்டிலும், எந்த மக்களும் அணுஆயுதங்களை அல்ல, அல்லவே அல்ல. அன்பைத்தான் அன்பைமட்டும்தான் என்றென்றைக்கும் வேண்டி நிற்கிறார்கள்.
ஆக, யுத்தத்தைப் பற்றிய இந்தக் கவிதைகள் அமைதியைத்தான் வலியுறுத்துகின்றன. இருபது கவிதைகளிலும், பாலஸ்தீனத்தின் அவலக்காட்சிகள் எழுதப்பட்டதற்கான காரணம் அழகான பாலஸ்தீனத்திற்காகத்தான். அந்த மகாகவிஞன் மஹ்முத் தர்விஷ் விரும்பிய சுதந்திரமான பாலஸ்தீனத்திற்காகத்தான்.
அணுகுண்டுகள் அல்ல இந்த உலகத்திற்குக் கவிதைதான் தேவை என்பதை எப்போதும் வலியுறுத்துவேன்.
ஜோசப் ராஜா