உன்னதங்களை நாம் சரியாக உணர்ந்து கொள்வது கிடையாது. முன்னோர்களின் மேதமையையும் நாம் சரியாகப் புரிந்து கொள்வதும் கிடையாது. நம்மிடமிருக்கும் புதிய பிரச்சனை அல்ல இது, நீண்டகாலங்களாக நாம் இப்படித்தான் இருந்து வருகிறோம். நாம் உழைத்து, உண்டு, களித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பறவை எங்கு செல்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை. நம் நிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு உன்னதமான கலைஞனை அறிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தால்!
சில நாட்களுக்கு முன்னால் கடையநல்லூரிலிருந்து அண்ணன். அருவின் அவர்கள் பேசும்போது இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு பற்றிப் பகிர்ந்து கொண்டார். கடையநல்லூரில் சில பேரிடம் விசாரித்ததாகவும், யாருக்கும் அவரைப்பற்றித் தெரியவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். நான் பிறந்த ஊரான சிவகிரிக்கும், கடையநல்லூருக்கும் தோராயமாக முப்பது கிலோமீட்டர் தானென்றாலும், நானும் அந்த இசைமேதையை அறிந்திருக்கவில்லை என்பது, உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் அவருடைய அற்புதமான பாடல்களைக் கேட்டிருக்கிறேன், கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் அவரை அறிந்திருக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்தான். பாடல்களை பட்டியலிட்டால் நீங்களும் கூட வியப்பின் உச்சத்திற்குச் செல்வீர்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
இப்போது தென்காசி மாவட்டத்திலிருக்கும் கடையநல்லூரில் இசைக்குச் சம்பந்தமேயில்லாத குடும்பத்தில் பிறந்த எஸ். எம். சுப்பையா நாயுடு, சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சாவூரிலிருக்கும் நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். பதினாறு வயதிற்கு மேல்தான் முறைப்படி இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார். தொடர்ந்து இசையில் அவர் அடைந்த உயரம் உண்மையிலேயே எல்லோரையும் வியக்கவைக்க கூடிய ஒன்றுதான். ஹார்மோனியக் கலைஞராக திரையுலகில் நுழைந்த சுப்பையா நாயுடு மெல்ல தன்னுடைய பிரம்மாண்டமான சிறகுகளை விரித்து இசையமைப்பாளராக நிலைநிறுத்திக் கொள்கிறார். மேற்கத்திய இசைக்கருவிகள் அப்போதே திரையிசையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், இந்தியத் தன்மை கொண்ட இசையே போதுமென்று சொன்னது மட்டுமல்லாமல், அதிலிருந்தே அற்புதமான மெல்லிசைகளை உருவாக்கியவர் சுப்பையா நாயுடு.
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா கலைஞர்களின் தொடக்கத்திற்குக் காரணமாக இருந்தவர் மெல்லிசையின் மேதை சுப்பையா நாயுடு. ஆம், எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான நாடோடி மன்னன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு தான். கன்னியின் காதலி திரைப்படத்தில், சுப்பையா நாயுடுவின் இசையில் தன்னுடைய முதல்பாடலான கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதி தன் பயணத்தைத் தொடங்கினார் கண்ணதாசன் அவர்கள். அறிஞர் அண்ணாவின் எழுத்தில் வெளிவந்த வேலைக்காரியாகட்டும், கலைஞர் அவர்களின் எழுத்தில் வந்த மலைக்கள்ளன் ஆகட்டும் எல்லாமும் சுப்பையா நாயுடுவின் இசையாலும் வெற்றிப்படங்களாகின. மேலும் மேற்கத்திய பாணி நடிகரான சந்திரபாபு அவர்களைக் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடலை பாடவைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே, சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி போன்ற பாடல்களும், தஞ்சை ராமையை தாஸ் எழுதிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடலும், கவி. காமு. ஷெரிபின் அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை பாடலும் இன்றல்ல என்றும் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசைத்திறனை படைப்பாற்றலை சொல்லிக் கொண்டிருக்கும். திரையிசையில் மெல்லிசை மன்னர்கள் என்றழைக்கப்பட்ட விஸ்வநாதன் அவர்களும், ராமமூர்த்தி அவர்களும், மெல்லிசை எப்படி இருக்கவேண்டும் என்பதை எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களிடம்தான் கற்றுக்கொண்டோம், அவரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகின்றோம் என்று மேடைதோறும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவரது இசையில் இன்னொரு உச்சமும் உண்டு. அந்தப் பாடல் திரையிசைக்கான தங்க இசைத்தட்டு விருதை முதன்முதலில் வென்றது. ஆபேரி ராகத்தில் காருக்குரிச்சியாரின் நாதஸ்வரத்திற்கு இணையாக ஒலித்தது ஜானகி என்ற அறிமுகப் பாடகியின் குரல். இசை ரசிகர்களின் இதயத்தில் அழியாமல் நிலைத்திருக்கும் அந்தப்பாடல் ”சிங்கார வேலனே தேவா” என்ற அற்புதமான பாடல்தான். நானும் கூட இப்போது அவர் இசையமைத்த திருடாதே படத்தில் வரும் ”என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்” என்ற அற்புதமான பாடலையும், மன்னிப்பு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ”நீயெங்கே என் நினைவுகள் அங்கே” என்ற இதயத்தை வருடும் பாடலையும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.
1970 களுக்குப் பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்த சுப்பையா நாயுடு அவர்களின் நிலையறிந்து, எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் எம். ஜி. ஆர், சிவாஜி மற்றும் கண்ணதாசன் என எல்லோரையும் வைத்து இன்னிசைக் கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்தக் கச்சேரியின் மூலம் கிடைத்த ஒரு இலட்சம் ரூபாயை குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களின் மருத்துவச் செலவிற்கும், குடும்பச் செலவிற்கும் வழங்கினார் எம். எஸ். விஸ்வநாதன். பிள்ளைகளில்லா எஸ் எம் சுப்பையா நாயுடு இறந்தபோது பிள்ளையாகவும், சீடனாகவும் இருந்து இறுதிக் காரியங்களைச் செய்து முடித்த எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நன்றி நிறைந்த இதயத்தை நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்த மெல்லிசையின் மேதை எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் அற்புதமான மெல்லிசையில். நீங்களும் கூட அந்த மெல்லிசைப் பாடல்களை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் என்று அன்போடு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
1979 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி மறைந்தார் எஸ் எம் சுப்பையா நாயுடு.
ஜோசப் ராஜா
