புரட்சியின் குருநாதர் தோழர். மாவோவின் நினைவுநாள் இன்று. மாவோவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இதயத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வருவது அவ்வளவு எளிதாக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத, அந்த நீண்ட பயணம்தான். அதுவரையிலும் உலகம் பார்த்திருந்த புரட்சிகளின் வரலாற்றை மாவோவின் நீண்ட பயணம் இன்னும் உயரத்திற்குக் கொண்டுசென்றது. நீங்களும்கூட நீண்ட பயணத்தை அவ்வளவு எளிதாக நினைத்து விடாதீர்கள்.
முந்நூற்று அறுபத்தி எட்டு நாட்கள் அடர்ந்த காடுகளைக் கடந்து, உயர்ந்த மலைகளைக் கடந்து, கரைபுரண்டோடும் ஆறுகளைக் கடந்து இலட்சக்கணக்கான மக்கள் நடந்ததெல்லாம் சமூக மாற்றத்திற்காக என்று சொன்னால், இன்றைய தேதியில் உங்களுக்கு நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கத்தான் செய்யும். ஆனால், அவர்கள் அத்தனை தூரத்தை நடந்து கடந்துதான் மாபெரும் சீனப்புரட்சியை சாத்தியமாக்கினார்கள். அதனால்தான், சீனப்புரட்சியையும், மக்கள் சீனத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும் ஆய்வுசெய்ய வந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எட்கர் ஸ்நோ நீண்ட பயணத்தை, “ஒரு தேசமே இடம்பெயர்ந்து நடந்துவந்த வரலாறு“ என்று சொன்னார் வியப்பின் உச்சத்தில்.
ஒருநாள் தூங்குவதற்கு முன்னால் கதைகேட்டு அடம்பிடித்த என் மகள்களிடம் மாவோவின் நீண்ட பயணத்தைப் பற்றிய கதைகளைச் சொன்னேன். அந்த இரவின் மெல்லிய வெளிச்சத்திலும் ஆச்சரியத்தால் ஒளிர்ந்த அவர்களின் முகங்களைத் தெளிவாக என்னால் பார்க்க முடிந்தது. மனிதர்கள் செய்துமுடித்த மகத்தான சாதனைகளைக் குழந்தைகள் உள்வாங்கிக் கொள்ளும் அழகிருக்கிறதே! அந்த அழகே தனிதான். “அப்படியா அப்பா! ஒருவருடமாக நடந்தார்களா? ஆறாயிரம் மைல்கள் அதாவது பத்தாயிரம் கிலோமீட்டர்கள் அவர்கள் யாருக்காக நடந்தே கடந்தார்கள்” என்று கேட்டாள். “எல்லோருக்காகவும் தானம்மா” என்ற என் பதிலை புரிந்துகொள்ள அவள் சிரமப்பட்டதை அந்த முகச்சுளிப்பில் அறிந்துகொண்டேன் நான்.
சீனாவின் தென்பகுதியில் இருக்கும் ப்யூக்கின் என்ற நகரிலிருந்து மாபெரும் மாற்றத்திற்காக, ஒரு புதிய சமூகத்தைப் படைப்பதற்காகத் தொடங்கப்பட்ட நீண்ட பயணத்தில் 95000 பேர் இணைந்திருந்தார்கள். அடர்ந்த காடுகளின் வழியாக இரவிலும் பகலிலும் தொடர்ந்தது அவர்களின் பயணம். வழியில் இருந்த கிராமங்களில் இளைப்பாறினார்கள் செஞ்சேனை வீரர்கள். மக்கள் அவர்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு என எல்லாமும் கொடுத்தார்கள். செஞ்சேனை வீரர்களும் அவர்கள் இழந்த நிலத்தை, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்து மக்களிடம் கொடுத்தார்கள். செஞ்சேனை வீரர்கள் கிராமத்தை விட்டுப் புறப்படும்போது அங்கிருந்தவர்களும் நீண்ட பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
ஒருநாள், தோராயமாக ஒரு இலட்சம் செஞ்சேனை வீரர்கள் அடர்ந்த காடுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். பசிக்கிறது அவர்களுக்கு. ஆரஞ்சு மரங்கள் நிறைந்திருக்கின்றன. அத்தனைபேரும் ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்கள் போட்டுசென்ற ஆரஞ்சுத் தோல்கள் தரையில் சூரியனைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்கள் நடந்து சென்றவர்கள். இப்படியே உயர்ந்த மலைகளை ஒரு லட்சம் பேர் எறும்புகளைப் போல ஏறிக்கடந்த காட்சியை நினைத்துப் பாருங்கள். யாங்ட்சீ, டாட்டூ போன்ற பெரிய ஆறுகளை இலட்சம் பேர் நீந்திச் சென்ற காட்சியும்கூட நம்பக் கடினமானதாக இருக்கும். ஆனால், அதைத்தான் மாவோ சொல்வார், “புரட்சி என்பது மாலைநேர விருந்தல்ல“ என்று.
நீண்ட பயணத்திற்கு இடையூறாக வெறும் காடுகளும் மலைகளும் ஆறுகளும் மட்டுமல்ல, சியாங்கே ஷேக் அனுப்பிய இராணுவமும் வந்து நின்றது. அத்தனையையும் முறியடித்துதான் வரலாற்றின் பக்கங்களில் மாபெரும் புரட்சிகர நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட நீண்ட பயணம் வெற்றிகரமாக முடிந்தது. 95,000 பேரோடு தொடங்கப்பட்ட பயணம் 45000 பேரோடு முடிவடைந்தது. புரட்சிக்காக, சமூக மாற்றத்திற்காக, புதிய வாழ்க்கைக்காக தோராயமாக 40000 செஞ்சேனை வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருந்தார்கள். அவ்வளவு சாதாரணமாகவெல்லாம் இந்த உலகத்தை உங்களால் வியக்கச் செய்துவிட முடியாது. யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும். மாவோ அதைத்தான் செய்தார். இந்தச் சமூகத்தை நீங்கள் மாற்றவேண்டுமென்று விரும்பினால், இயல்பை மீறி முயற்சி செய்ய வேண்டும். செஞ்சேனை வீரர்கள் அதைத்தான் செய்தார்கள்.
இன்று மட்டுமல்ல, என்றுமே புரட்சியின் குருநாதர் தோழர் மாவோவை நினைக்கும் போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் மிகநீண்ட ஒற்றைக் காட்சியைப்போல, சீனாவின் ஒருமுனையில் தொடங்கி இன்னொரு முனையில் முடிந்த நீண்ட பயணத்தின் வியப்பு நிறைந்த காட்சிகள், சாகசம் நிறைந்த காட்சிகள் வரிசையாக இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நீண்ட பயணத்தின் மேய்ப்பருக்கு மரணமில்லை என்றுதான் நம்புகிறேன். நான் என் மகள்களுக்குச் சொன்னதைப்போல அவர்களும் அவர்களின் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இப்படியாக இப்படியாக கடத்திச் செல்லப்படும் மக்கள் புரட்சியின் மகத்தான கதைகள்.
ஜோசப் ராஜா