மழையும் கவிதைகளும்

பொதுவாக மழைபெய்யத் தொடங்கியதும் கவிஞர்களின் இதயத்திலிருந்து கவிதைகளும் மழையைப் போலவே பொழியத் தொடங்கும். கவிதைக்கு எதிரானவர்கள் அல்லது கவிஞனுக்கு எதிரானவர்கள் இந்தச் செயல்களை எள்ளி நகையாடுவதைக் கவனித்திருப்பீர்கள் நீங்கள். மழை பெய்து கொண்டிருக்கும்போது குழந்தைகளைப் பாருங்கள், மழைக்குள் செல்ல விரும்புவார்கள். மழையில் நனைய விரும்புவார்கள். மழையைக் கொண்டாட விரும்புவார்கள். மழையோடு விளையாட விரும்புவார்கள். அந்தக் குதூகல உணர்வும், அந்தக் கொண்டாட்ட மனநிலையும் குழந்தைகள் மட்டுமல்ல, நாம் எல்லோருமே கைக்கொள்ள வேண்டியது. என்ன செய்ய! ஒட்டுமொத்த உணர்வுகளையும் மழுங்கடித்துக் கொண்டுதானே பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.  

மழை, இறுக்கமான மனநிலையை தன்னுடைய மெல்லிய கரங்களால் விடுவிக்கக் கூடியது. மழை, பரபரப்பான மனித இயக்கத்தை தன்னுடைய ஆளுமையால் கொஞ்சநேரம் அமைதியடையச் செய்யக்கூடியது. கவிதை மனங்கொண்ட ஒருவனால் மழைக்காலத்தை ஒருபோதும் வெறுத்துவிட முடியாது. கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞனும், இதயத்தில் அமைதியைப் பாய்ச்சுகின்ற மழைக்காலத்தை விரும்பத்தான் செய்வான். அதனால்தான் மழைக்காலத்தில் படைப்புகளும்கூட வெள்ளத்தைப் போலவே பிரவாகமெடுத்து ஓடத்தொடங்குகின்றன.  

இன்று நேற்றல்ல காலங்காலமாக அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான பெருமழைக் காலத்தை கவிதைகளால் காட்சிப்படுத்திவிட்டுச் சென்றான் நக்கீரன் என்ற பெருங்கவிஞன். அந்தக் கவிஞனின் உன்னதப் படைப்பான நெடுநல்வாடையை இப்போது வாசித்தாலும் உள்ளுக்குள் சில்லென்ற உணர்வை உணராமல் இருக்க முடியாது. மழைக்காலக் கிராமத்தை உள்ளும் புறமும் வார்த்தைகளில் படமாக்கிய அந்த நக்கீரனை நினைத்துப் பார்த்து பெருமைகொள்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை, மழையைப் பற்றிய கவிதைகளை மட்டும் தொகுத்துப் பார்த்தால், மழைத்துளிகளைப் போலவே எண்ணிலடங்காதவைகளாய் இருக்குமென்றுதான் நம்புகிறேன்.

எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரையிலும் நானும்கூட மழைக்காலங்களைத் தவறவிடுவதில்லை. பயிர்களை உயிர்ப்பித்த பருவமழை, கவிதைகளையும் உயிர்ப்பித்த உணர்வை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாதுதான். நுரைத்துக் கொண்டிருக்கும் மழைக்காலத்தின் கடல், ஈரம் சொட்டிக் கொண்டேயிருக்கும் மழைக்காலத்தின் மரங்கள், ஒவ்வொரு காலடித்தடங்களையும் ஏந்திக்கொண்டிருக்கும் மழைக்காலத்தின் நிலம், இந்த நகரமா? என்று சந்தேகிக்கும் அளவிற்குப் பனிபோர்த்தியிருக்கும் வெளி, எல்லாமும் மழைக்காலத்தில் நினைவிற்கு வரக்கூடியவைகள். உண்மைதான் இனிமேல் இந்த உணர்வுகளெல்லாம் நினைவில் மட்டுமே நிலைத்திருக்க கூடியவைகள் என்ற உண்மை உச்சிச் சூரியனின் சுடும்கதிர்களாய் உரைக்கத்தான் செய்கிறது.

இனி பருவமழைக்கான வாய்ப்புகள் குறைவென்பது எப்படி மறுக்கமுடியாத உண்மையோ அதுபோலவே இனி மழையைப்பற்றிய கவிதைகளுக்கும் வாய்ப்புகள் குறைவுதான். நக்கீரனைப்போல நெடுநல்வாடையைப் படைப்பதற்கான சாத்தியங்கள் குறைவுதான் என்பதே துயரமாக இருக்கும்போது, இனி பெருமழையின் துயரங்களையும், பெருவெள்ளத்தின் பாடுகளையும்தான் எழுதப்போகிறோமா என்பதை நினைக்கும்போது பெருந்துயரம் இதயத்தைப் போர்த்திக் கொள்வதை வலியோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். இயற்கையை மிஞ்சத்துடித்த மனிதனின் பேராசையின் மீது ஓங்கியடிக்கும் ஒவ்வொரு மழையையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.

பதினைந்து வருடங்களுக்கும் மேலான இந்தப் பெருநகர வாழ்க்கையின் முதல் வெள்ளத்தில் இடுப்பளவுத் தண்ணீரில் பலமைல்கள் நடந்துசென்றேன். இரண்டாவது வெள்ளத்தில் இரண்டுநாட்கள் தெருவில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டே வீட்டிலிருந்தேன். இதோ இந்த வருடமும் புயல் புரட்டிப்போட்ட இந்த நகரம் மீண்டெழுவதற்குள், தென்மாவட்டங்களை வரலாற்றுத் துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது வரலாறு காணாத பெருமழை. சிறுவனாக இருக்கும்போது நோவாவின் கதையை என் தந்தை சொல்லக் கேட்டதை, இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பேனென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கிறேன் பேரழிவின் காட்சிகளை. கேட்டுக் கொண்டிருக்கிறேன் பேரழிவின் கூக்குரல்களை.

இப்படியாக, இன்றிருக்கும் கவிஞர்களுக்கான பாடுபொருட்களுக்குப் பஞ்சமில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு கலைஞனும் மூர்க்கத்தனமான முதலாளித்துவத்தால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சுற்றுச் சூழலைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவையிருக்கிறது. நாம் பார்க்கத்தான் இந்த நகரம் கட்டிடக் காடுகளாக மாறிக்கொண்டிருக்கிறது. நம் கண்முன்னேதான் நம்முடைய காடுகள் முற்றும் முழுவதுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையோடு இணைந்திருந்த காலம் இருக்கத்தான் செய்தது. இயற்கையை வெற்றிகொள்வதாய் நினைத்துக்கொண்டு இன்று மனிதகுலத்தின் எதிரியாக இயற்கையை மாற்றி வைத்திருப்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. பேராசையின் கரங்களால் அலங்கோலாமாக்கப்பட்ட இயற்கையை வர்ணிக்க என்ன இருக்கிறது, அந்த அழகை மீட்டெடுப்பதுதான் இன்று கலையின், கலைஞனின் நோக்கமாக இருக்கவேண்டுமென்று இந்த நேரத்தில் உறுதிபட உரைக்கிறேன்.

ஒருபக்கம் செயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் யுத்தங்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம் பெருமழை, பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றும் முடிந்துவிடவில்லை. இப்போது விழித்துக் கொண்டாலும் காப்பாற்றிவிடலாம் நம்முடைய சந்ததிகளை. முதலாளித்துவத்திற்கு எதிரான கறாரான நிலைப்பாடுகளை இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதர்களும் எடுக்கவேண்டியது தவிர்க்க முடியாதாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் மனிதாபிமானமும், மானுட அன்பும், இயற்கையின் மீதான காதலும் இருந்தால் பூமியைக் காப்பாற்றிவிடலாம், நம்மையும் கூடத்தான்.

இதையெல்லாம் நோக்கி என்னுடைய வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று உறுதியளிக்கிறேன். சக கலைஞர்களே,  என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள்?

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 22/12/2023 - 9:06 PM

இயற்கையின் மீதான காதல் இல்லாத கவிஞர்களைப் பார்க்க முடியாது. அத்தகைய இயற்கையின் கொடை மழை. இயற்கையைப் பற்றி எழுதும் கவிஞர்கள் மழை குறித்து எழுதாமல் கடந்து போக முடியாது.

விரும்பி எழுதும் கவிதைகளுள் மழை குறித்த கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நீங்களும் கவிஞர் ஜோசப் ராஜா போல மழை உள்ளிட்ட இயற்கையை ரசித்து ரசித்து எழுதுங்கள். அதே நேரம் இயற்கையைக் காக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

Reply

Leave a Comment