மரணத்தின் விளிம்பில் ஒளிர்ந்த வெளிச்சம்

அந்த இரவை இப்போது நினைத்தாலும் என்னைச் சுற்றிலும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணைக்கப் படாதபாடு படுகிறேன். சில நினைவுகள் அப்படித்தான் இதயத்தின் ஆழத்தில் அப்படியே தங்கிவிடுகின்றன. வாழ்வின் சில அனுபவங்களிலிருந்து நமக்குக் கிடைத்த வெளிச்சம் ஒவ்வொரு இருளில் மட்டுமல்ல, ஒவ்வொரு பகலிலும்கூட நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். பதினாறு வருடங்களுக்கு முன்னால் என்னைப் படபடக்க வைத்த அந்த இரவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். திடுக்கிடவைக்கும் அந்த நினைவுகளுக்கு அழிவில்லை என்பதை ஆழமாக நம்புகிறேன். ஏனென்றால் அந்த அனுபவம்தான் இன்றும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அந்த அனுபவம்தான் என்னுடைய சிந்தனையின் பாதையைச் செம்மைசெய்து கொண்டிருக்கிறது.

உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். அதிலும் குறிப்பாகச் சிகப்பு அட்டைகளில் ஒளிர்ந்து கொண்டிருந்த சோவியத் இலக்கியங்கள் இதயத்திற்குள் பெரும்புயலாய் சுழன்றடித்துக் கொண்டிருந்த காலம். அதுவரையிலும் ஒட்டிக்கொண்டிருந்த பழைய கருத்துகள் உதிரத்தொடங்கி, எதிர்காலச் சிந்தனையையும், வாழ்க்கையையும் வடிவமைக்கப் போகும் புதிய கருத்துகள் கருவாகி உருவாகத் தொடங்கியிருந்த நேரம். வாழ்வனுபவமும், புத்தகவாசிப்பும் ஒருசேர அமையும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைப்பவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஓராயிரம் அனுபவங்கள் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு அனுபவங்களிலும் ஓராயிரம் கதைகள் உறைந்திருக்கின்றன. எழுத்தாளன் என்பவன் அந்தக் கதைகளைச் சொல்லத் தெரிந்தவன் அவ்வளவுதான்.

தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இரவு முற்றிலும் விசித்திரமானது. கனத்த இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் சப்தங்களால் இரவின் இதயம் விடியும் வரையிலும் அதிர்ந்துகொண்டே இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான இரவுப்பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கும். சைக்கிளில் தேநீர் விற்பவர்கள் விடியும் வரையிலும் வீதிவீதியாகச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சிறியதும் பெரியதுமான பெரும்பாலான நிறுவனங்கள் இரவுமுழுக்க இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அப்படி ஒரு பதினைந்து இயந்திரங்கள் மட்டுமே கொண்டே லேத் நிறுவனத்தில் என்னோடு சேர்த்து ஏழுபேர் இரவு வேலையில் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தோம். பெரிய நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் செய்து கொடுக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் அந்த நிறுவனமும் ஒன்று. அங்கிருக்கும் கடைசல் இயந்திரங்கள் பெரும்பாலும் ஆயுதபூஜை தினத்தன்று சிறிதுநேரம் அணைத்து வைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இரவும் பகலும் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படியென்றால் ஒர் உழைப்பாளி இரவும் பகலும் அதை இயக்கிக்கொண்டே இருக்கவேண்டும். நேரகாலமில்லாமல் ஒரு தொழிலாளி உழைத்தால் அல்லவா முதலாளிக்கு இலாபம் பெருகிக் கொண்டேயிருக்கும் என்பதெல்லாம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகத்தின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் புரிந்துகொள்ளத் தொடங்கிய நேரம்.

எங்கள் ஏழுபேரில் ஒருவரும், எல்லோருக்கும் மூத்தவருமான  காளியண்ணன், நெருக்கி பத்துவருடங்களுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருப்பவர். பெரும்பாலும் அங்கிருக்கும் இயந்திரங்களின் இயக்கத்தைத் தன்னுடைய அனுபவத்தால் முழுவதும் அறிந்து வைத்திருப்பவர். எனக்கும் மற்றவர்களுக்கும் அவர்தான் இயந்திரங்களை எவ்வாறு இயக்கவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்தார். அதிகாலை இரண்டு மணிக்குமேல் அன்று திட்டமிடப்பட்டிருந்த வேலை வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. முக்கால்வாசி இறக்கிவிடப்பட்ட ஷட்டரின் கதவிற்குள் மெல்ல நுழைகிறது ஒரு மனிதத்தலை. மொத்த இயந்திரங்களும் இயங்கிக் கொண்டிருப்பதாலும், நான்கு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருப்பதாலும் அந்தச் சத்தத்தையெல்லாம் மிஞ்சும் ஒரு சத்தத்தை எழுப்பினார் அவர். “சூடா சுக்குக்காபி, சுரீர்னு இஞ்சிட்டீ” என்ற பெருஞ்சத்தத்தைக் கேட்டவுன் அதற்காகவே காத்திருந்தவர்களைப் போல இயந்திரத்தை அணைத்துவிட்டு தெருவிற்கு ஓடினோம். கொஞ்சம் பெருத்த உடல்கொண்ட ரமேஷால் இறக்கிவிடப்பட்டிருக்கும் ஷட்டர்வழியாகக் குனிந்துவரமுடியவில்லை என்பதால் நானும் காளியண்ணனும் ஷட்டரை ஏற்றி அவன் சுக்குக்காபி குடிக்க வழிசெய்தோம். நன்றிக்கடனாக எங்களுக்கு இரண்டு நெய்பிஸ்கட்டுகளை வாங்கிக்கொடுத்தான் ரமேஷ். அதிகபட்சம் ஐந்துநிமிடம்தான், காளியண்ணனின் இயந்திரம் கடகடவென்று ஓடத்தொடங்கியதும், நாங்களும் இயந்திரங்களை நோக்கி ஓடினோம். ஏனென்றால் காலையில் முதலாளி வந்து கேட்கும்போது நேரக்கணக்கை பொய்யில்லாமல் சொல்லக்கூடியவர் காளியண்ணன்.  

அதிகாலை மூன்று மணிக்கும் மேலிருக்கும். ஏழுபேரால் முடிக்கப்பட்ட உதிரிபாகங்கள் மலைபோலக் குவிந்துகிடக்கின்றன. விடிந்ததும் வந்துநிற்கப் போகும் வண்டியில் ஏற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் வேலைகளை முடிக்க வேண்டுமென்பதால் இயந்திரத்தின் வேகத்தில் நாங்களும் இயங்கிக் கொண்டிருந்தோம். வெடிமருந்துக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதைப் போல திடீரென்று கேட்ட சத்தம் என்னது? எங்கிருந்து வந்தது? என்று தெரிந்து கொள்வதற்குள், நாலாபக்கமும் வெடித்துச்சிதறி எரிந்துகொண்டிருக்கும் மின்சார வயர்கள்தான் தெரிகிறது. இயந்திரத்தை எப்படி அணைப்பது? பரவிக்கொண்டிருக்கும் நெருப்பை எப்படி அணைப்பது? அப்படியே போட்டுவிட்டு உயிரைப்பிடித்தபடி வெளியே ஓடிவிடலாமா? கம்பெனியின் முதலாளிக்கு என்னபதில் சொல்வது? என்ற எண்ணற்ற கேள்விகளோடு அந்த நாப்பதுக்கு முப்பது அறைக்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். மின்சார நெருப்பைத் தண்ணீர் ஊற்றியும் அணைக்கமுடியாது. வெளியே ஓடலாமா என்றால் ஷட்டருக்கு இடதுபுறம் வரிசையாக இருக்கும் மின்சாரப் பெட்டிகள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கின்றன. தப்பிக்கமுடியுமா இல்லை காலைச்செய்தியில் கருகிய ஏழுஉடல்கள் நிச்சயமாகுமா என்ற பீதி தொற்றிக்கொண்டது எல்லோரையும். அணைக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை. நெருப்பு அதிலும் மின்சார நெருப்பு பயங்கரமான காட்சியாக இருந்தது. எரியும் மின்சார வயர்களின் துர்நாற்றம் சுவாசத்தைத் தடுக்கத் தொடங்கியதும், காளியண்ணன்தான் சொன்னார் “ஓடுங்கப்பா வெளில” என்று.

முக்கால்வாசிக்கும் மேல் இறக்கிவிடப்பட்டிருக்கும் ஷட்டருக்கு கீழே உருண்டு ஒவ்வொருவராக வெளியே செல்வது அந்தப் புகையில் மங்கலாகத் தெரிந்தது. ஐந்துபேர் வெளியேறிவிட்டார்கள். ஷட்டரின் இடதுபுறம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. தாமதிக்க நேரமில்லை என்று ஓடுகிறேன், எனக்குப் பின்னால் காளியண்ணன் புகையைப்போல வந்து கொண்டிருக்கிறார். நான் உருண்டு வெளியேற முயற்சிக்கையில், உழைப்பின் மீதுள்ள பேரன்பால் அவர் மின்சாரப் பெட்டியின் மெயினை அணைக்க முயற்சித்து தூக்கி வீசப்படுகிறார். பாதி உடல் வெளியே இருக்க “அய்யோ அம்மா” என்ற காளியண்ணனின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். சுவற்றில் சாய்ந்தபடி வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் உள்ளே சென்று அவரை இழுத்துக்கொண்டு வர முயற்சிக்க, கிட்டத்தட்ட எல்லாமும் பற்றியெரிந்து கொண்டிருந்தது. வெளியே இருந்தவர்கள் கொஞ்சம் ஷட்டரை தூக்கி, சென்னையின் அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் எங்களை அர்ச்சனை செய்துகொண்டே வெளியே இழுத்துவிட்டார்கள். ஒருவரையொருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். காளியண்ணனைத் தவிர எங்களுக்கெல்லாம் உயிர்பிழைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது. உடலின் காயங்களைக்கூடக் கவனிக்கவில்லை. அவர்தான் அழுதுகொண்டே முதலாளியிடம் கைப்பேசியில் தகவலைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஷட்டருக்குள்ளிருந்து வரும் கரும்புகையைப் பார்த்துக்கொண்டே இன்னும் வேகம் குறையாத இதயத்துடிப்போடு எதிரில் நின்று கொண்டிருந்தோம். ஆங்காங்கே தூங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் எழுந்துவந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அரைமணிநேரம் கழித்து மின்சாரவாரிய ஆட்கள் வந்தார்கள். சம்பிரதாயத்திற்கு எங்களிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டுத் தெருவிலிருக்கும் இணைப்பைத் துண்டித்துவிட்டு கம்பெனிக்குள் எரியும் நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலாளியின் புல்லட் சத்தம் கேட்டதும் காளியண்ணன் கதறியழத் தொடங்கினார். புல்லட்டை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வந்தவர் கம்பெனிக்குள் பார்வையைச் செலுத்தினார். நெருப்பில்லை, புகைந்து கொண்டிருந்தது. அங்குமிங்கும் நடந்தபடி யார்யாருக்கோ போன்செய்து “போச்சே எல்லாமும் போச்சே” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அவரைப்போன்ற முதலாளிகள் சிலர் வந்தார்கள். உள்ளே நெருப்பு அணைந்திருந்தது. வெளியே அவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள். இயந்திரங்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இப்போது முதலாளியின் முகத்தில் பதட்டம் குறைந்திருந்தது. காப்பீட்டை எப்படி வாங்குவது என்று ஒருவர் சொன்னதைக் கவனமாகக் கேட்டபடி, இருசக்கர வாகனத்தில் ஏறினார். வந்திருந்த மொத்த வாகனங்களும் ஒரேநேரத்தில் புறப்பட்டதில் அந்த இடத்தில் புகைமண்டியது.

எந்தக் காப்பீடும் செய்யப்படாமல், உயிர்பிழைத்து நின்றுகொண்டிருக்கும் எங்கள் ஏழுபேரிடமும் ஒருவார்த்தைகூடப் பேசாமல் புறப்பட்டான் முதலாளி. காளியண்ணன்தான், ஏதோ தெரியாமல் அவரே நெருப்பு வைத்துவிட்டதைப் போல “சார் சார்” என்று கெஞ்சிக் கொண்டே பின்னால் ஓடினார். கொஞ்சதூரம்தான், சோர்ந்த முகத்தோடு திரும்பி வந்தார். எங்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர் தன்னுடைய துணிமூட்டையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார் காளியண்ணனிடம். ஒரே மூச்சில் முழுவதும் குடித்தவர், வாயைக் கொப்பளித்துப் புகைந்துகொண்டிருக்கும் ஷட்டரை நோக்கித் துப்பினார். “பிச்சைக்காரப்பசங்க, உயிர்பொழைச்சி நின்னுட்ருக்கிற மனுசங்களவிட மெஷினுமயிறு முக்கியமாப்போச்சு” என்று உரத்தகுரலில் அவர் கத்தியது எங்களுக்கு மெதுவாகத்தான் கேட்டது.

அவ்வளவுதான், முகத்திலும், ஆடைகளிலும் அப்பியிருக்கும் அழுக்கைத் துடைத்துக் கொண்டே அந்தத் தெருவைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். சூரியன் வெளிப்படத் தயாராக இருந்தது. விசாலமான அந்தத் தெருக்களுக்கு மேலே இந்த நகரத்தில் மிச்சமிருக்கும் சில பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அன்றிலிருந்துதான், கற்றுக்கொள்ளத் தொடங்கிய இலக்கியத்தையும், மார்க்சியத்தையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முதலாளித்துவ மனோபாவம் எப்படிப்பட்டது என்பதையும், அதன் கொடூரமான இன்னொரு முகத்தையும் வெறும் புத்தகங்களில் இருந்து மட்டும் கற்றுக்கொள்ள முடியுமா என்ன? அன்றைய மரணத்தின் விளிம்பில் என்னுடைய இதயத்தில் ஒளிர்ந்த வெளிச்சம் இந்தப் புரிதல்தான்.

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 05/09/2023 - 7:29 AM

இலக்கியத்தையும், மார்க்சியத்தையும் ஒரே நேர்கோட்டில் புரிந்துகொண்டதும், புரிந்துகொள்ளச் செய்ததும் அவசியம் என்றே தோன்றுகிறது தோழர். முதலாளித்துவ மனோபாவம் இப்படிப்பட்டது தான். இன்னும் அதன் கொடூர முகங்கள் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. புத்தகங்களைத் தாண்டி, பலரும் உள்ளுணர்ந்து அதன் வெளிப்பாட்டை அடியோடு அழித்தொழிக்க போராட வேண்டும். அவர்களை உண்மையில் பிச்சைக்காரர்களை விட கீழ் நிலைக்கு இட்டுச்செல்ல உழைப்பாளிகளால் முடியும் என்று நம்ப வேண்டும். எல்லாமும் நடக்கத்தான் வேண்டும். விடுதலையை நோக்கிய ஒரு பயணத்தினூடே… நன்று தோழர். மகிழ்ச்சி

Reply
பெரணமல்லூர் சேகரன் 11/09/2023 - 2:38 PM

மரணத்தின் விளிம்பில் நிற்பது படிப்பதற்கோ கேட்பதற்கோ எளிது. ஆனால் நடப்பில் அனுபவித்தல் அரிது.

அதை அனுபவித்து அந்த அனுபவ வெளிச்சத்தில் முதலாளித்துவ கோர முகத்தை அற்புதமாகக் கிழித்துத் தொங்க விடுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

தொழிலாளி வர்க்கத்தைப் பற்றி என்றுமே கவலைப்படாதது முதலாளி வர்க்கம். ஆனால் முதலாளி வர்க்கத்தை எதிர்க்க வேண்டிய தொழிலாளி வர்க்கம் சாதியால் மதத்தால் பிரிந்து கிடப்பது சுரண்டும் வர்க்கத்துக்குத்தான் நல்ல பலனைக் கொடுக்கிறது.

காலங்காலமாக சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கம் படிக்க வேண்டிய பரப்ப வேண்டிய உண்மைச் சம்பவத்தின் கதை.

Reply

Leave a Comment