சூரியன் உதிக்கும் போதும், சூரியன் அஸ்தமனமாகும் போதும், நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போதும், மழை பெய்து கொண்டிருக்கும் போதும், ஆலிவ் அறுவடை நடந்து கொண்டிருக்கும் போதும், மாபெரும் மாற்றங்களை நோக்கி உலகம் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் போதும், காதலர்கள் தனியாகச் சந்தித்துக் கொள்ளும் போதும், பாலஸ்தீனத்தின் தாயொருவள் கருவுறும் போதும், குண்டுகள் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் வானத்திற்குக் கீழே, இடிபாடுகளுக்கு அடியில், எங்காவது ஓர் அகதி முகாமில், முக்கால்வாசி சிதைக்கப்பட்ட மருத்துவமனை வளாகத்தில், நிறைந்த நம்பிக்கையோடிருக்கும் தாயொருவள் பாலஸ்தீனத்திற்காக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போதும், இந்த உலகத்தின் அதிகமான இதயங்களின் ஆதரவைப் பெற்ற பாலஸ்தீனம் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்கிறது.
எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளுக்குப் பிறகும், நினைத்துப் பார்க்க முடியாத துயரங்களுக்குப் பிறகும் தங்களுடைய நிலத்திற்காக, தங்களுடைய வாழ்க்கைக்காக, தங்களுடைய எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருக்கிறது பாலஸ்தீனம். அதனால்தான் பாலஸ்தீனத்திற்கான ஆதரவுப் பதாகைகள் உலகம் முழுவதும் உயர்ந்து கொண்டேயிருக்கின்றன. இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க மண்ணில் பாலஸ்தீனத்திற்கான ஆதரவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இஸ்ரேலை ஆதரிக்கும் இங்கிலாந்து மண்ணில் பாலஸ்தீனத்திற்கான ஆதரவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இஸ்ரேலை ஆதரிக்கும் இந்திய மண்ணிலும்கூட பாலஸ்தீனத்திற்கான ஆதரவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
போரின் பெயரால் குறிபார்த்துக் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு மனிதனாகத் தீராத வலியைச் சுமந்து கொண்டிருந்தாலும், ஒரு கவிஞனாக நம்பிக்கையால் நிறைந்திருக்கிறேன். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதைகளை நினைத்து இன்னும் வலிமையாகிக் கொண்டிருக்கிறது என்னிதயம். பாலஸ்தீனத்தின் பாடுகளைக் கண்டு கண்ணீர் சிந்திய, கோபம் கொப்பளித்த, ஆற்றாமையை வெளிப்படுத்திய ஒவ்வொரு கவிஞர்களையும் இறுக அணைத்துக் கொள்கிறேன்.
பாலஸ்தீனக் கவிதைகளை வாசிப்பதற்குக் கண்கள் மட்டும் இருந்தால் போதவே போதாது. கண்டிப்பாக இதயமும் திறந்திருக்க வேண்டும். அந்த இதயத்தில் மானுட அன்பும், மானுடக் கரிசனமும் நிறைந்திருக்க வேண்டும். தினமும் கதைகேட்டபடியே தூங்கும் நம்முடைய தேசத்தின் குழந்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். எண்ணிலடங்கா பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் நம்முடைய தேசத்தின் குழந்தைகளின் அனுபவங்களையும், நினைத்துப் பார்க்க முடியாத பாலஸ்தீனக் குழந்தைகளுடைய வாழ்வின் அனுபங்களையும் பொருத்திப் பார்க்கும்போது உடைந்து நொறுங்கும் இதயத்தை உணர்ந்து கொள்கிறேன்.
யுத்தத்தின் போக்கைப் பார்த்தால், பாலஸ்தீனத்தை முழுவதுமாக அழித்து விடுவார்கள் போலத் தெரிகிறதே என்று கண்களில் நீர்தழும்பக் கேட்டார் நண்பரொருவர். ஒருவேளை அழித்துவிடலாம் பாலஸ்தீனர்களை முற்றும் முழுவதுமாக அழித்துவிடலாம், ஆனால் பாலஸ்தீனர்களின் சுதந்திர தாகத்தை, விடுதலை வேட்கையை கேவலம் இந்தக் குண்டுகளும், இந்தப் பீரங்கிகளும் அழித்துவிடுமா என்ன?
பாருங்கள்! எத்தனை கவிஞர்கள் பாலஸ்தீனத்தில். எண்ணிப் பாருங்கள்! எத்தனை கவிதைகள் பாலஸ்தீனத்திற்காக. இனி கவிதைகளை ஆராய்ச்சி செய்ய வருகிறவர்கள், பாலஸ்தீனத்தைக் கண்டிப்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டியாக கட்டாயம் நேரலாம். ஏனென்றால் உலக மொழிகளில் அதிகமான மொழிகளுக்கு பாலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்த்துக் கொண்டுசெல்லப் பட்டிருக்கின்றன. உலகத்தில் அதிகமான மொழிகளிலிருந்து பாலஸ்தீனத்திற்கான கவிதைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நல்ல கவிதை உண்மைக்கு நெருக்கமாகத்தான் இருக்கும். நல்ல கவிஞன் உண்மையை விரும்புகிறவனாகத்தான் இருப்பான். கவிதைகளில் இருந்து விலகிச்சென்ற ஆய்வாளர்களே! உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நீதியின் பக்கம் நிற்கும் கவிஞர்கள் தங்கள் நேர்மையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னசெய்யப் போகிறீர்கள் நீங்கள்?
இந்த உலகம் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். நேட்டோ பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் உக்ரைன் – ரஷ்ய யுத்தம் இன்னும் முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் இன்னும் முடியவில்லை. இது மூன்றாம் உலகயுத்தம் இல்லையென்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எல்லோரும் இந்த யுத்தத்தில் பங்குபெற்றிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட காஸாவின் குழந்தைகளுடைய இரத்தத்தால் நிறைந்திருக்கிறது ஒவ்வொருவரின் கைகளும். நான் பாவமேதும் செய்யவில்லை என்று ஒருவரும் கைகழுவிவிட முடியாது. என்ன செய்யலாம்?
எல்லோரும் இணைந்து கொள்வதைத் தவிர தப்பிக்க வேறெந்த வழியும் இல்லை. கவிதை அதைத்தான் வலியுறுத்துகிறது. எல்லோரும் சேர்ந்து போராடுவதைத் தவிர நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு எந்த உத்திரவாதமுமில்லை. கவிதை அதற்காகத்தான் அழைக்கிறது. முதலாளிகளால் சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டிய தேவை எல்லோருக்கும் இருக்கிறது. முதலாளிகள் தங்களுக்குள் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டும், தங்களுடைய வேட்டை நிலங்களைப் பிரித்துக் கொண்டும் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் இரைகளாகாமல் இருப்போம். பாருங்கள் பாலஸ்தீனத்தை இத்தனைக்குப் பிறகும் போராடிக் கொண்டிருக்கிறது!
1 comment
பாலஸ்தீன மக்களுக்காக இடையறாமல் கவிதை வழி போராடிக்கொண்டிருக்கும் கவிஞர்
ஜோசப் ராஜாவின் வார்த்தைகளையும் படியுங்கள். பரப்புங்கள்.