படம் : ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டிற்காகக் காத்திருக்கும் சாவி
ஓராண்டைக் கடந்தும் காஸாவில் இன்னும் பிழைத்திருக்கும் கவிஞன் மொசஃப் அபு தோஹா சொல்கிறான், காஸாவில் வாழ்வது சாவதற்காகத்தான் என்று. இங்கிருந்து நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை என்னால் அள்ளிக் கொடுக்க முடியும். ஆனால் கண்களுக்கு முன்னால் ஆயிரமாயிரம் குழந்தைகள் வெடித்துச் சிதறியதை, இடிபாடுகளுக்குள் புதைந்து கத்திக்கத்திச் செத்துப்போனதை, அனாதைகளாக அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை, அகதி முகாம்களில் விடைதெரியாத கேள்விகளோடு அடைந்து கிடப்பதை, நானல்ல, அந்தக் கவிஞன்தான் இரத்தமும் சதையுமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனும்கூட கவிதை இதயத்தைச் சுமந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். மரணம் தள்ளிப்போகிறது அவ்வளவுதான் என்று சாவின் காலடியில் நின்றுகொண்டு அவன் சொல்வதைக் கனத்த இதயத்தோடு கவனிக்கிறேன் நான்.
அவ்வளவுதான், அந்தக் கொடூர யுத்தம் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. கண்ணை மூடி முழிப்பதற்குள் ஐம்பதாயிரம் உயிர்களைக் கொன்று குவித்து இன்னும் பசியோடு பறந்து கொண்டிருக்கின்றன போர் விமானங்கள். பல்லாயிரம் பச்சைக் குழந்தைகளின் இரத்தம் அந்தப் போர்வெறியர்களின் யுத்தவெறியை தணித்திருக்கும் என்று நினைத்தால் இல்லை, இல்லையென்று சொல்லிக்கொண்டே இன்னும் பலிகேட்டு காஸாவையும், ரஃபாவையும், கான் யூனிஸையும் சிதைத்தது மட்டுமல்லாமல், என் நேசத்திற்குரிய கவிஞர் கலீல் ஜிப்ரானின் பெய்ரூட்டையும் உள்ளும் புறமும் நொறுக்கிக் கொண்டிருக்கிறது. திவிரவாதிகளைக் கொல்கிறோம், தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்று சொல்லிச்சொல்லி இதுவரையிலும் கொன்று குவித்ததெல்லாம் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவி மக்களையும்தான். இந்தக் கொலைகாரர்களின் வாயிலிருந்து பொய்தான் பிரவாகமெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
பேரழிவைத் தொடங்குவதற்கு முத்தாய்ப்பாக அமெரிக்க அதிபர் பைடன், ஹமாஸ் இஸ்ரேல் குழந்தைகளின் தலையை வெட்டியது என்ற பெரும் பொய்யைச் சொன்னார். கனன்று கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்க அதிபரின் வாயிலிருந்து எதற்காக இப்பேர்ப்பட்ட பொய் வெளிப்படவேண்டும். ஒன்றுமில்லை பேரழிவிற்காகத்தான். அவர்களுக்கு பொய்சொல்வது ஒன்றும் புதியதல்ல, ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்று பொய்சொல்லித்தானே யுத்தத்தைத் தொடங்கினார் முன்னாள் அதிபர் புஷ். சதாம் உசைன் கொல்லப்பட்டார். லிபியாவின் கடாஃபி கொல்லப்பட்டார். இப்போது பாலஸ்தீனம், லெபனான், ஈரான், சிரியா. அந்தக் கவிஞனைப் போலத்தான் நானும் கேட்கிறேன். அந்த மக்களெல்லாம் சாவதற்காகவா பிறக்கிறார்கள்? வரப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் இஸ்ரேலுக்கு யோசனை சொல்கிறார், முதலில் ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்குங்குள் வருகிற பிரச்சனையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று. நினைத்துப் பாருங்களேன் இவர் அதிபரானால்?
இந்த அரசியல்வாதிகள் ஏன் இவ்வளவு அற்பமானவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துப்பார்க்கிறேன். இத்தனைப் பெரும் பேரழிவில் இவர்களால் எப்படி அரசியல் செய்ய முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு. மனித இரத்தத்தின் ருசிக்கு இந்தப் போர்வெறியர்கள் பழகிவிட்டார்கள் என்பதை நினைக்கும்போது நரம்புகளுக்குள் மெல்ல நடுக்கம் ஏற்படுவதை என்னால் உணரமுடிகிறது. எல்லாவற்றிற்கும் தயாராக எற்கனவே இவர்கள் உற்பத்தி செய்துவைத்திருக்கும் ஆயுதங்கள் இன்னும் தீரவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகத்தான் இருக்கிறது. இத்தனை ஆயுதங்கள் போதாதென்று, மனிதனின் புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவும் துல்லியமாகக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயுதங்களை விடவும், இராணுவ வீரர்களை விடவும் தொழில்நுட்பம் துல்லியமாகக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேரழிவின் கூடவே இங்கிருந்தபடி நானும் ஒருவருடமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை வலியோடு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். எத்தனையோ இரவுகள் தூக்கம் இழந்திருக்கிறேன். எண்ணிலடங்கா கனவுகளில் பாலஸ்தீன நிலத்தில் உயிர்பிடித்து அலைந்தவர்களோடு நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். ஒரு கவிஞனாக இது எனக்கு வரமும் சாபமும். ஒரு பேரழிவின் சாட்சியாக என்னுடைய கவிதைகள் இருக்கின்றன என்பதை வரமாகவும், இத்தனை வலிகளையும், இவ்வளவு வேதனைகளையும் சுமந்து திரியும் சாபமாகவும் இந்தக் காலம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறேன். யுத்தத்திற்கு நடுவில் பாலஸ்தீனத்தின் அகதிமுகாமொன்றில் குழந்தை பெற்றவள் சொன்னது இன்னும் என் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. குழந்தை உண்டான நாளிலிருந்து எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படித் தூங்க வேண்டும் என்றும், குழந்தை பிறந்தபிறகு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர்கள் யுத்தத்திற்கு நடுவில் எப்படிப் பதட்டமில்லாமல் குழந்தையைப் பெற்றெடுப்பது, உணவில்லாமல், தண்ணீரில்லாமல், தாய்ப்பாலில்லாமல் எப்படிக் குழந்தையை வளர்ப்பது என்று சொல்லிக் கொடுக்கவில்லையே! என்று அவள் கேட்ட கேள்வி யுத்தத்திற்கு எதிரான கேள்வியாக காலமெல்லாம் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
இந்த யுத்தம் மத்திய கிழக்கின் ஒற்றுமைக்கு வழிவகுக்கக்கூடும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்குகிறது. ஆயுத வியாபாரிகள் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற போதிலும் இந்தப் பேரழிவு அவர்களுக்குள் ஒற்றுமையை விதைக்க வாய்ப்பிருக்கிறது. தன்னுடைய நோயுற்ற இதயத்திலிருந்து பிறந்த கொடூரமான எண்ணங்களின் மூலம் உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லரை, அச்சுறுத்திய செஞ்சேனையையும், புரட்சியின் தாயகமான சோவியத் யூனியனையும் இந்நேரம் நினைத்துப் பார்க்கிறேன். செஞ்சேனை வீரர்கள் பெர்லினை நெருங்க நெருங்க அந்தப்பொடியன், அந்த மடையன் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனான். பேரழிவை நிகழ்த்தியவனின் முடிவு கேவலமாகத்தான் இருந்தது. கொடுமையின் கரங்களிலிருந்து உலகத்தை விடுவித்த உற்சாகத்தில் பெரிலினில் படபடவெனப் பறந்து கொண்டிருந்தது பாட்டாளிவர்க்கத்தின் செங்கொடி. இந்த நேரத்தில் இந்த நம்பிக்கை முக்கியமானதென்று கருதுகிறேன். நம்புங்கள், நீங்கள் நினைத்தால் உலகத்தின் அதிநவீன உளவு அமைப்பும் உங்களுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போகும். நம்புங்கள், நீங்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய சர்வாதிகாரியும் உங்கள் கால்களுக்குக்கீழே உயிர்ப்பிச்சை கேட்டு வீழ்ந்து கிடப்பான்.
போர் ஒழியட்டும்
இன்றைக்கல்ல
என்றைக்குமே
போரை விரும்புகிறவர்கள்
ஆயுத வியாபாரிகளும், சர்வாதிகாரிகளும்தான்
மக்களல்ல!
போர் ஒழிய வேண்டும்
அப்படியே
ஆயுத வியாபாரிகளும்
அவர்களுக்குப் பின்னாலிருக்கும் அரசுகளும்!
ஜோசப் ராஜா
1 comment
பேரழிவின் ஓராண்டுப் பயணம் ஏற்படுத்திய நீங்காத ரணத்தைக் காட்சிப் படுத்தியும் நினைவுபடுத்தியும் உள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
இதை நினைவுகூர்ந்து இடதுசாரிக் கட்சிகள் இன்று நாடு தழுவிய
போர் எதிர்ப்புப் போரை நடத்தியது நினைவுகூரத்தக்கது.
வாசியுங்கள்.