புத்தாண்டு வாழ்த்துகள்

காலம் றெக்கை கட்டிக்கொண்டு வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது.

நின்று நிதானிக்க நேரமில்லை, மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருப்பதைப் பார்க்க முடிகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள் இளைஞர்கள்.

மனிதர்களுக்கு இடையேயான அன்பும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பது நல்லதல்ல.

இந்தியாவில் சாதியையும் மதத்தையும் வளர்ப்பதைத்தான் பிரதானமாக செய்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

ஒட்டுமொத்த தேசத்தின் முக்கால்வாசி வளங்களையும் சொற்ப எண்ணிக்கையிலான முதலாளிகள் தின்று செரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாளிகளை உட்காரவைத்து அவர்கள் கேட்பதையெல்லாம் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

வழக்கம்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள். இனியும் தொடர்ந்தால் எதுவும் மிஞ்சாது.

அணுசக்தி துறை வரையிலும் தனியார்மயத்தின் கொடுங்கரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன.

குறைப்பிரசவத்தில் பிறந்த குரல்கள் தனியார்மயம் சரிதானென்று முனகிக் கொண்டிருக்கின்றன.

முதலாளிகளின் உடும்புப் பிடியில் உருப்பட்ட ஒரு தேசத்தை உங்களால் காட்ட முடியுமா?

போர் நிறுத்தப்பட்டாலும், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பிலிருந்து மீள, காஸாவிற்கு இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும்.

அந்த நிலத்தில் சிந்தப்பட்ட குழந்தைகளின் இரத்தம், இந்த நேரத்திலும் நினைத்தால் நெஞ்சத்தைப் பிளக்கிறது.

நேட்டோ நாடுகள் பின்னிருந்து தொடங்கி வைத்த உக்ரேன் ரஷ்யா யுத்தம் முடிவேயில்லாமல் இன்னும் ஏன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அத்தனைக்கும் காரணம் ஆசை, அதிகாரத்திற்கான பேராசை, இலாபத்திற்கான பேராசை.

அதிகாரத்தை அடைவதற்கு எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் அற்பர்கள்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

போர்வெறி பிடித்தவர்களால் அல்ல! பணத்தாசை பிடித்தவர்களால் அல்ல! அதிகாரத்தின் மீது மட்டுமே குறியாக இருக்கும் அற்ப மனிதர்களால் அல்ல!

அன்பின் இதயங்களால் மட்டுமே இந்த உலகம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் போர் என்றால், இன்னொரு பக்கம் போருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்.

ஒருபக்கம் மதவெறியர்களின் கூப்பாடு என்றால், இன்னொரு பக்கம் அன்பின் மகத்தான பாடல்கள்.

வாழ்க்கை அப்படியே இருந்துவிடாது.

துயரங்கள் அப்படியே தங்கிவிடாது.

இந்த உலகம் உங்களுக்கானதுதான், நீங்கள் வாரியணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டால்!

காதல் சாதியை தோற்கடிக்கும்

காதல் மதத்தை மண்டியிடச் செய்யும்

குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காதல் குறைகிற இடத்தில்தான், எல்லா துன்பங்களும் தொடங்குகின்றன.

அன்பு இல்லாத இடத்தில் அழிவைத் தவிர எதையும் எதிர்பார்க்க முடியாது.

தங்களுடைய உரிமைகளுக்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பாருங்கள். போராடுகிறவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்.

ஆட்சியாளர்கள் இல்லை இல்லையென்று சொன்னாலும்கூட, போதையின் பிடியில் சிக்கியிருக்கும் இளைஞர்களை இல்லையென்று சொல்லமுடியாது.

சாதி, மதம், போதைவஸ்து எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிகாரத்தை தக்கவைப்பதற்காக அவர்கள் செய்யும் தந்திரம்.

உங்களுக்கு எல்லாமும் புரியும். எனக்கு நன்றாகத் தெரியும். வீதியில் இறங்க வேண்டியது மட்டும்தான் இப்போதைக்கானது.

உங்களுக்காகவும் உங்கள் சந்ததிகளுக்காகவும் செய்வீர்களென்றால், அன்பர்களே! உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment