புத்தாண்டு வாழ்த்துகள்

”ஆதியிலே வார்த்தை கடவுளாயிருந்தது” என்ற வாக்கியத்தை முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தபோது, வாசித்தேன் அவ்வளவுதான். எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர் பயிற்சிக்குப் பிறகு ”மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வாக்கியத்தை பாதி புரிந்துகொள்ள முடிந்தது. இதோ ஒரு கவிஞனாக பதினைந்து வருடங்களுக்கும் மேலான பயணத்தில் வார்த்தையை, வார்த்தையின் முக்கியத்துவத்தை, வார்த்தையின் விளைவுகளை, வார்த்தையின் பரிமாணங்களை புரிந்துகொண்டே பயணித்துக் கொண்டிருப்பதில் உண்மையிலேயே திருப்தியாக உணர்கிறேன்.

ஐநூறுக்கும் மேற்பட்ட கவியரங்க மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. முகம்தெரியாத எத்தனையோ மனிதர்கள் என்னிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை வாரியணைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிவந்திருக்கும் ஏழு புத்தகங்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதிமுடித்த போதும், இப்போதும், இந்தக் கணமும் கூட, வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பொழுதும் வார்த்தைகளுக்காகத் தவமாய்க் கழிந்து கொண்டிருக்கிறது.

கவிதைதான் ஒவ்வொரு பொழுதும் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்களிடம் கவிதைதான் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. கவிதைதான், இந்த வாழ்வின் பெரும் பொக்கிஷமான காதலின் தேவதையை கரம்பிடிக்கச் செய்தது. கவிதையை நான் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற காரணங்களில் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன்.

எல்லாமும் சுபமா கவிஞனே? என்றென்னைக் கேட்டால் இல்லைதான். என் வார்த்தைகள் அளவுக்கதிகமாகக் கொண்டாடப் பட்டிருக்கின்றன. அளவுக்கு மீறிப் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன. பிறந்த குழந்தையை பார்க்காமல் ஒருவனால் திருப்பிக் கொண்டு போகமுடியுமா என்று நினைத்திருக்கிறேன். ஆனால் அப்படி முகம் திருப்பிச் சென்றவர்களை பார்க்க நேர்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். புறக்கணித்தவர்களே என்னை ஆழப்படுத்தினார்கள். புறக்கணித்தவர்களே எனக்குள் வேகமூட்டினார்கள். குற்றச்சாட்டுகளல்ல. அனுபவப் பகிர்தல் அவ்வளவுதான். நன்மையையும், தீமையையும் தோழமையின் கரங்களாலே பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? யூதாஸை நினைத்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த நேரத்தில் எப்படித் துடித்திருக்கும் அந்த இதயம். ஆனபோதிலும் தோழர்களே புன்னகையை மட்டுமே நிறைத்திருக்கிறேன். உங்களுக்கும் சமூக மாற்றம்தான் குறிக்கோள் என்றால் உங்களுக்கு ஆதரவாக என் கவிதைகள் எப்போதும் ஒலிக்கும். இல்லையென்றால் தெருவில், புழுதிபறக்க பாடிக் கொண்டிருப்பேன் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும்.

ஒரு கவிஞனாக எல்லாவற்றையும் பார்க்கிறேன். என்னால் பார்க்கச் சகிக்க முடியாததைப் பற்றிக் கவிதை எழுதுகிறேன். யுத்தங்களுக்குக் காரணமானவர்களை, கலவரங்களுக்குக் காரணமானவர்களை, இந்த உலகத்தின் துயரங்களுக்குக் காரணமானவர்களை, இந்த உலகத்தின் வளங்களைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் முதலாளிகளை என எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டிய தேவையிருக்கிறது. பாரதியின் காலத்தைவிட பாடவேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் போது, கவிதை காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்தோடித்தான் வரும். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான். அதனால்தான் காஸாவின் துயரம் வரைக்கும் எழுதவேண்டிய தேவையிருந்தது. இணையத்தில் வெளிவந்த அத்தனை கவிதைகளையும் வாசித்தும், கடத்தியும் சென்ற தோழமையின் கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.

இந்த இணையதளம் தொடங்கி ஓராண்டு ஓடிவிட்டது என்பது வியப்பாக இருக்கிறது. நூறு படைப்புகளை நிறைத்திருக்கிறது இந்த விஞ்ஞான வெளி. நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள் என்பதே என் பலமாக இருக்கிறது. உங்களுக்காக எழுதுகிறேன் என்பதே எனக்கு நிறைவாக இருக்கிறது. மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்காமல் நமக்கென்ன புத்தாண்டு இருக்கிறது? மக்களுக்காக கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிப்போம். பெரும் மாற்றத்தை நோக்கி அன்பாகக் கைகோர்த்தபடி பயணிப்போம். வார்த்தை பிரகாசிக்கட்டும். வாழ்க்கை பிரகாசிக்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்களே!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

S lokesh 01/01/2024 - 4:15 PM

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reply

Leave a Comment