பிரசவ வலியோடு பிறக்கும் புத்தாண்டு

தாயின் நிறைந்த வேதனையின் வழியாக, அளவிற்கதிகமான வலியைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை கணப்பொழுதில் அவ்வளவு வேதனையையும், அத்தனை வலியையும் மறக்கச் செய்துவிடுவது போல, இந்தப் புத்தாண்டுப் பிறப்பானது இந்த உலகத்தின் வேதனைகளை, இந்த உலகத்தின் வலிகளை கணப்பொழுதில் ஒட்டுமொத்தமாக மறையச் செய்திடுமானால் மகிழ்ச்சியாக இருக்குமல்லவா! ஆனால் முதலாளித்துவத்தின் கொடுங்கரங்களில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அமைதியும், சமாதானமும், அன்பும், மகிழ்ச்சியும் சாத்தியமா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

உண்மையாகவே இந்தப் புத்தாண்டு பிரசவ வலியோடுதான் பிறக்கின்றது என்று சொன்னால் நிச்சயமாக அது மிகையாகாது. ரஷ்யாவிற்கும், உக்ரைன் மற்றும் உக்ரைனைப் பின்னிருந்து இயக்கும் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவேயில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  யுத்தக்களத்தில் இரண்டுபக்கமும் மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன, இரண்டுபக்கமும் இழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் யுத்தம் நிறுத்தப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிரில் நேரடியாக நிறுத்திவிட்டு, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகள் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும், தொழில்நுட்ப உதவிகளைச் செய்துகொடுத்தும் ரஷ்யாவை வீழ்த்திவிடத் துடித்துக் கொண்டிருக்கின்றன.  ரஷ்ய அதிபரா? அமெரிக்க அதிபரா? யார் இந்த உலகத்தை வழிநடத்திச் செல்வது? என்ற கேள்விக்கு யுத்தத்தின் முடிவுதான் பதிலாக இருக்கப்போகிறது.

இன்னொருபக்கம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இரக்கமில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் புத்தாண்டு பிறக்கும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் பாலஸ்தீனத்தின் மருத்துவமனைகளிலும், அகதிமுகாம்களிலும் எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்ற வேதனை எனக்குள் எழத்தான் செய்கிறது.

புத்தாண்டின் மகிழ்ச்சியை முகமெல்லாம் அப்பிக்கொண்டு திரியும் குழந்தைகளைப் பார்க்கும்போது பசியால் அழுது கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. புத்தாடை உடுத்திக்கொண்டு புத்துணர்ச்சியோடு ஓடித்திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மாற்றுத்துணியில்லாமல் அகதிமுகாம்களிலும், அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இடங்களிலும் கவலையோடு காத்திருக்கும் குழந்தைகளின் முகங்கள் கண்களை நிறையச்செய்து இதயத்தைக் கலங்கச் செய்கிறது. வாடிகன் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் போப் சொல்கிறார், ”இது ஆயுதங்களை மெளனிக்கச் செய்ய வேண்டிய நேரமிது” என்று. குழந்தைகள் கொல்லப்படுவதை போப் மட்டுமல்ல யாருமே விரும்பவில்லைதான். ஆனால், யார் சொல்லி என்ன நடக்கப்போகிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இன்னும் வேகமாகப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் மிச்சம்.

ஒரு கவிஞனாக கடந்த வருடம் முழுக்க பாலஸ்தீனத்தின் வலிகளையும் வேதனைகளையும், அம்மக்களின் தொடர் போராட்டங்களையும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன், இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதில் கொஞ்சம் திருப்தி இருக்கத்தான் செய்கிறது. யுத்தம் முடிந்து, அபகரிக்கப்பட்ட அவர்களுடைய நிலத்தில், அபகரிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டில் சுதந்திரமாக அவர்கள் வாழத்தொடங்குவார்களானால், அவர்களைப்போலவே நானும்கூட மகிழ்ச்சியடைவேன். அந்த நிலங்களின் ஆதிச்சொத்தான ஆலிவ் மரங்கள் பூத்துக் குலுங்கத்தான் விரும்புகிறேன். உங்களுடைய குழந்தைகளைப்போல, என்னுடைய குழந்தைகளைப்போல பாலஸ்தீனத்தின் குழந்தைகளும் மகிழ்ச்சியாக சுதந்திரமாக குழந்தைகளுக்கான வாழ்க்கையை வாழவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.

தொடர்ந்து பாலஸ்தீனத்தின் பாடுகளை எழுதுவதற்கே என்ன வலிகளையெல்லாம் அனுபவித்தேன் என்பது எனக்குத்தெரியும். ஆனால் அந்தப் பாடுகளை இரத்தமும் சதையுமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களின் வலியை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்செல்லாம் அடைத்துக் கொள்கிறது தோழர்களே! நினைத்துப் பாருங்களேன், பெரும் பேரழிவைப் பார்க்கும் குழந்தைகளின் மனம் எப்படி இருக்கும், அவர்களின் சிந்தனை என்னவாக இருக்கும், அந்தச் சின்னஞ்சிறிய இதயங்கள் எப்படித் துடித்துக் கொண்டிருக்கும்? இந்தக் கேள்விகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கின்றன. இருளின் குழந்தைகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சொல்லப்பட்ட நஞ்சு நிறைந்த வார்த்தைகளை அந்தப் போர்வெறி பிடித்தவனால் எப்படிச் சொல்ல முடிந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். இனப்படுகொலைக்குத் தயாரானபிறகு வெறும் வார்த்தையில் என்ன இருக்கிறது.

எப்படியோ இந்த நிலைமைகள் இந்த உலகத்திற்கு நல்லதல்ல. பெரும் வலிக்குப் பிற்பாடு குழந்தை பிறப்பதைப்போல, யுத்தமெனும் இந்த வலி பெரும் மாற்றத்தைப் பிரசவிக்கும் என்று நம்புகிறேன். வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான மாற்றங்களெல்லாம் பெரும் துயரத்திலிருந்தும், பெரும் வலியிலிருந்தும் பிரசவிக்கப்பட்டதுதான். சமூகத்தின் வலியும் வேதனைகளுமே புரட்சியைப் பிரசவிக்கின்றன. இந்த உலகம் இப்போது காத்துக்கொண்டிருப்பது பெரும் புரட்சிக்காகத்தான். போர்கள் இல்லாத, வெறுப்பு இல்லாத, சுரண்டல் இல்லாத சமத்துவ உலகம் பிறக்கட்டும் என்று இந்த நாளில் மனமார விரும்புகிறேன். ஒளியை நோக்கி கரம்கோர்த்து நடப்போம் தோழர்களே! வாழ்த்துகள்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment