உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. காஸாவின் பேரழிவைத் தொடர்ந்து, இன்று ரஃபாவும் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து இதயம் கசந்து எத்தனையோ பிரபலங்கள், எத்தனையோமுற்போக்காளர்கள் சுதந்திர பாலஸ்தீனத்திற்காக குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தங்களுடைய தார்மீக கடமையென்று ஒவ்வொரு நாடாக பாலஸ்தீனத்தின் பக்கம் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.
பாலஸ்தீனத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்து கொண்டிருக்கும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள்கூட தங்கள் சொந்த மக்களின் இதயங்களிலிருந்து எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. குறிபார்த்துக் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை இதயமுள்ள யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. மீண்டும் ஒருமுறை போரின் கொடுமைகளை இந்த உலகம் பாலஸ்தீனத்தின் பேரழிவின் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்கள், சிந்தாதிரிப்பேட்டையில் நடத்திய பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்டு, தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் கவிதை வாசிக்க கேட்டுக்கொண்டார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளரும் அன்புத் தோழருமான ஜி.செல்வா.
தோழர் செல்வாவின் தலைமையில் கச்சிதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது பேரணியும், பொதுக்கூட்டமும். சமீபத்தில் வெளிவந்த காத்திருக்கும் சாவிகள் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை வாசித்தேன். மீண்டும் பெரும் மக்கள்திரளின் மத்தியில் கவிதையை நிகழ்த்திப் பார்த்தது நிறைவாக இருந்தது. கவிதை எப்போதும் எனக்கும் ஆயுதம்தான். அந்த அற்புதமான ஆயுதத்தை நேற்று மக்களுக்காக மக்களின் முன்னால் பிரயோகித்ததும், அவர்களின் முகங்களில் மின்னலின் கீற்றுக்களைப் பார்த்ததிலும் இன்னும் அதிகமானது நம்பிக்கை. யுத்தத்திற்கு எதிரான பதாகைகளைக் கையில் ஏந்தியபடி வந்திருந்த குழந்தைகளைப் பார்த்தபோது, எனக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள்தான் ஞாபகம் வந்தார்கள். சுந்தந்திரப் பாலஸ்தீனத்தில் அவர்கள் சுந்திரக் காற்றை விரைவில் சுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காகத்தான் எழுதுகிறேன்.
தோழர் செல்வாவின் விருப்பத்தின்படி, கட்சியின் மாநிலச் செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் காத்திருக்கும் சாவிகள் நூலை மக்கள் முன்னாலும், ஊடகங்களின் முன்னாலும் அறிமுகப்படுத்தினோம். உற்சாகமாகவும் உறுதியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர். செல்வாவை அன்பின் கரங்களால் ஆரத்தழுவிக்கொள்கிறேன். செங்குத்தான பாதையில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் தோழர். ஒருவருக்கொருவர் கரம்பற்றிக்கொள்வதும், கருத்தை பெளதீக சக்தியாக மாற்றுவதும் கடமையாக இருக்கிறது.
சுதந்திர பாலஸ்தீனம் மலரட்டும்.
புகைப்படங்கள் : இயக்குநர் விடிவெள்ளி அவர்கள்
ஜோசப் ராஜா
1 comment
வணக்கம் ஜோசப்ராஜா! காத்திருக்கும் சாவிகள் தொகுப்பிலிருந்து நீங்கள் வாசித்த கவிதைகளைக் கேட்டேன்; நல்வாழ்த்துகள்.உங்களைப் போன்ற கவிஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். உலகெங்கும் அமைதி மலர தொடர்ந்து யாப்போம் கவிதை
– இரா.தெ.முத்து