பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகள்

இதை எழுதத்தொடங்கும் இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தின் நிலத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும். நிச்சயமாக பல குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்டிப்பாக பல வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். குழந்தைகளை இழந்த பாலஸ்தீனத்துத் தாய்மார்களின் கண்ணீர் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அணைக்கவும் செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் யுத்தத்தை நிறுத்தச்சொல்லி, இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து பெருந்திரளான மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அதேநேரத்தில் அமெரிக்காவிடம் இருந்து அடுத்து என்னமாதிரியான நவீன ஆயுதங்கள் வாங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நேரத்தில்தான் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகளான காத்திருக்கும் சாவிகள் என்ற கவிதைத் தொகுப்பை இந்தச் சமூகத்தின் முன்னால் திறந்துவைக்கிறேன். கவிதைகளைப் பரிமாரிக் கொள்வதற்காக ஒவ்வொருவராகச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு நன்றாகத் தெரியும் இந்த அன்பு எனக்காக மட்டுமல்ல, போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்குமானது தான்.

ஆக தோழர்களே, இப்படித்தான் இருக்கிறது சமூகம், இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை. இப்படித்தான் இருக்கிறது காலம். என்ன செய்யலாம். கவிதை எல்லாவற்றையும் முந்திக்கொண்டு வரும். அதுதான் அதன் இயல்பும் கூட. யார் தடுத்தாலும் வெளிப்படத்தான் செய்யும் கவிதை. அதுதான் அதன் வரலாறும் கூட. இந்தக் கவிதைகளை கன்னுங்கருத்துமாகக் கடத்திச் செல்லுங்கள். துயரங்களை மட்டுமல்ல போராட்டங்களையும் சொல்லக்கூடியது. வலிகளை மட்டுமல்ல கனவுகளையும் காட்டக்கூடியது.

என்னை விட்டுவிடுங்கள். கவிதையைப் பற்றிக்கொள்ளுங்கள். பாலஸ்தீனத்தைப் பாருங்கள் என்று கைகாட்டிச் செல்லும் ஒரு வழிப்போக்கன் நான். பாலஸ்தீனத்தின் துயரங்களை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கும் கிழவன் நான். உங்களுடைய எதிர்காலத்திற்காகத்தான் உங்களைப் பேசச் சொல்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்காகத்தான் உங்களைப் போராடச் சொல்கிறேன்.

கவிதை என்ற பெயரில் உங்கள் கைகளில் இருப்பது வெறும் காகிதமென்று நினைத்து விடாதீர்கள். மக்களுக்கு எதிரான இராணுவத் தளவாடங்களை மண்ணோடு புதைக்கக்கூடியது. மக்களுக்கு எதிரான திட்டங்களை உருவாக்கும் மாளிகைகளையும், அரண்மனைகளையும் வேரோடு வெட்டிச் சாய்க்கக்கூடியது. வார்த்தைகள்தான் இந்த உலகத்தை புரட்டிப்போட்டிருக்கின்றன என்பதை இந்த நேரத்தில் கர்வத்தோடு உங்களிடம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். நம்புங்கள். எல்லாமும் நடக்கும்.

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

மைத்திரிஅன்பு 28/02/2024 - 1:41 PM

வணக்கம் தோழர். ’காத்திருக்கும் சாவிகள்’ இப்பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகளில் பெரும்பான்மை நான் உடனுக்குடன் தங்களின் இணையப் பக்கங்களில் இருந்து வாசித்திருப்பேன் என நம்புகிறேன். மனித சமூகத்திற்கு எதிராக எழும் அதிகாரப் போராட்டங்களுக்கு எழுத்தின் வழியே போர் தொடுக்கும் உங்களின் ஆற்றல் அவசியமானது. நிச்சயம் இந்நூல் வாசகர்களைச் சென்றடைந்து புரட்சி பூக்களை மலரச் செய்யக் காத்திருக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். நானும் எனக்கு வாய்ப்பும் சூழலும் அமையும் நேரம் இந்நூலையும் பெற்றுகொள்ள விரும்புகிறேன்.

Reply

Leave a Comment