அசோக் நகர் பள்ளி விவகாரம் இரண்டு நாட்களாக நம் மாநிலத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசை நோக்கிய கண்டனங்கள், அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கல்வித்துறையை நோக்கிய கண்டனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியர் சங்கருக்கு பாராட்டுக்களும் கூட குவிந்து கொண்டிருக்கின்றன. என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறிவாளிகளுக்கு மத்தியில், என் மாணவர்களின் செவிகளுக்கு நஞ்சை அனுமதிக்கமாட்டேன் என்ற அந்த ஆசிரியரின் அறச்சீற்றம் ஆறுதல் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது.
ஆனால் மேடையில் நின்றிருந்த அந்த அற்பப் புழுவின் அகங்காரம் உண்மையிலேயே ஆத்திரத்தைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது. பொய்யில் ஊறிப்போன அல்லது பொய்யை உண்மையாக நம்பிக் கொண்டிருக்கிற ஒரு முட்டாளுக்கே உரிய வெறுக்கத்தக்க அந்த உடல்மொழி கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டியது. சங்கர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். அவருக்கில்லாத உரிமை யாருக்கு இருக்கிறது. எதையோ தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்ததுபோல பாவனைசெய்துகொண்டு வரைமுறை தெரியாமல் நடந்துகொண்ட அந்தத் தம்பிக்கு, ஒரு கலைஞனாக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஷத்தை விரும்பியழைத்த பள்ளிக்கல்வித்துறைக்கும் கண்டனத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் தோழர்களே! ஒரு அரசுப்பள்ளியில் நடந்த நிகழ்வு. காணொளியின் வாயிலாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நாமும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அரசுப்பள்ளிகளைத் தாண்டி, தமிழ்நாட்டில் இருக்கும் எண்ணிலடங்கா தனியார்ப்பள்ளிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நேரத்தை அதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சங்கரைப்போன்று எத்தனையோ ஆசிரியர்கள் ஏன் கல்லூரிகளில் வேலைசெய்யக்கூடிய எத்தனையோ பேராசிரியர்கள் உட்பட தங்கள் அறிவைப் புறந்தள்ளிவிட்டு, தங்கள் இதயத்தை மூடிவைத்துவிட்டு கல்வி முதலாளிகள் செய்து கொண்டிருக்கும் அத்தனை முட்டாள்தனங்களையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கும், இவர்களைப்போன்று மாறுவேடத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் நச்சுக் கிருமிகளுக்கும் தனியார் பள்ளிகளிலும், தனியார்க் கல்லூரிகளிலும் எந்தத் தடையும் எப்போதும் இருப்பது கிடையாது. சுதந்திரமாக மிகச்சுதந்திரமாக மாணவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக மிகக் கவனமாக அந்தப் பிஞ்சு இதயங்களுக்குள் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக்கேட்டால் பொதுச்சமூகம் கிளர்ந்தெழுந்து கேள்விகேட்க வேண்டிய விஷயம் இது. ஆனால் பாவம் பாதிப்பேர் திரையரங்க வாசல்களில் நுழைவுச்சீட்டுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். மீதிப்பேர் டாஸ்மாக் கடைவாசல்களில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் பரவாயில்லை எஞ்சியவர்கள் எதிர்த்து நிற்போம். மாணவர்கள் காக்கப்பட வேண்டும். மாணவர்களைக் காக்க நினைக்கின்ற சங்கரைப்போன்ற ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டும். அப்போதுதான் அப்போதுதான் இன்னும் நிறைய சங்கர்கள் மெளனம் கலைப்பார்கள். இன்னும் நிறைய சங்கர்கள் நிமிர்ந்து நிற்பார்கள். வாழ்த்துகள் தோழனே!
சங்கரைப் போன்று ஆரம்பப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த சோவியத் யூனியனின் அற்புதமான சிந்தனையாளர் அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலி குழந்தைகளுக்காக “குழந்தைகள் வாழ்க“ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். முக்கியமான அந்தப் புத்தகத்தில் மிக முக்கியாமான ஒரு வாக்கியம் உண்டு. “பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கானது, அதைப்பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. யாருக்கும்“ என்ற அமனஷ்வீலியின் வார்த்தைகளை இந்நேரம் உரக்கச் சொல்லவே விரும்புகிறேன்.
“பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கானது, அதைப்பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. யாருக்கும்“
ஜோசப் ராஜா
1 comment
தோழர் வணக்கம்.
சோவியத் பாட்டாளி வர்க்க சோசலிச அரசு, பழைய நிலவுடைமை/முதலாளித்துவ பிற்போக்கு மத பாடத்திட்டத்தைத் தூக்கியெறிந்தது.அவ்விடத்தில் புதிய அறிவியல் முறையில் பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தது. அத்தகைய, நிலைமையை இங்கே,முழுமையாக கொண்டு வரவேண்டும்.
தங்களின் அறச்சீற்றம் நியாயமானது.